தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி


தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி

அ. ப. அகமது
புதுக்கோட்டை

பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் மாறிவருவதை அல்லது கெட்டுப்போவதை எண்ணிச் சமூக ஆர்வலர்கள் கவலைப்பட்டுக் கட்டுரை வடிப்பது நல்ல விசயம். மார்ச் 2011, காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மது எழுதியுள்ள ‘தமிழர் பண்பாடு’ எனும் கட்டுரை முஸ்லிம்களின் பத்திரிகைகளில் வராமல் காலச்சுவடு எனும் பொது இலக்கியத் தளத்தில் வந்துள்ளதால் இந்தக் கட்டுரைக்கு எந்த முஸ்லிம் பத்திரிகையும் மறுப்பு எழுதமாட்டார்கள் என நம்புகிறேன். கதை, கவிதை இலக்கியம், சமூகம் இவற்றில் வலம்வரும் தமிழ் முஸ்லிம் பத்திரிகை உலகம் அல்லது தமிழ் முஸ்லிம் ஆலிம்கள், பெரும்பாலும் களந்தை பீர்முகம்மதுவின் கட்டுரையை உள் மனத்தில் நேசிப்பார்கள். அல்லது ‘நாம் எழுத நினைப்பதை’ வேறுபாணியில் அவர் எழுதிவிட்டார் என்று விட்டுவிடுவார்கள்.

காரணம் பீர்முகம்மது தன் கட்டுரையில் பெரும்பகுதியில் தவ்ஹீத்வாதிகளின் வளர்ச்சியை நினைத்து வேதனைப்பட்டு எழுதுகிறார். தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகளால் முஸ்லிம்களின் பண்பாடு பாழ்பட்டுப் போனது என்று பீர்முகம்மது பதிவுசெய்கிறார்.

அப்படி என்னதான் மாறிப்போய்விட்டது? அதையும் அவரே எழுதுகிறார்.

தமிழ் முஸ்லிம் பெண்கள், பள்ளி, கல்லூரி சென்று உயர்கல்வி படிக்கிறார்கள்; முஸ்லிம் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்; பல இன மக்களுடன் கலந்து பழகுகிறார்கள்; ஆடம்பரத் திருமணங்கள் குறைய ஆரம்பித்துள்ளன; இரவுத் திருமணங்கள் இல்லாமல் போய்விட்டன; வரதட்சணை இல்லாத் திருமணங்கள் கூடிவருகின்றன; தர்ஹாக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக ஆகிவருகின்றன; சந்தனக் கூடுகள் காணாமல் போய்விட்டன; ‘மய்யத்’ அடக்கம் செய்தபின் 40 நாள் பாத்திஹா போன்ற சடங்குகளிலிருந்து முஸ்லிம் சமூகம் விலகிவருகிறது; கந்தூரிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கின்றன.

இது போன்ற கருத்துகள்தாம் பீர் முகம்மதுவின் கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஓரிடத்தில் இதெல்லாம் ‘அரேபியப் பண்பாட்டுப் படையெடுப்பு’ என்று சாடுகிறார். இன்னொரு இடத்தில் “இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி” என்றும் கூறுகிறார். பிறிதொரு இடத்தில் கொஞ்சம் ‘மென்டு முழுங்கி’ (அதாவது கஷ்டப்பட்டுக் கடைசியில் சொல்வது) தவ்ஹீத்வாதம் என்றும் ‘தவ்ஹீத்வாதிகளின் வருகை, செல்வாக்கு’ என்றும் பீர்முகம்மது தன் கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார்.

பீர்முகம்மதுவின் எழுத்தைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்னதாகச் சில அடிப்படையான கருத்துகளைப் பார்ப்போம்.

முஸ்லிம்களின் பண்பாடுகளைப் பற்றிப் பேச, எழுத விரும்புபவர்கள் முதலில் தங்களின் பார்வையை உலகளாவிய கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் சரியானதாக அமையும். வட்டார வழக்கில் இருந்து பார்த்தால் பல சமயங்களில் பிழையான பார்வையாக அது ஆகிவிடக்கூடும்.

