வக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை


கட்டுரை ஆக்கம் நன்றி : நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி

 

Wakf Act

[முஸ்லிம் சட்டம் என்பது இறைவனால் அருளப்பெற்ற விதிகளைக் கொண்டதாகும்எல்லாம் அறிந்த இறைவன் ஒரு சட்டத்தைத் தருகிறான் என்றால்அதில் நிச்சயம் நமக்கு நன்மையே இருக்கும்தகுந்த காரணமும் இருக்கவே செய்யும்மனித மூளைக்குச் சில விஷயங்கள் எட்டவில்லை என்பதற்காக இறைச்சட்டங்களை நிராகரித்தல் கூடாதுஇறைச்சட்டத்தை மாற்றவோதிருத்தவோ,சேர்க்கவோ,குறைக்கவோ மனிதனுக்கு அதிகாரம் கிடையாது.]

 

 

 

 

 

===============================

வக்ஃபு சட்டங்கள்-ஒரு பார்வை-1

===============================

 

 

அறச் செயல்களான தர்மங்களில் பலவகை உண்டு. மனிதன், தன் குடும்பத்திற்காகவும், உறவினர்களுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும் இன்னோரன்ன பல காரணங்களுக்காகவும் பல்வேறு வகைகளில் தர்மம் செய்கிறான். நன்மையையும், இறைவனின் அன்பையும் பெறுவதற்காக தர்மக் காரியங்களில் மனிதன் ஈடுபட்டாலும், அவற்றின் மதிப்பும் தரமும் உயர்ந்து விடுகிறது.

 

ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்துக்களை இறைவனுக்காக வக்ஃபு என்ற அறம் செய்து விட்ட பிறகு அவரோ, அவருடைய வாரிசுகளோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, உரிமையாளர்களோ இருக்க முடியாது.

 

வக்ஃபு என்றால் என்ன? அதன் பொருள் என்ன என்பதை முதலில் பார்ப்போம். நிறுத்துதல், நிலைநாட்டுதல் என்பன இதன் சொற்பொருளாகும். இறைவன் பெயரால் ஒருவர் தன் சொத்துக்களை அர்ப்பணித்து நிலை நாட்டும் போது அது வக்ஃபு சொத்து என்னும் நிலையை அடைந்து விடுகிறது. கைமாறும் தன்மையுடைய சொத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதை வக்ஃபு என்று இஸ்லாமியச் சட்டம் அடையாளம் காட்டுகிறது. ஒரு சொத்தை வக்ஃபு செய்வதன் மூலம் அந்தச் சொத்தின் உரிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து, அதன் வருமானத்தையும், பலனையும் மக்களின் நலனுக்காக செலவிடுவதே நோக்கமாகும்.

வக்ஃபு என்பதற்கான விளக்கத்தைத் தருகின்ற போது இமாம்களிடையே கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், இமாம் அபூயூசுஃப் (ரஹ்) அவர்களின் கூற்றே பெரும்பாலோரால் ஏற்கப்பட்டு வருகிறது.’வக்ஃபு செய்பவர், வக்ஃபு செய்யும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாலே போதும்’ என்பது இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களின் கருத்தாகும். வக்ஃபு செய்பவர்தன் எண்ணத்தை வெளிப்படுத்திய பிறகு காஜி (நீதிபதி) அதை வக்ஃப் என ஒப்புக் கொண்டு ஆணைப்பிறப்பிக்க வேண்டும் என்றும், வக்ஃப் சொத்தை அர்ப்பணித்த பின்னும் அவரது உரிமை தொடர்கிறது என்றும் கடன் அளித்ததைப் போலவே அந்த தர்மங்கள் இருக்கின்றன என்றும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.

 

வக்ஃப் சொத்தை முத்தவல்லியிடமோ, காப்பாளரிடமோ ஒப்படைத்த பிறகே வக்ஃப் முழுமை பெறும் என்பது இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.

ஆனால், இமாம் அபூயூசுஃப் (ரஹ்) அவர்கள் சமுதாய நலனுக்காகவே வக்ஃப் சொத்து கொடுக்கப்பட்டாலும், அல்லாஹ் மட்டுமே அதற்கு உரிமையாளனாகி விடுகின்றான். எனவே காஜியின் ஆணை தேவையில்லை என்று விளக்கமளிக்கிறார்கள்.

 

காசிமியாசோடீஸ் – Vs – செயலாளர், மெட்ராஸ் ஸ்டேட் வக்ஃபு போர்டு (1964) என்ற வழக்கின் தீர்ப்பில் வக்ஃப் என்பதற்கு முக்கியமான மூன்று விளக்கங்கள் தரப்பட்டன.

