கோட்டகுப்பதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீஸ் தடை! கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர்கள் அப்செட்


புதுச்சேரி மாநிலத்தை ஒட்டிய விழுப்புரம் மாவட்டம், சர்வதேச நகரமான ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பம் இ.சி.ஆர்., பகுதியில் தந்திராயன்குப்பம், சின்ன கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம், கீழ்புத்துப்பட்டு, மஞ்சக்குப்பம் ஊர்கள் உள்ளன. இப்பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட விடுதி, கெஸ்ட் ஹவுஸ், ரிசார்ட் மற்றும் நட்சத்திர அந்தஸ்திலான ஓட்டல்கள் உள்ளது.

வரும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதிகளில் உள்ள கெஸ்ட் ஹவுஸ்களில் அறை எடுத்து தங்கி புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம்.

அதனையொட்டி, வரும் 31ம் தேதி இரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்கு கோட்டக்குப்பம் மற்றும் ஆரோவில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரிசார்ட்டுகளில் தங்குவதற்கு முன்பதிவு துவங்கி விட்டது.

இதில் ஒருசில கெஸ்ட் ஹவுஸ்கள், சமூக வலைதளங்களில் ஆடல், பாடல், டி.ஜே., போன்றவைகள் நடைபெறும் எனவும், அதற்கான பேக்கேஜ் தொகையையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், புத்தாண்டையொட்டி கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் தலைமையில் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோட்டக்குப்பத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் டி.எஸ்.பி., சுனில் பேசியதாவது:

புத்தாண்டு தினத்தன்று இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி கெஸ்ட் ஹவுஸ் இயங்கினால் வருவாய்த் துறை மூலம் பூட்டி சீல் வைக்கப்படும்.

அறை எடுத்து தங்குபவர்களின் அடையாள அட்டையை சரி பார்க்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தனியாக வந்தால் அறை கொடுக்கக் கூடாது. இளம் பெண்களுடன் கூட்டமாக வரும் ஆண்களை அனுமதிக்கக் கூடாது.

புதுச்சேரி மாநில மதுபானங்களை அனுமதிக்கக் கூடாது. கடற்கரையில் கூடும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்க வேண்டும். அனைத்து தங்கும் விடுதிகளிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும்.

இவ்வாறு டி.எஸ்.பி., சுனில் பேசினார்.

புத்தாண்டு தினத்தன்று சுற்றுலா பயணிகள் மூலம் சம்பாதித்து விடலாம் என இருந்த கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர்கள் டி.எஸ்.பி.,யின் அதிரடி கட்டுப்பாட்டால் கலக்கத்தில் உள்ளனர்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.