இஸ்லாம் மதம் அல்ல, வாழ்க்கை நெறி என்று பேசும் முஸ்லிம் அறிஞர்கள் பலர் அல்லது எழுத்தாளர்கள் தமது சொந்த வாழ்க்கையில் மதவாதிகளைப் போல நடந்துகொள்வார்கள். இப்படி இருக்கும்போது பாமர முஸ்லிம்களைப் பற்றி எப்படிச் சொல்வது?

இஸ்லாமியச் கலாச்சாரம் என்பது இன்ன இன்ன ஆடைதான் அணிய வேண்டும் என்று கூறியதே கிடையாது. எப்படி எப்படி அணிய வேண்டும் என்றுதான் அறிவுரை கூறுகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தத் தமது நாடு, வெப்பநிலைக்கேற்றவாறு தமது விருப்பத்துக்குத் தக்கவாறு ஆடை அணியலாம். உடலில் எதை மறைக்க வேண்டும், என்னும் அடிப்படை ஒழுக்கவியல் அம்சத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவுறுத்துகிறது.

இந்த அடிப்படை விசயத்தைத் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களில் சிலர் சொந்த ஊரில் வாழும்போது அறியாமல் இருந்து பிறகு வெளிநாடு சென்று திரும்பிய பிறகு பின்பற்றினால் பீர்முகம்மது இதை அரேபியப் பண்பாட்டுப் படையெடுப்பு என்கிறாரே! இது சரியா?

தமிழ் முஸ்லிம் பெண்கள் கல்லூரி சென்று படிக்கும்போதும் புர்கா அணிந்து செல்வதைக் குறிப்பிடுகிறார். கடந்த தலைமுறையைவிட இன்றைய தலைமுறையில் முஸ்லிம் ஆண்கள் தாடி வைத்திருப்பதைக் குறிப்பிடவில்லை. பீர்முகம்மதுவைக் கேட்கிறேன், நாங்கள் இஸ்லாத்தை விரும்பி, புரிந்து, பின்பற்ற விரும்புவது ஒன்றும் ‘கள்ளக் காதல்’ அல்ல, இப்படி முஸ்லிமாக வாழும் அதேசமயம் பல இனச் சமுதாயத்தோடு வரம்புக்குட்பட்டு, இணக்கமாக, மனிதநேயத்தோடு வாழ்கிறோமே! எங்களின் நேர்மையான பரந்து விரிந்த ஈமானியக் கண்ணோட்டம் எல்லாம் பீர்முகம்மது போன்றவர்களுக்குத் தெரியாது.

தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. அது சுகாதாரமற்ற குடியிருப்புகளாக இருக்கலாம். ஒழுங்கமைப்பு இல்லாத கூட்டுக் குடும்பங்களாக இருக்கலாம். வெளிநாட்டு வாழ்க்கையால் தொலைந்துபோன குடும்ப வாழ்க்கையாக இருக்கலாம். இலைமறைவு காய்மறைவாய் இருந்த ‘டாஸ்மாக்’ கலாச்சாரம் முஸ்லிம் இளைஞர்களிடம் பெருகிவருவதாக இருக்கலாம்.

. . . இப்படித் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அறிவு மேம்பாட்டுக்குப் பணியாற்ற நினைப்பவர்கள் எழுதப் பேச, போராட நிறையக் களங்கள் இருக்கின்றன. பீர்முகம்மது இதையெல்லாம் விட்டுவிட்டு, தர்ஹா போச்சு, சந்தனக் கூடு போச்சு, 40 நாள் பாத்திஹா போச்சு என்று கவலைப்படுவதன் மூலமும் வரதட்சணை இல்லாத் திருமணங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன என்றும் இவையெல்லாம் தவ்ஹீத்வாதிகளின் வருகை என்றும் பதிவுசெய்கிறார்.

“இவையெல்லாம் ஒரு நல்ல பண்பாட்டுக்கான எழுச்சி” என்பதைப் பீர்முகம்மது போன்றவர்கள் மட்டுமல்ல தமிழ் முஸ்லிம்கள் பலரும் உணராமல் உள்ளனர். காரணம் தமிழகத்தில் தவ்ஹீத்வாதிகள் எனத் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்கள் செய்யும் தவறுகளால் ‘இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி’ தவறாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகள் என்பவர்கள் அதிர்ஷ்டவசமாகப் பல உயரிய நல்ல விசயங்களை மக்களிடையே பரப்பினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உள்ள அவர்களின் தனிப்பட்ட குறைபாடுகளால் அவர்கள் பரப்பிய நல்ல விசயங்கள் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டன.