 

 

1. வக்ஃப் சொத்தின் அர்ப்பணிப்பு சமய நோக்கு கொண்டதாக இருக்க வேண்டும்; சமய சார்பற்ற நோக்கைக் கொண்ட அன்பளிப்பு அர்ப்பணம், டிரஸ்ட் எனப்படும்

பொறுப்புரிமை அமைப்பு என்றாகுமே தவிர வக்ஃப் ஆக முடியாது.

2. வக்ஃப் நிரந்தரத் தன்மை உடையதாக இருக்க வேண்டும். அப்படி நிரந்தரத்தன்மை இல்லாதவை ஸதகா என்னும் அறச்செயலாக அமையுமே தவிர, இஸ்லாமியச் சட்டப்படி வக்ஃப் என அழைக்க முடியாது.

3. வக்ஃபின்நுகர் உரிமை மனிதநலனுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும்.

 

இந்திய வக்ஃப் சட்டம்

 

இந்தியாவில் வக்ஃப் செல்லுபடியாகும் சட்டம் 1913-ல் இயற்றப்பட்டது. தன் தேவைக்கு அதிகமான சொத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அதை மனித நலனுக்காகப் பயன்படுத்துவது கடமையாகும். இந்த அடிப்படையிலேயே வக்ஃப் மற்றும் டிரஸ்ட் ஆகியவை உருவாகின. ரீஅத் அடையாளம் காட்டுகிற நபி வழி, இறையச்சம், தர்மம் ஆகிய நோக்கங்களுக்காக நிரந்தரத் தன்மையுடன் அல்லாஹ்ளக்காக சொத்தை அர்ப்பணிக்கும் போது அது வக்ஃப் என அழைக்கப்படுகிறது.

டிரஸ்ட் என்பது அப்படியல்ல. சொத்துரிமை ஒருவருக்கு தரப்படுவதோடு, வேறு ஒருவருக்கும் அதை மாற்றம் செய்யலாம்.

 

வக்ஃப் முழுமை பெறுவதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகள் தேவை. 1.நிலையான அர்ப்பணம் 2. வக்ஃபை அறிவித்தல் 3. உயில் மூலம் வக்ஃப் (உயில் வாயிலாக வக்ஃப் செய்தால் சொத்தின் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே வக்ஃப் செய்ய முடியும்) 4. நிரந்தரத் தன்மை உடையது.

 

5. இடம் பெயராச் சொத்து. ஹிதாயா என்னும் சட்டப்புத்தகத்தின் கருத்துப்படி இடம்பெயரும் பொருள்களை வக்ஃப் செய்தல் பொருந்தாது. எனினும் ஹிதாயாவின் காலத்துக்கு முன்பிருந்தே இத்தகைய பொருள்களை வக்ஃப் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

 

வக்ஃபின் வகைகள்

 

வக்ஃப் அளிப்பவருக்கு வாகிஃப் என்று பெயர். பொது வக்ஃப், தனி வக்ஃப் என இருவகைப்படும். எனினும், பொது வக்ஃப், பாதி பொது, தனி வக்ஃப் என மூன்று வகையான பிரிவுகள் அதிகமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

 

பாலம், கிணறு, சாலை போன்ற தர்மங்களை அர்ப்பணிக்கும் போது அவை பொது வக்ஃப் ஆகிவிடும். குடும்ப நலனுக்காகப் பாதியும், பொது நலனுக்காகப் பாதியும் அர்ப்பணிக்கப்படும் போது பாதி பொது வக்ஃப் ஆகும். வக்ஃப் அளிப்பவரின் குடும்ப நலனுக்கும், உறவினருக்கும் மட்டுமே நன்மை அளிப்பது தனி வக்ஃப் ஆகும். இதனை ‘வக்ஃபுன் அலல் அவ்லாத்’ என்பர். ஒரு முஸ்லிம் வக்ஃப் ஏற்படுத்தி, அதன் பயனை உற்றார் உறவினர் நலனுக்கு உடனடியாகத் தந்து, அவர்கள் காலத்துக்குப் பிறகு மார்க்கம் அனுமதிக்கும் அறச் செயல்களுக்குப் பயன்படுத்துமாறு அறிவிப்பதே ‘வக்ஃபுன் அலல் அவ்லாத்’ ஆகும்.இஸ்லாமியச் சட்டப்படி, ஏழை எளிய குடும்பத்தார்க்கு வக்ஃப் சொத்தின் வருமானங்களைக் கொடுத்து குடும்பத்தார்க்ள இல்லாது போனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தாலும் அந்த வக்ஃப் செல்லும். ஆனால் மேற்கத்திய தத்துவப்படி குடும்பத்தினருக்கு கொடுப்பது தர்மமாகாது. இந்தத் தத்துவம் இந்திய நீதிமன்றங்கள் சில வழக்குகளில் வழங்கிய தீர்ப்பில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கதாகும்.அப்துல் பத்தாஹ் Vவி ரசமையா (1894)’ என்ற வழக்கில், வக்ஃப் சொத்தின் வருமானம் குடும்பத்திற்கு என்றும், அவர்களுக்குப் பிறகு சந்ததிகள் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்றும் ஏற்படுத்தப்பட்ட வக்ஃப் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ரீஅத் சட்டத்திற்கு மாறானதாக இருந்தால் முஸ்லிம் வக்ஃப் சட்டம் இயற்றுமாறு முஸ்லிம்கள் அரசைக் கேட்டுக் கொண்டனர். இதன் விளைவாகவே 1913ல் முஸ்லிம் வக்ஃப் சட்டம் ஏற்பட்டது.

