எலெக்ஷன் ஓவர் மாப்பு… இனி யாருக்கொல்லாம் ஆப்பு?


எலெக்ஷன் ஓவர் மாப்பு… இனி யாருக்கொல்லாம் ஆப்பு?

பதறும் பிரசார ஸ்டார்கள்

கொள்கைக் கோட்பாடுகளை அடுக்கி, நல்லாட்சிக்கு உத்தரவாதம் தந்து, மக்கள் மனதில் நம்பிக்கை வைட்டமின் ஏற்றி, ஆட்சி அமைக்க முயற்சித்த காலம் மலையேறிவிட்டது. இலவச இனிமா, கவர்ச்சி சினிமா, கவருக்குள் ‘மணி’மா என்ற ஒற்றைக் கொள்கையைச் சகல கட்சிகளும் கடைப்பிடிக்கும் காலம் இது. அதிலும் எந்தப் பொது நல நோக்கும் இல்லாமல், தனிப்பட்ட விரோதம் தீர்க்கும் தனி மனித விமர்சனங்கள் இந்தத் தேர்தலில் அதன் உச்சத்தை எட்டியது.இதில், தேர்தல் சமயம் மட்டும் அரசியல் கால்ஷீட் கொடுத்து, ஆவேசம் காட்டுவது கோடம்பாக்க நட்சத்திரங்களின் பழக்கம். இந்தத் தேர்தலில் அப்படி சபைக்கு வந்து வெளுத்துக் கட்டியவர்களுள்

முக்கியமானவர்கள் விஜய், வடிவேலு, சரத்குமார் மற்றும் குஷ்பு. பிரசார அனல் அடங்கியதும் மீண்டும் இவர்கள் கோடம்பாக்கத்தில்தான் நிலை கொள்ள வேண்டும். ஒருவேளை இவர்கள் சார்ந்த கட்சி, ஆட்சிக் கட்டிலை எட்ட முடியாவிட்டால், இவர்களின் எதிர்காலம் என்ன? ‘எலெக்ஷன் ஓவர் மாப்பு… இனி, யாருக்கெல்லாம் ஆப்பு?’ என்று சோழி உருட்டி, கணிப்பு வேட்டை நடத்திக்கொண்டு இருக்கிறது கோலிவுட். ‘அப்படி என்னதான் நடக்கும்?’ என்று கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தோம்…

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. மீது வெளிப்படையாக வெறுப்பு காட்டினார், அ.தி.மு.க சார்பாக தேர்தலில் போட்டியிடுவார் என்று ஹேஷ்யங்கள், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசா ரம் மேற்கொள்வார் என்று விஜய்யை மையமாக வைத்து, முன் எப்போதைக் காட்டிலும் அதிக அரசியல் அனல். ஆனால், வாக்குப் பதிவு நெருக்கத்தில், ‘இனி, விஜய் அரசியலில் ஈடுபட மாட்டார்!’ என்று அதிரடியாக பேக் அடித்தார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்.

தடாலடியாக, விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலனை அலேக் செய்தது தி.மு.க. ”என்னதான் நடக்குது விஜய்யைச் சுற்றி?” என்று ஜெயசீலனிடம் கேட்டதும்  கொந்தளித்துவிட்டார். ”கடந்த 15 வருஷமா விஜய் ரசிகர் மன்றப் பொறுப்புல இருந்தேன். 3 ஆயிரம் மன்றங்களை இத்தனை வருஷத்துல 40 ஆயிரம் மன்றங் களா ஆக்கி இருக்கோம். கூண்டுக் கிளியா இருந்த விஜய்யை மக்கள் மன்றம் அமைப்பு மூலமா, பொது மேடைக்கு அழைச்சுட்டு வந்ததே எங்களைப்போன்ற ரசிகர்களின் உறுதிதான். ஆனா, இன்னிக்கு அவரோட ஒரு படத்தை ரிலீஸ் பண்றதில் சிக்கல் உண்டாகவும், சுய நலத்துக்காக தனித்தன்மையை விட்டுட்டு அ.தி.மு.க. பக்கம் ஒதுங்கிட்டார். இதுக்காகவா ராத்திரி பகலா நாங்க கஷ்டப்பட்டோம்!