பீர்முகம்மது போன்றவர்களுக்கும் அவரது எழுத்தை நேசிக்கும் வாசிக்கும் அன்பர்களுக்கும் ஏன் தமிழ்நாட்டு தவ்ஹீத்வாதிகளுக்கும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அதாவது நபி முகம்மது அவர்களின் வாழ்வியலை மார்க்கமாக ஏற்றுக்கொண்டுள்ள நாம் நம்மை ‘முஸ்லிம்’ என்னும் பொது வார்த்தையில்தான் விளித்துக்கொள்ள வேண்டுமே தவிர தவ்ஹீத்வாதி என்றோ அல்லது வேறு எந்தப் பெயரைக் கூறியும் அடையாளப்படுத்துவது நபி முகமது அவர்களின் போதனைக்கே முரணானது.

தர்ஹா கலாச்சாரம் என்பது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என்றும் சந்தனக்கூடு போன்ற வைபவங்கள் நீக்கப்பட வேண்டுமென்பதும் இந்த ‘தவ்ஹீது’ காரர்கள் கூறுமுன் கடந்த நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பாக்கியத்துஸாலிஹா மதரஸாவில் ‘பத்வா’ வெளியிட்டிருக்கிறார்கள்.

இஸ்லாமியக் கலாச்சாரப் பண்பாட்டுச் சீர்திருத்தம் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பரவலாக நடந்துகொண்டிருக்கிறது.

இதே போன்று அகில இந்திய அளவில் மௌலானா மௌதூதி, ஜகரியா மவுலானா போன்றவர்களாலும் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது.

அரபு தேசங்களில் இந்தப் பண்பாட்டுச் சீர்திருத்தங்கள், இமாம்ஹசன் அல் பன்னா, அப்துல்வஹாப் போன்றவர்களாலும் கடந்த நூற்றாண்டுகளிலேயே ஆரம்பிக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கிறது.

மூடப்பழக்கவழக்கங்களான, கயிறு மந்திரித்தல், தாயத்துக் கட்டுதல், ஜோசியம் பார்த்தல் போன்ற செயல்கள் தமிழ் முஸ்லிம்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த மூடப் பழக்கவழக்கங்களைப் பண்பாடு என்றோ கலாச்சாரம் என்றோ பூசி மெழுகிச் சொல்லாமல் நேரடியாக, தெளிவாகத் தமிழ் முஸ்லிம் நெஞ்சங்களைத் தட்டி எழுப்பி அவையெல்லாம் ‘ஓர் இறைவனை’ நம்பாத ஈனச் செயல்கள் என்று சொன்னவர்கள்தாம் பீர்முகம்மது குறிப்பிடும் ‘தவ்ஹீத்வாதிகள்’. இந்தச் சீர்திருத்தப் பண்பாட்டு எழுச்சியைக் குறை காண்பது பிழையாகும்.

இஸ்லாமியப் பண்பாடு என்பது உலகளாவிய ஓர் இறைக்கொள்கை ஆகும். அதாவது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது மொழியால், இனத்தால், நிறத்தால் மாறுபட்டாலும் மனித இனம் முழுமையும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது என்று நம்பச் சொல்கிறது இஸ்லாம். இப்படி நம்பும்போதுதான், நமக்குள் வேற்றுமைகள் இருந்தாலும்கூட அதையும் மீறி சகோதரத்துவம் மலரும். ஆகவே ஓர் இறை எனும் தத்துவத்தைப் பின்பற்றி நிலைநாட்டுவதுதான் மனித இனத்தினுடைய ஒற்றுமைக்கான முதல் படி. இந்த ஓர் இறை – தத்துவத்திற்கு முரணானதுதான் சிலைகள் வழிபாடும் தனிமனித வழிபாடுகளும் இயக்க வழிபாடுகளும் தர்ஹா வழிபாடுகளும்.

அந்த தர்ஹா வழிபாட்டைத் தமிழ் முஸ்லிம்களின் நெஞ்சங்களிலிருந்து நீக்கி அறிவுப் பண்பாட்டு எழுச்சியை உரக்கக் கூறியவர்கள்தாம் இந்த ‘தவ்ஹீத்வாதிகள்’.