 

இந்தச் சட்டத்தின்படி குடும்பத்தின் நலனை முற்படுத்தி ஏற்படுத்தப்படும் வக்ஃப் செல்லும் என்றானது. வக்ஃப் செய்தவர் தன் வாழ்க்கை முழுவதும் தன்னுடைய பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் நிபந்தனையிட்டிருந்தாலும், வாழ்நாளில் பட்ட கடனைத் தீர்க்க வகை செய்திருந்தாலும் வக்ஃப் செல்லும் என்பது ஹனபி மத்ஹபுச் சட்டமாகும். அசையும் சொத்து, அசையாச் சொத்து, பணம் ஆகியவற்றை வக்ஃப் செய்தாலும் ரீஅத் சட்ட வரம்புக்கு உட்பட்டிருப்பின் செல்லும்.

1913ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் ரத்துக்கள் அந்த ஆண்டுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட குடும்ப வக்ஃப்களை மட்டுமே செல்லுபடியாக்கியது. அதற்கு முந்தைய வக்ஃப் களை அல்ல என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்தன. பின்னர் 1933-ல் முஸ்லிம் வக்ஃப் சட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1913க்கு முந்தைய வக்ஃபுகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.  (இன்ஷா அல்லாஹ் மேலும் வரும்)

 

 

====================================

வக்ஃபுசட்டங்கள்-ஒரு பார்வை-2

 ====================================

 

 

வக்ஃப் சொத்துக்களைச் சரியான முறையில் பராமரிக்காமலும், நிர்வாகம் செய்யாமலும் விட்டு விடும் போது அவை வீணாகிப் போகின்றன. எந்த உயரிய நோக்கத்திற்காக, பொது நன்மைக்காக வக்ஃப்கள் ஏற்படுத்தப்பட்டனவோ அந்த நோக்கங்களை எட்ட முடியாமல் போய்விடும். எனவே, வக்ஃபை பராமரிக்கும் பொறுப்பினை ஏற்கும் முத்தவல்லிகள் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.

 

முத்தவல்லி நியமனம் குறித்த வழிமுறைகள்

 

முத்தவல்லி நியமனம் குறித்த வழிமுறைகள் தெளிவாக உள்ளன. 1. வக்ஃப் செய்த வாகிஃபே முத்தவல்லியை நியமனம் செய்யலாம். 2.வாகிஃப் முத்தவல்லியை நியமிக்காது போனால், வக்ஃபை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்ற வஸிய்யு முத்தவல்லியை நியமிக்கலாம். 3. வாகிஃபும், வஸிய்யும் வக்ஃப் பத்திரத்தில் முத்தவல்லி பற்றி ஒன்றும் குறிப்பிடாத சமயத்தில் ஏற்கெனவே முத்தவல்லியாக இருந்து வருவர் தமக்குப் பிறகு முத்தவல்லியை நியமிக்கலாம். 4. முத்தவல்லி பதவி காலியாக இருந்து, யாரை நியமிப்பது என்பதில் முடிவு ஏற்படாத நிலை இருப்பின், மாவட்ட நீதிபதி இதற்காக முயற்சி எடுக்கலாம். உரிமையியல் நடைமுறைச்சட்டம் 92-வது பிரிவின் கீழ் மாவட்ட நீதிபதி முத்தவல்லியை நியமிக்கவோ, நீக்கவோ வழக்குப் போடலாம்.