முதல்ல, ‘விஜய் மக்கள் இயக்கம்’னு ஓர் அமைப்பு இல்லவே இல்லை. அது ஜெயலலிதாவை ஏமாத்தப் போட்ட ஒரு நாடகம். திடீர்னு ஒருநாள், தமிழகம் முழுக்க 32 மாவட்டத் தலைவர்களை சென்னைக்கு அழைத்தார், எஸ்.ஏ.சந்திர சேகரன். ‘தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுக்கலாம்?’னு கூட்டத்தில் கேட்டவர், எங்க கருத்துக்களைக் காதில் போட்டுக் காம, ‘நீங்க எல்லாரும் தி.மு.க-வுக்கு எதிரா வேலை பார்க்கணும். அ.தி.மு.க-வுக்கு ஆதரவா இருப்பதா விஜய்கிட்டே சொல் லுங்க. அப்பதான் அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுப்பார்’னு அவரோட சொந்த விருப்பத்தை எங்க மேல திணிச்சார். அ.தி.மு.க-வுக்கு ஆதரவா செயல்பட அங்கே இருந்த 27 மாவட்டத் தலைவர்களுக்குப் பிடிக்கலை. இதை விஜய்கிட்ட நேர்லயே சொன்னோம். ‘அதுபத்தி எனக்கு எதுவும் தெரியாது. எல்லாத்தையும் அப்பாகிட்ட பேசிக்குங்க’ன்னு சொல்லி நழுவிட்டார் விஜய்.

நிச்சயம் கலைஞர்தான் முதல்வர் ஆவார். அப்போ, விஜய்யும் அவர் அப்பாவும் அடிக்கிற அந்தர் பல்டியைப் பார்க்கத்தானே போறோம்!”

”ஜெயா டி.வி ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி மூலமா தமிழகப் பெண்கள் மத்தியில் குஷ்பு வளர்த்துக்கொண்ட புகழை தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்து அறுவடை செய்துகொண்டார். ‘எனக்கு அரசியலில் பிடித்த பெண் ஜெயலலிதா’ன்னு முன்னாடி சொன்னவங்க, இப்போ அவங்களை எதிர்த்து அரசியல் செய்யுற அளவுக்கு வளர்ந்துட்டாங்களா? குஷ்புவுக்கு எப்படி திராவிடப் பாரம்பர்யம் பத்தித் தெரியாதோ… அப்படித்தான் தி.மு.க பாரம்பர்யமும் தெரியாது!” என்று மர்மப் புன்னகை பூக்கிறார் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி.

”நான் தி.மு.க-வுக்காக எத்தனையோ வருஷம் கஷ்டப்பட்டு இருக்கேன். ஆனா, என் ஒட்டுமொத்த உழைப்பையும் உறிஞ்சிக்கொண்டு என்னை குப்பைக் காகித மாகக் கடாசியது தி.மு.க. தலைமை. எப்பவும் பழசை மறந்துவிடும் குணாதிசயம்கொண்டவர் கருணாநிதி. புதுசுக்குத்தான் மவுசு. குஷ்பு தி.மு.க-வுக்குக் கிடைச்ச புதுத் துடைப்பம். அதனால கொஞ்ச நாள் பட்டுக் குஞ்சம் கட்டி வேடிக்கை பார்த்தாங்க. இப்போ வடிவேலு என்ட்ரி கொடுத்த பிறகு குஷ்பு பழசாகிவிட்டார். ‘தி.மு.க ஆளுங்க மாதிரி மோசமானவங்களை நான் பார்த்ததே இல்லை’னு கதறிக்கிட்டே குஷ்பு கட்சியைவிட்டு வெளியேறும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. குஷ்பு போஸ்டரை முறத்தால் அடித்தவர்கள், அவரது வீட்டில் கழுதையைக் கொண்டுவந்து கட்டியவர்கள், அவர் முகத்துக்கு நேராத் துடைப்பத்தைத் தூக்கிக் காண்பித்தவர்களின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இப்போ பிரசாரம் செய்கிறார் குஷ்பு.

போன தடவை தி.மு.க ஜெயித்தவுடன் என் மீதும், எஸ்.எஸ்.சந்திரன் மீதும் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளினார் கருணாநிதி. என் துறை சார்ந்தவர் என்ற நேசத்தில் சொல்றேன்…

அம்மாவைப் பத்தி அவதூறாகப் பேசுவதை குஷ்பு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து அம்மா ஆட்சி என்பதை மறந்துடக் கூடாது!” என்று எச்சரிக்கை தொனியில் முடிக்கிறார் ராதாரவி.