தாய் அல்லது தந்தை மரணித்தவுடன் மூன்றாம் நாள் ஏழாம் நாள் நாற்பதாம் நாள் பாத்திஹா ஓதி ஊர் மெச்சும் பழக்கம் இன்றும் இருக்கிறது. ஆனால் வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார் பீர்முகம்மது. தாய் தந்தை உயிரோடு இருக்கும்போது அவர்களைக் கவனித்துப் பணிவிடை செய்து நல்ல பண்பாடான முஸ்லிம்களாக வாழ வேண்டும் என்பது தவ்ஹீத்வாதிகளின் பிரச்சாரம் மட்டுமல்ல, எல்லா முஸ்லிம் அறிஞர்களுமே வலியுறுத்தி வரும் கருத்துதான்.

இதைப்போலவே தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஏன் வரதட்சணை இல்லாத் திரு மணங்களாக இருக்கட்டும், மூடபழக்க வழக்கங்கள் ஒழிப்பாக இருக்கட்டும், தொப்பி, தாடி விசயமாகக்கூட இருக்கட்டும்.

இந்த ‘தவ்ஹீத்’வாதிகளைத் தவிர மற்ற எல்லா அமைப்புகளிலுள்ள ஆலிம்கள், எழுத்தாளர்கள் எல்லாம் பாஸிட்டிவாக, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று கூறி நிறுத்திக்கொள்வார்கள்.

இந்த தவ்ஹீத்வாதிகள் மட்டும், ‘இவை இவை’ செய்ய மார்க்கத்தில் அனுமதி உண்டு ‘இவை இவை’ செய்யக் கூடாது என்று கொஞ்சம் கறாராகச் சொல்லிவிடுவார்கள். அதாவது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகச் சொல்வது தவ்ஹீத்வாதிகளின் பாணி. பூசி மெழுகிப் பிரச்சாரம் செய்வது மற்ற ஆலிம்களின் பாணி.

அதேசமயம் தனியாகப் பள்ளிவாசல் கட்டிச் சமுதாயத்தைக் கூறு போடுவது. இந்த ‘தவ்ஹீத்வாதிகள்’ செய்துவரும் ஹிமாலயத் தவறாகும். இந்தத் தனிப் பள்ளிவாசல் கொள்கைகளால் உன்னதமான ‘இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி’க்குத் தடையாக உள்ளார்கள் இந்த தவ்ஹீத்வாதிகள். தனித்தனி இயக்கங்களாக அமைத்துக்கொண்டு, வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர் நியமித்துக்கொண்டு தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சிகள் போல் செயல்படுவதும் இந்த தவ்ஹீத்வாதிகள் செய்துவரும் தொடர் தவறுகள். தவ்ஹீத்வாதிகளின் குறைகள், நிறைகள் என நிறைய எழுதலாம். அது இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாத விசயங்கள்.

எது எப்படியோ, மற்ற ஆலிம் உலமாக்கள், பீர்முகம்மது போன்றோர் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ‘தவ்ஹீத்வாதிகள்’ கொஞ்சம் சுயபரி சோதனை செய்து தம்மைத் தாமே திருத்திக்கொண்டால் ‘இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி” நன்றாக இருக்கும் என்பதுதான் நம் பெருங்கவலை.

இந்தக் கட்டுரையின் உள்ளார்ந்த கருத்துகளையும் உண்மையான நோக்கத்தையும் பீர்முகம்மது போன்றவர்களும் அவரது கட்டுரையை உள் மனத்தில் நேசிக்கும் முஸ்லிம்களும் நிறையப் படிக்க வேண்டும்! யோசிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

நன்றி : காலசுவடு

3 comments

  1. கருத்தை ஏற்று கட்டுரையை பதித்தமைக்கு நன்றி!