 

1954 வக்ஃப் சட்டம் 36-வது பிரிவின்படி முத்தவல்லியின் கடமைகள் பின்வருமாறு, 1. வக்ஃப் வாரியத்தின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். 2.வக்ஃப் வாரியம் கேட்கும் தகவல்கள், குறிப்புகளை தயாரித்துக் கொடுக்க வேண்டும். 3.வக்ஃப் சொத்துக்களின் கணக்குகள், பதிவுகள் பத்திரங்கள் முதலியவற்றை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். 4. செலுத்த வேண்டிய பாக்கித் தொகைகளை தீர்க்க வேண்டும். 5. வக்ஃப் வாரியம் குறிப்பிடுகின்ற இதர கடமைகளை சட்டப்படி நிறைவேற்ற வேண்டும்.

 

வக்ஃப் வாரியம்

 

முத்தவல்லிகள் பொறுப்புடன் செயலாற்றுவதற்காக 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் ரத்துகளுக்கு உட்பட்டே வக்ஃப் வாரியமும், முத்தவல்லிகளும் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க வேண்டும். வக்ஃப் வாரியத்திற்கு எதிராக ஏதேனும் வழக்குகள் தொடர வேண்டுமானால் எழுத்துபூர்வமாக வாரியத்தின் அனுமதி பெற்று, வழக்கு தொடர்வது பற்றி அறிவிப்பு கொடுத்து, இரண்டு மாதங்கள் கழிந்த பிறகே வழக்கு தொடர முடியும்.

தமிழ்நாடு 11 உறுப்பினர்கள் கொண்ட வக்ஃப் வாரியம் 1958-ம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்டது. 1966-ல் அது கலைக்கப்பட்ட பின் 1971-ல் அடுத்த வக்ஃப் வாரியம் நிறுவப்பட்டது. மூன்றாவதாக 1984-ல் வக்ஃப் வாரியம் ஏற்பட்டது. ஆட்சி மாறும் போதெல்லாம் வக்ஃப் வாரியம் கலைக்கப்படுவதும், புதிய உறுப்பினர்களைக் கொண்ட வாரியம் நியமிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.1984ம் ஆண்டு திருத்தப்பட்ட வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. எனினும், எல்லா மாநிலங்களிலும் அது அமலுக்கு வரவில்லை. ஆதலால் அதற்கு முன்பிருந்த 1954ம் ஆண்டு சட்டமே இப்போதும் அமலில் இருக்கிறது. மத்திய வக்ஃப் கவுன்சிலுக்கு 20 உறுப்பினர்கள் இருப்பார்கள். 1954 -ம் ஆண்டு வக்ஃப் சட்டம் 43வது பிரிவின்படி முத்தவல்லிகளை நீக்கும் அதிகாரம் வக்ஃப் வாரியத்துக்கு உண்டு. கீழ்கண்ட காரணங்களுக்காக முத்தவல்லியை வாரியம் நீக்கலாம்.

 

1. முத்தவல்லி வக்ஃப் வாரியத்தால் ஒரு தடவைக்கு மேல் தண்டிக்கப்பட்டிருத்தல் 2. குற்றவியல் சட்டப்படி நம்பிக்கை மோசடி அல்லது ஒழுக்கக் கேடு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருத்தல் 3. வக்ஃப் சொத்துக்களை கையாடல் செய்தல் அல்லது முறையற்ற வகையில் பயன்படுத்தல் 4. முத்தவல்லி பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத அளவுக்கு மனநிலை, அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டிருத்தல்.

 

வக்ஃப் வாரியம் முத்தவல்லியாக நியமித்த குழு, அல்லது நபர் அல்லது அதிகாரி தம் கடமையை நிறைவேற்றத் தவறினாலோ, முறைகேடாக நடந்து கொண்டாலோ, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாலோ அத்தகையவரை நீக்கிவிட்டு, புதிதாக முத்தவல்லியை வாரியம் நியமிக்கலாம்.

 

அப்படி ஒரு முத்தவல்லியை நீக்கும் போது, அவர் அந்த வக்ஃப் சொத்திலிருந்து பயன்பெறும் உரிமை படைத்தவராக இருந்தாலோ, வேறு எந்தத் தகுதிக்கும் அவர் உரியவராக இருந்தாலோ அந்தத் தனிப்பட்ட உரிமைகளை, பதவி நீக்கத்தின் காரணத்தினால் ரத்து செய்ய முடியாது. மேலும், வக்ஃப் சட்டம் 43(1), (2) ஆகிய பிரிவுகளின் கீழ் சுமத்தப்படும் குற்றங்களைச் சரியான முறையில் விசாரிக்காமலோ, வக்ஃப் வாரிய உறுப்பினர்களில் முக்கால் பங்கு உறுப்பினர்களின் முடிவு இல்லாமலோ ஒரு முத்தவல்லி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. 4(ஏ) பிரிவு வக்ஃப் வாரிய ஆணையினால் பாதிக்கப்பட்ட ஒரு முத்தவல்லி அந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட ஒரு மாதத்திற்குள் அதை ஆட்சேபித்து மாநில அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம். இதன்பேரில் மாநில அரசு அளிக்கும் தீர்ப்பே இறுதியானதாகக் கருதப்படும். எந்த நீதிமன்றத்திலும் அதை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது. வக்ஃப் வாரியத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு முத்தவல்லி அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை முத்தவல்லி ஆக முடியாது.

