கோட்டகுப்பம் கடல் அரிப்புகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்குமா?


கோட்டகுப்பம் கடல் அரிப்புகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்குமா?

தமிழக பகுதியில் கடல் அரிப்புகளைத் தடுக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, சின்ன முதலியார்சாவடி மீனவர்கள், கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட நடுக்குப்பம், ரகமத் நகர், தந்திராயன் குப்பம் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களில், கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கருங்கற்கள் கொட்டி, தடுப்பு எழுப்பப்பட்டது. சின்ன முதலியார்சாவடியில் ஏற்பட்ட கடல் அரிப்புகளைத் தடுக்க, அரைகுறையாக கருங்கற்கள் கொட்டப்பட்டன. அவசர கதியில் கொட்டப்பட்ட கருங்கற்களால், பயன் ஏதும் ஏற்படவில்லை. கடல் அலை நீரோட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், கருங்கற்கள் அடித்துச் செல்லப்பட்டன.கடந்தாண்டு வீசிய புயலின்போது, பனை மர தடுப்புச் சுவரைத் தாண்டி, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததில், கடலோர பகுதிகளில் இருந்த 120க்கும் மேற்பட்ட வீடுகள், இடிந்து விழுந்தன. வீடுகளை இழந்த மக்கள், தற்போது, வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட சின்னமுதலியார்சாவடியில், போர்க்கால அடிப்படையில் கருங்கற்கள் கொட்ட வேண்டுமென, பலமுறை சாலை மறியல் நடத்தியும், அரசிடம் மனு கொடுத்தும் பலனில்லை.
இது தொடர்பாக முறையிட முயன்ற மீனவர்கள், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், துணை முதல்வர் ஸ்டாலினையும் சந்திக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பினர். கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை, முன்னாள் அமைச்சர் பொன்முடி மட்டுமே பார்வையிட்டு, ஆறுதல் கூறினார். தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால், தங்களுடைய பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என, மீனவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இது குறித்து சின்னமுதலியார்சாவடி மீனவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு புயலுக்கும் 60 வீடுகள் கடலுக்குள் அடித்து செல்லப்படும் நிலை உள்ளது. ஒவ்வொரு முறையும் அரசு அதிகாரிகள் வருவதும், “கடமை’க்காக பார்வையிடுவதுமாக இருக்கின்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2 கோடி செலவில் தீட்டப்பட்ட திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. புதிய அரசாவது 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கடல் அரிப்பைத் தடுக்க வேண்டும்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.