    Like

  2. இதோ…உங்கள் கருத்துக்களினூடே கசப்பான பதில்கள் (உண்மையைப்போல்

    பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் மாறிவருவதை….உள் மனத்தில் நேசிப்பார்கள்.
    (எதார்த்தமான உண்மைகளை அவர் எழுத்துவடிவில் தந்ததற்காக)

    அல்லது ‘நாம் எழுத நினைப்பதை’ வேறுபாணியில் அவர் எழுதிவிட்டார் என்று விட்டுவிடுவார்கள்.
    (உண்மைகளை இப்படி துணிச்சலாக எழுதுவது மிகவும் குறைந்துள்ள காலகட்டத்தில் அவர்களெல்லாம் இருப்பதாகக் உணர்ந்திருப்பதால் இருக்கலாம்)

    தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகளால் முஸ்லிம்களின் பண்பாடு பாழ்பட்டுப் போனது என்று பீர்முகம்மது பதிவுசெய்கிறார்.
    (உண்மையான தவ்ஹீத்வாதிகளைப்பற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை: தம்மைத்தாமே தவ்ஹீத்வாதிகளாக தம்பட்டம் அடித்துத் திரிபவர்களை மட்டும் குறித்திருந்திருக்கலாம்)

    வரதட்சணை இல்லாத் திருமணங்கள் கூடிவருகின்றன;
    ;( வரதட்சணை ரொக்கத்திற்கு பதிலாக சொக்கத்தில் (தங்க நகைகளில்) கட்டாயமாக-பரம ரகசியமாகக் கேட்டுப் பெறப்படுகிறறே அல்லாமல் உண்மையில் வரதட்சணை வாங்காதத் திருமணங்கள் இப்போது மிகவும் அப+ர்வமே)

    தர்ஹாக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக ஆகிவருகின்றன;
    (அதற்குப் பதிலாகத்தான் தனிமனித புகழ்ச்சி-பின்பற்றல் மிகவும் மிகைத்துப்போய்விட்டதுடன் ஆளாளாளுக்கு மார்க்கத்தின் பெயரால் அடித்தும் அழித்தும் புனிதஇஸ்லாத்தையும் சமூக ஒற்றுமையையும் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிக் கொண்டுதான் இருக்கிறார்களே!)

    சந்தனக் கூடுகள்…..சமூகம் விலகிவருகிறது
    (இறந்தவர்களை நினைப்பதும் அவர்களுக்காக துஆச்செய்வதும் மாபெரும் தவறாகக் கருதுவதாலும்: அதற்குப்பதிலாகத் சுயசிந்தனையற்ற சுயநலச் செருக்கால் தமக்குள்ளே எப்போதும் சண்டைபோட்டு; கலாச்சாரப் புரட்சி செய்துகொண்டும்தான் இருக்கிறார்களே)

    கந்தூரிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கின்றன.
    (ஊரில் உள்ளவர்கள் வருடத்தில் ஒருநாள்கூட ஒன்றாகச் சேர்ந்துவிடக்கூடாதே என்ற நல்ல(?)எண்ணம் காரணமாக இருக்கலாம்).

    இது போன்ற கருத்துகள்தாம்…….தவ்ஹீத்வாதிகளின் வருகை, செல்வாக்கு’ என்றும் பீர்முகம்மது தன் கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார்.
    (தௌஹீத் என்பதின் அர்த்தம் என்னவென்றே தெரியாதவர்களை சகோதரர் பீர்முஹம்மத் அவர்கள் ‘தவ்ஹீத் வாதிகள்’ என்று அழைத்திருப்பது மிகவும் தவறுதான்)

    இஸ்லாம் மதம் அல்ல, வாழ்க்கை நெறி என்று பேசும் முஸ்லிம் அறிஞர்கள் பலர் அல்லது எழுத்தாளர்கள் தமது சொந்த வாழ்க்கையில் மதவாதிகளைப் போல நடந்துகொள்வார்கள். இப்படி இருக்கும்போது பாமர முஸ்லிம்களைப் பற்றி எப்படிச் சொல்வது?
    (இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடவேண்டிய மார்க்கம் அல்ல: அது அனைத்துமக்களும் பின்பற்றவேண்டிய மார்க்கம்: அனைவருக்கும் உரியது என்பதை தெளிவாகத் தெரிவித்திருக்கிறீர்கள்)