 

வக்ஃப் அசையா சொத்து

 

வக்ஃப் சட்டம் 36(ஏ,1) பிரிவின்படி வக்ஃப் வாரியத்தின் முன் அனுமதி பெறாமல் அசையா சொத்துக்களை விற்பனை செய்தாலோ, அன்பளிப்பாக வழங்கினாலோ, அடமானம் வைத்தாலோ, பரிமாற்றம் செய்தாலோ, விவசாய நிலங்களாக இருப்பின் மூன்றாண்டுகளுக்கு மேலும், விவசாயம் செய்யாத நிலம் மற்றும் கட்டடமாக இருப்பின் ஓராண்டுக்கு மேலும் குத்தகை, அல்லது வாடகைக்கு விட்டாலோ செல்லாது.

அனுமதியில்லாமல் விற்கப்பட்டது விசாரணையில் முடிவானால், அந்த அசையா சொத்துக்களை வசப்படுத்தி ஒப்படைக்குமாறு அந்த மாவட்ட ஆட்சியாளருக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கப்படும். இந்த வேண்டுகோள் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் ஓர் ஆணை பிறப்பித்து, அந்த ஆணை கிடைத்த 30 நாட்களுக்குள் அந்த சொத்தை வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிப்பார்.

 

====================================

வக்ஃபு சட்டங்கள்-ஒரு பார்வை-3

====================================

 

தண்டத்தொகை பிரிவு (41-(1)

 

அ) ஒரு முத்தவல்லி வக்ஃப் சொத்துக்களைப் பதிவு செய்ய விண்ணப்பிக்காமல் இருந்தாலோ, ஆ) வக்ஃப் சட்டத்தில் கோரப்படுகிறவாறு விபர அறிக்கைகள், விபரங்கள், கணக்குகள் ஆகியவற்றை அளிக்கத் தவறினாலோ, இ)வக்ஃபு வாரியம் வேண்டுகின்ற செய்திகளை, குறிப்புகளை அனுப்பத் தவறினாலோ, ஈ) வக்ஃப் சொத்துக்களின் கணக்குகள், பதிவுகள், பத்திரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய அனுமதிக்காமல் இருந்தாலோ, உ) வக்ஃப் வாரியத்தின் ஆணையின்படி வக்ஃப் சொத்தை ஒப்படைக்காமல் இருந்தாலோ, ஊ) வக்ஃப் வாரியத்தின் கட்டளைகளை நிறைவேற்றத் தவறினாலோ, எ) பொதுக்கடன் பாக்கிகளை செலுத்தாதிருந்தாலோ, ஏ) வக்ஃப் வாரியத்திற்குத் தேவைப்படுகிற எதனையும் சட்டப்படி நிறைவேற்றத் தவறினாலோ ரூ.10000 வரை அவருக்கு அபராதம் விதிக்கலாம்.

 

41(2) – வக்ஃப் வாரியத்தின் அதிகாரம் பெற்ற ஓர் அலுவலர் கொடுக்கும் புகார்களின் அடிப்படையிலேயே வழக்கு மன்றம் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும். 3. மாவட்ட குற்றவியல் நீதிபதி, அல்லது முதல் வகுப்பு நீதிபதிக்குக் குறையாத அந்தஸ்து உடையவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தில் தவறு செய்பவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டிக்க முடியும்.