‘இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்… இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்டா!’ என்று சினிமாவில் வடிவேலுவுவைக் காய்ச்சி எடுத்த சிங்கமுத்து, அரசியலிலும் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து அதகளப்படுத்துகிறார்.

”உண்மையில் வடிவேலு வீட்லயும் அலுவலகத்திலும் கல் எறிஞ்சது தி.மு.க -தான். இதுகூடத் தெரியாம விஜயகாந்த் ஆளுங்க அடிச்சதா நம்பிட்டு, ஊர் ஊரா சுத்திட்டு இருக்கார். தி.மு.க-வின் கொள்கைக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு வடிவேலு அந்தக் கட்சிக்காகப் பிரசாரம் பண்ணலை. என் மேல பொய் வழக்கு போடவும், விஜயகாந்த்கூட மல்லுக்கட்டவும் அந்தப் பக்கம் ஒதுங்கி இருக்கார். மத்தபடி தி.மு.க-வை ஜெயிக்கவைக்கிறது அவர் நோக்கமா இருக்காது. எம்.ஜி.ஆரை தி.மு.க. தூக்கி எறிஞ்சப்ப, தமிழ்நாட்டு மக்கள் அவரைத் தாங்கிப் பிடிச்சு அன்புக் கடலில் ஆழ்த்தினாங்க. தன்னைக் காயப்படுத்திய தி.மு.க-வை எதிர்த்து எம்.ஜி.ஆர் ஆவேசமாப் பாடிய பாடல்களை, இப்போ தி.மு.க. மேடையில வெட்கமே இல்லாமப் பாடிட்டு இருக்காரு வடிவேலு.

மே 13-ம் தேதிக்குப் பிறகு அம்மா ஆட்சி நிச்சயம். அப்போ, இந்த மாப்புக்கு ஆப்பும் நிச்சயம். தமிழ் சினிமா சார்பா அம்மாவுக்குப் பாராட்டு விழா நடத்துனப்போ, கையெடுத்துக் கும்பிட்டு கால்ல விழாத குறையாக் கெஞ்சினவர் இந்த வடிவேலு. இப்போ மறுபடி அம்மா முதலமைச்சர் ஆனதும், ‘அம்மா தாயே… நீங்கதான் பராசக்தி! என்னை மன்னிச்சுக் காப்பாத்துங்க தாயீ’ன்னு அம்மா கால்ல விழத்தான் போறார். அதையும் நாம பார்க்கத்தானே போறோம்!” என்று சீறுகிறார்.

தி.மு.க பாசறையில் முழங்கிக்கொண்டு இருக்கும் பாக்யராஜ், சரத்குமார் பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ”சினிமா நடிகருக்கு இமேஜ் ரொம்பவே முக்கியம். ஆனா, சரத்குமார் அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப்பட்டதாவே தெரியலை.  தி.மு.க-வில் எம்.பி., பதவி கொடுத்துக் கௌரவித்தார்கள். அந்தக் கட்சியை மதிக்காமல் ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வில்ஐக்கியமானார். அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் தி.மு.க அரசு அமைத்த திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினரா சரத்குமாரை நியமித்தார் கலைஞர். ஆனா, இவர் பாட்டுக்கு திடீர்னு அவர் சாதியினரைச் சேர்த்துக்கொண்டு ‘பெருந்தலைவர் மக்கள் கட்சி’ன்னு ஆரம்பித்தார். அங்கேயாவது ஒழுங்கா இருந்தாரா?

அந்தக் கட்சி பொறுப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல், ஒரு ராத்திரியில் தன்னிச்சையா அ.தி.மு.க-வுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டார். இப்போ, அவரோட ஒரே பலத்தையும் இழந்து நிற்கிறார். நிச்சயம் மீண்டும் கலைஞர் ஆட்சி மலரும். அப்போ, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சமாதானத் தூது விடுவார் சரத்குமார். ‘ஐயா, உங்களைப்போல் ஒரு தலைவர்… முதல்வர் உலகத்துலயே இல்லை’ன்னு சரண்டராகி காக்கா பிடிப்பார் சரத்!”

நன்றி : விகடன்

One comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.