பசுமைப் பூங்காவுக்கு மொட்டை!


புதுவைக்குப் பசுமையை வாரி வழங்கிய வள்ளல் என்று தாவிரவியல் பூங்காவைச் சொல்லலாம். பார்க்கும் இடத்தில் எல்லாம் பசுமை தாண்டவமாடிய அந்தத் தாவரவியல் பூங்காவை, ‘தானே’ புயல் தாக்கவே… அத்தனை மரங் களும் அடியோடு சாய்ந்துவிட்டன. தங்கள் வீட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பைவிட, இந்தப் பூங்காவின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கிறார்கள் புதுவை மக்கள்.

 

‘தானே’ புயலால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாகக் கிடந்த பூங்காவுக்குச் சென்றோம். நுழைவாயிலில் 175 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து கிடந்தது.

 

பூங்காவின் நிலை பற்றிப் பேசிய அதிகாரிகள், ”பிரெஞ்சு ஆட்சியின் கீழ் புதுவை இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தாவரவியல் பூங்காவுக்கு இப்போது வயது 186. பிரான்ஸ் நாட்டு தாவர வியல் நிபுணர் ஜார்ஜ் சாமுவேல் பெரோடெட் என்பவர்தான் இங்கே இருக்கும் பல அபூர்வ மரங்களை நட்டு வைத்தவர். 1834 முதல் 1839 வரை தாவரவியல் நிபுணராக புதுச்சேரியில் அவர் இருந்தார். வெளி நாடுகளில் இருந்து அரிதான விதைகளை எடுத்து வந்து, பக்குவமாக விதைத்து, இந்த இடத்தைத் தாவரவியல் பூங்காவாக உருவாக்கினார். 1960-ம் ஆண்டு இந்தப் பூங்கா புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 30 ஏக்கர் பரப்பளவில் 144 வகையான மரங்கள் ஆயிரக் கணக்கில் இந்த பூங்காவில் இருந்தன. இந்தப் பூங்கா, நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதால், புதுச்சேரி மக்களுக்குச் சுத்தமான பிராணவாயு கொடுத்து வந்தது. நாளுக்கு நாள் வாகனங்கள் பெருக்கம் அதிகம் ஆனாலும், இந்தப் பூங்கா மக்களுக்கு பெரும் ஆறுதலாகவே இருந்தது. விடுமுறை தினம் என்றால் குழந்தைகள் இங்கே குதித்து மகிழ்வதே அத்தனை அழகாக இருக்கும்.

 

இது எல்லாமே போன டிசம்பர் 29-ம் தேதி வரைக்கும்தான். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கடல் இருந்த காரணத்தால் தாவரவியல் பூங்காவுக்கு வரலாறு காணாத சேதம். ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. பல மரங்கள் பாதியாக முறிந்து நிற்க… மீதம் இருந்த மரங்களின் கிளைகளும் சேதமாகி விட்டன. கிளைகள் உடைந்த மரங்கள்கூட மீண்டும் துளிர்த்து வளர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வேரோடு சாய்ந்த மரங்களும் பாதி முறிந்த மரங்களும் மீண்டும் வளர்வதற்கு வாய்ப்புகளே இல்லை. 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே இருந்த நாகலிங்கம், தூங்குமூஞ்சி, சிவன் கூந்தல், மதுரம், மஞ்சள் கொன்றை, அகில், சீம சவுண்டல், தொகு சவானா, நரி மாங்காய் போன்ற அபூர்வ மரங்கள் எல்லாமே விழுந்து விட்டன. மருத்துவக் குணம் கொண்ட தாவரங்கள், செடிகளும் 90 சதவிகிதத்துக்கும் மேல் அழிந்து விட்டன.

 

1964 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் புதுவையைப் புயல் தாக்கி இருக்கிறது. அப்போது எல்லாம் இந்தத் தாவரவியல் பூங்காவுக்கு மிகப்பெரிய சேதம் இல்லை. ஆனால், இப்படி ஒரு புயல் பாதிப்பை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த மரங்கள் இல்லாமல் வரும் கோடையை புதுவை மக்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்றே தெரியவில்லை. இப்போதே வீட்டுக்கு வீடு எல்லோரும் மரம் வளர்க்க வேண்டும். அரசு முழு மூச்சுடன் இந்தப் பூங்காவைச் சீரமைக்க வேண்டும். இல்லை என்றால் புதுவை எந்த ஆண்டும் இல்லாதபடி வெப்ப நகரமாகிவிடும்” என்று சொன்னார்கள்.

 

புதுச்சேரி அரசு என்ன செய்யப் போகிறது என்பது குறித்து விவசாயத் துறை இயக்குநரான சத்தியசீலனிடம் பேசினோம். ”பூங்காவில் ஒரு சில மரங்களைத் தவிர மற்ற மரங்கள் எல்லாமே விழுந்துவிட்டன. விழுந்த மரங்களை வெட்டி எடுக்கவே மூன்று மாதங்கள் ஆகும். ஒரு சில தொண்டு நிறுவனங்கள் எங்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லி இருக்கின்றன. எங்களுக்குத் தேவையான நிதி கிடைத்துவிட்டால், சீரமைப்புப் பணிகளில் இறங்கி விடுவோம். கேரளா, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களில் இருந்து 10 அடி உயரமுள்ள மரங்களை வாங்கி பூங்காவில் நடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். நிதி கிடைத்த உடனே திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கி விடுவோம்” என்றார்.

 

மக்கள் மனது வைத்தால்தான் புதுவையை மீண்டும் பசுமை நகரமாக்க முடியும். வீட்டுக்கு ஒரு மரம் இப்போதே வளரட்டும்.

 

20120121-061820.jpg

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.