 

பீபி சித்திக் பாத்திமா -ஸவி- சையித் முஹம்மது ஹஸன் 1978 புஸிஸி.ஸி.மூ.634 (றீளீ) என்ற உச்சநீதிமன்ற வழக்கில் வக்ஃப் சொத்துக்களுடைய வருமானத்தை ஒரு முத்தவல்லி தன் மனைவி பெயரில் மாற்றினால் நம்பிக்கை முறிவு ஏற்படுவதுடன், அப்படி மனைவி பெயரில் மாற்றப்பட்ட சொத்துக்களும் வக்ஃப் சொத்தாகவே கருதப்படும் என்று நீதிபதிகளான ஆர்.எஸ்.சர்க்காரியா, என்.எல்.உண்டுவாலியா, பி.எஸ்.கைலாசம் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

 

முஹம்மது யூசுப் – ஸவி – முஹம்மது சாதிக் (1993) 14 யிழிழ 431/144/1.உ.273 (33) பு/ணூ.501 என்ற வழக்கில், வக்ஃப் பத்திரத்தில் வக்ஃப் சொத்தை விற்று தொகையை புனித மக்காவில் ஓய்வில்லம் கட்டுவதற்கும், அதனைப் பராமரிப்பதற்கும் முத்தவல்லிக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது. வக்ஃப் பத்திரத்தில் கண்டிருக்கிற கட்டளைகளை நிறைவேற்றினால் அது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 

வக்ஃப் செய்தவர், வக்ஃப் சொத்துக்களைப் பராமரிக்கும் முத்தவல்லி ஊதியம் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தால், வக்ஃப் சொத்துக்களின் பராமரிப்பு தேவை போக மீதமுள்ளதிலிருந்து தான் ஊதியம் பெற முடியும். வக்ஃப் பத்திரத்தில் முத்தவல்லியின் ஊதியத்திற்கான ஒதுக்கீடு இல்லாவிட்டால் நீதிமன்றம் பத்தில் ஒரு பங்குக்கு மிகாமல் ஒரு தொகையை நிர்ணயம் செய்யலாம். வக்ஃப் செய்தவர் முத்தவல்லி பெறக்கூடிய ஊதியத் தொகையை மிகக் குறைவாகக் குறிப்பிட்டிருந்தால், நீதிமன்றம் அவருடைய ஊதியத்தை பத்தில் ஒரு பங்குக்கு மிகாமல் அதிகமாக்கிக் கொள்ளலாம். இவை உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் இருந்து தெரிய வருகின்றன.

 

பெண்களை முத்தவல்லியாக நியமிக்க முடியாது. பள்ளிவாசல், தைக்கா, கான்காஹ், தர்கா போன்ற வக்ஃப் ஸ்தாபனங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. பொறுப்புரிமை அமைப்பு என்கிற டிரஸ்டுகளில் நிர்வாகத் தொடர்பாக இயற்றப்பட்டுள்ள சட்ட ரத்துகள் வக்ஃப்களுக்கும் பொருந்தும்.

 

வக்ஃப் சொத்துகள் அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்கப் பெற்ற பொதுச் சொத்துகளாகும். அவற்றை நேர்மையோடும், நாணயத்தோடும் பராமரித்தல் அவசியமாகும். சுயநலத்திற்காகவோ, சொந்த பந்துக்களுக்காக அவற்றைப் பயன்படுத்துதல் கூடாது. இத்தகைய பொதுச் சொத்துக்களில் ஒரு பைசாவைக் கூட துஷ்பிரயோகம் செய்தால், கையாடல் செய்தால் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிடலாகாது.

ரிஅத் சட்டங்களை நன்கு அறிந்தவர்களான மார்க்க அறிஞர்கள், இறையச்சமும் மார்கக்ப் பற்றுதலும் உள்ள வழக்குரைஞர்கள், பொது நலத் தொண்டர்கள் ஆகியோரை வக்ஃப் வாரிய அங்கத்தினர்களாக நியமித்தால் மைய அரசின் வக்ஃப் மன்றமும், மாநில அரசுகளின் வக்ஃப் வாரியங்களும் சிறப்பாக செயல்படும் நிலை உருவாகும்.

 

பாகப்பிரிவினைச் சட்டம் ஓர் ஒப்புநோக்கு கி.பி.1500-வது ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் பெண்களைத் தண்டிக்கவென்றே ஒரு தனிசபை உருவாக்கப்பட்டதாம். கி.பி.1871ம் ஆண்டில் தான் அந்த நாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. அங்கே 1938-ம் ஆண்டு வரை ஒருவர் உயில் மூலமாக தன் சொத்துகள் முழுவதையும் எவருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் என்ற அனுமதி இருந்தது. பின்னர் தான் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வேண்டிய ஏற்பாடு செய்த பிறகே உயில் எழுதலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

 

கிறிஸ்தவர்களான மேலை நாட்டவரின் நிலை இப்படி என்றால், இந்தியாவில் இந்துப் பெண்களின் நிலை மிகவும் பரிதாபமானதாகும். 1937-ம் ஆண்டில்தான் இந்துக் கூட்டுக் குடும்பத்தில் முதன் முதலாக கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு, கணவனின் சொத்தை அனுபவிக்கும் உரிமை தரப்பட்டது. 1956-ல் இந்து மரபுரிமைச் சட்டம் இயற்றப்பட்டு, பெண்களுக்கு அனுபவிக்கும் முழுமையான உரிமை அளிக்கப்பட்டது. 1975-ல் இயற்றப்பட்ட சட்டத்திற்கு பிறகே ஒருவர் இறந்தால் அவருடைய சொத்தில் மனைவிக்கும் உரிமை உண்டு என்ற நிலை உருவானது.இதையடுத்து தமிழக அரசும், மத்திய அரசும் இச்சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்தன. 1991 -ம் ஆண்டில் ஆண், பெண் வேறுபாடு இல்லாது பெண்களுக்குச் சமஉரிமையும் சொத்தில் பங்கும் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தது. இந்து மரபுரிமைச்சட்டம் புத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் முதலானோருக்கும் பொருந்தும். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்சிகள் ஆகியோருக்குத் தனியான சொத்துரிமைச் சட்டம் உண்டு.

 

இஸ்லாத்திற்கு முன் அரபுகளிடையே நிலைமை வேறுவிதமாக இருந்தது. ஒருவர் இறந்து போனால், அவருடைய வாரிசுகளாகக் குடும்ப அங்கத்தினர்களோ, உறவினர்களோ ஆக முடியாது. போர்க்களங்களில் அவருடன் பங்கு பெறுபவர்களே அவருடைய வாரிசுகளாகக் கருதப்பட்டு வந்தனர். பெண்களும், சிறுவர்களும் ஆயுதம் ஏந்தி போர்க்களம் செல்ல முடியாது என்பதால் அவர்கள் தகுதி இல்லாதவர்களாக கருதப்பட்டனர்.

 

இமாம் ஸயீத் பின் ஜூபைர் மற்றும் கதாதா (ரஹ்) அறிவித்துள்ளார்கள். அன்று இணை வைப்போர் வயது வந்த ஆண்களுக்கு மட்டுமே சொத்தில் பங்கு கொடுத்து வந்தனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒன்றும் தருவதில்லை. இந்நிலையில் தான் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

 

(மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. மேலும், தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அச்சொத்துக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே, இது அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்ட பங்காகும். (4:7) நபித் தோழர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஸஅத்பின் ரபீஉ என்ற நபித் தோழருடைய துணைவியார், ஸஅத் மூலம் தமக்குப் பிறந்த இரு பெண்மக்களை அழைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே, இவ்விரு பெண் குழந்தைகளும் ஸஅதின் மக்கள். அவரோ உஹூதுப் போரில் தங்களுடன் கொல்லப்பட்டு விட்டார். இவர்களுக்கென எதையும் வைக்க வில்லை. இவர்களை (வளர்த்து) திருமணம் செய்து கொடுக்க வேண்டுமானால் பணமில்லாமல் முடியாது’ என்று தெரிவித்தார். அதற்கு நபியவர்கள் இது தொடர்பாக அல்லாஹ் (நல்லதொரு) தீர்ப்பை வழங்குவான்’ என்று கூறினார்கள். பின்னர் பாகப்பிரிவினை வசனம் இறங்கியது. உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஅதின் சகோதரருக்கு ஆளனுப்பி அழைத்து வரச் செய்தார்கள். வந்த அவரிடம் ஸஅதின் இரு பெண் மக்களுக்கும் மொத்த சொத்தில் மூன்றில் இரு பாகங்களும், இவர்களின் தாய்க்கு எட்டில் ஒரு பாகமும் கொடுத்துவிட்டு, மீதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்கள். (திர்மதி, அஹ்மது, அபூதாவூது, இப்னுமாஜா) ஆக, ஒரு முஸ்லிம், தான் உயிருடன் இருக்கும் போது சுயமாகப் பொருளீட்டிச் சேர்த்த சொத்துக்களையும், தந்தை மூலம் கிடைத்த சொத்துக்களையும் தன் விருப்பம் போல் (அனுமதிக்கப்பட்ட வழிகளில் அனுபவிக்கலாம்; அடைமானம் வைக்கலாம்; விற்கலாம் அன்பளிக்கலாம்; முழுச்சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தில் மிகாமல் வாரிசுகள் அல்லாத எவருக்கும் வசிய்யத் (உயில்) செய்யலாம். அவர் இறக்கும் பொழுது விட்டுச் செல்லும் சொத்துக்களை, அல்லாஹ் அறிவித்துள்ள பாகப்பிரிவினைச் சட்டப்படி பிரித்து வழங்கிடல் வேண்டும். இது அவருடைய மூதாதையர் சொத்து, சுயமாகச் சேர்த்த சொத்து, கூட்டுக் குடும்பச் சொத்து, அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகிய அனைத்து வகைச் சொத்துக்களுக்கும் பொருந்தும். இதில் வேற்றுமையயல்லாம் முஸ்லிம் சட்டத்தில் இல்லை. இதேபோல வாரிசு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அனைவருக்கும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விழுக்காடுப்படி பங்களித்தல் வேண்டும்.

 

விதிமுறைகள் :

 

இறந்துவிட்ட ஒரு முஸ்லிமின் சொத்துக்களை வாரிசுகள் பாகப்பிரிவினை செய்து கொள்ள வேண்டுமானால், அதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறை விதிகள் உண்டு. இறந்து போனவரின் அடக்கச் செலவுகளையும், அவர் மீதுள்ள கடன்களையும், மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் அவர் செய்து விட்டுச் சென்ற மரணசாசனத்தையும் நிறைவேற்றிய பிறகே, மீதியுள்ள சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்து கொள்ள வேண்டும்.

 

இஸ்லாமிய மரபுரிமைச் சட்டத்தில் இரண்டு தலைப்புகள் காணப்படும். முதலாவது கணவன் அல்லது மனைவியும், பெண்களும், உறவு வழியினரும் சொத்துரிமை பெற அங்கீகாரம் பெறுகிறார்கள். இரண்டாவது பெற்றோரும் ஏறுமுறை மூதாதையரும், ஆண்களின் வழித் தோன்றல்களும் சொத்துரிமை பெற தகுதி பெறுவார்கள். ஆக, ஆண்களைப் போலவே பெண்களும் சொத்துரிமை பெற உலகத்திலேயே முதன் முதலாக வழிவகுத்த மார்க்கம் இஸ்லாம் தான் என்ற பேருண்மை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

 

முஸ்லிம் பாகப்பிரிவினைச் சட்டத்தில் ஆண்களுக்கு வழங்கப்படும் பங்கில் பாதி பெண்களுக்கு வழங்கப்படும். இதற்குக் காரணம், பிறந்த வீட்டில் பெற்றோர் பராமரிப்பிலும், புகுந்த வீட்டில் கணவனின் பராமரிப்பிலும் வாழும் பெண்ணுக்குப் பொருளாதாரத் தேவைகளும் பொறுப்புகளும் மிகக் குறைவு. ஆனால், ஆண்களோ குடும்ப நிர்வாகத்தை முழுவதுமாக ஏற்க வேண்டியவர்களாக உள்ளனர். ஆண்களின் பொருளாதாரத் தேவையை முன்னிட்டு இரு பெண்களின் பங்கு ஓர் ஆணுக்கு என நிர்ணயித்திருப்பது மிகவும் பொருத்தமேயாகும்.

 

இன்றைய இந்தியாவில் பெண்களின் உரிமைப் போராட்டம் காரணமாக இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் மாற்றம் செய்து, பெண்களுக்குச் சமபங்கு அளித்திருக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் இந்த மாற்றம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றே கூற வேண்டும். இச்சட்டத்தினால் குழப்பமே எஞ்சுகிறது.

 

எடுத்துக்காட்டாக, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் திருத்தப்பட்ட ரத்துப்படி, மகனுக்கும் மகளுக்கும் சம பங்கு தர வேண்டும். ஆனால், ஒரு பெண் தாய், சகோதரி, மனைவி, பேத்தி, பாட்டி என்ற உறவுகளில் இறந்தவருக்கு இருந்தால் அவர்களுக்கு எத்தனை பங்கு அளிக்க வேண்டும் என்பதற்கு எந்தக்குறிப்பும் காணப்படவில்லை. அதே நேரத்தில் இஸ்லாமியப் பாகப்பிரிவினைச் சட்டத்தில் இவற்றுக்கெல்லாம் துல்லியமான கணக்கு உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.

 

முஸ்லிம் சட்டம் என்பது இறைவனால் அருளப்பெற்ற விதிகளைக் கொண்டதாகும். எல்லாம் அறிந்த இறைவன் ஒரு சட்டத்தைத் தருகிறான் என்றால், அதில் நிச்சயம் நமக்கு நன்மையே இருக்கும். தகுந்த காரணமும் இருக்கவே செய்யும். மனித மூளைக்குச் சில விஷயங்கள் எட்டவில்லை என்பதற்காக இறைச்சட்டங்களை நிராகரித்தல் கூடாது. இறைச்சட்டத்தை மாற்றவோ, திருத்தவோ,சேர்க்கவோ, குறைக்கவோ மனிதனுக்கு அதிகாரம் கிடையாது.

 

 

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.