    இந்த அடிப்படை விசயத்தைத் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களில் சிலர் சொந்த ஊரில் வாழும்போது அறியாமல் இருந்து பிறகு வெளிநாடு சென்று திரும்பிய பிறகு பின்பற்றினால் பீர்முகம்மது இதை அரேபியப் பண்பாட்டுப் படையெடுப்பு என்கிறாரே! இது சரியா?
    (அரபுலகில் இருபது வருடத்திற்கு முன்பெல்லாம் பெண்கள் தமது சாதாரண உடைகளுடன் அதிகமாக தம் தலையிலுள்ள கறுப்புத் துப்பட்டாக்களால் தலையையும் முகத்தையும் மறைக்கும் பழக்கமே மட்டுமே இருந்தது: பிற்காலத்தில்தான் நீளமான கறுப்பு புர்கா அணியும் பழக்கம் படிப்படியாக நடைமுறைக்கு வந்தது: ஆனால் நம்நாட்டில் உர்து மொழிபேசும் முஸ்லிம்பெண்கள் முழுமையான கறுப்பு புர்காவும்: சில ஊர்களில் தமிழ்மொழிபேசும் பெண்கள் வெள்ளை புர்காகளையும் அணிந்துவரும் பழக்கம் நம்நாட்டில் முன்பிருந்தே இருந்துவருவதால் ‘அரேபியப்பண்பாட்டு படையெடுப்பாக’ சகோதரர் பீர்முஹம்மத் அவர்கள் அதைக் குறிப்பிட்டிருந்திருக்கமாட்டார்).

    தமிழ் முஸ்லிம் பெண்கள் கல்லூரி சென்று படிக்கும்போதும் புர்கா அணிந்து செல்வதை……. ஆண்கள் தாடி வைத்திருப்பதைக் குறிப்பிடவில்லை.
    (தாடி மட்டும் வைத்தால் போதும் என்று நவீனவாதிகள் நினைப்பதால் இருக்கலாம்)

    பீர்முகம்மதுவைக் கேட்கிறேன், நாங்கள் இஸ்லாத்தை விரும்பி, புரிந்து, பின்பற்ற விரும்புவது ஒன்றும் ‘கள்ளக் காதல்’ அல்ல
    (புனித இஸ்லாத்தை முழுமையாகப்படித்து, புரிந்து, பின்பற்றுவதற்குப் பதிலாக சில இறைவசனங்களையும் சில ஹதீஸ்களையும் மட்டும் அரைகுறையாகப் படித்துவிட்டு மார்க்கத்தில் எல்லாம் தெரிந்துவிட்டதாகக் கருதி எங்கும் எப்போதும் விவாதம்-குழப்பம் மட்டும் செய்வது வருவதுதான் இஸ்லாத்தின் மீதான காதலா?)

    இப்படி முஸ்லிமாக வாழும்……..கண்ணோட்டம் எல்லாம் பீர்முகம்மது போன்றவர்களுக்குத் தெரியாது
    (உங்கள் கூற்று எந்த அளவுக்கு உண்மை என்பதை பிறமத சகோதரர்களிடம் கேட்டு தெளிந்து கொள்ளுங்கள்)

    தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. அது சுகாதாரமற்ற குடியிருப்புகளாக இருக்கலாம். ஒழுங்கமைப்பு இல்லாத கூட்டுக் குடும்பங்களாக இருக்கலாம்.
    (கூட்டுக் குடும்பம்தான் தற்போது கூட்டுப் பெருங்காயம் போல் ஆகிவிட்டதே)

    வெளிநாட்டு வாழ்க்கையால் தொலைந்துபோன குடும்ப வாழ்க்கையாக இருக்கலாம். இலைமறைவு காய்மறைவாய் இருந்த ‘டாஸ்மாக்’ கலாச்சாரம் முஸ்லிம் இளைஞர்களிடம் பெருகிவருவதாக இருக்கலாம்.
    (மிகவும் உண்மையானக் கருத்து)

    இப்படித் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அறிவு மேம்பாட்டுக்குப் பணியாற்ற……………………. என்றும் பதிவுசெய்கிறார்.
    (சகோதரா பீர்முஹம்மத் அவர்கள் ‘தவ்ஹீத்வாதிகள்’ என்று தவறாகத்தான் குறிப்பிட்டுவிட்டார்)

    “தமிழகத்தில் தவ்ஹீத்வாதிகள் எனத் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்கள் செய்யும் தவறுகளால் ‘இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி’ தவறாகப் பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகள் என்பவர்கள் அதிர்ஷ்டவசமாகப் பல உயரிய நல்ல விசயங்களை மக்களிடையே பரப்பினார்கள்
    (என்னனென்ன நல்லவிசயங்கள் என்பதைத்தான் சகோதரர் பீர்முஹம்மத் அவர்கள் பட்டியலிட்டுள்ளாரே! ஆனால் பல விசயங்களை அவர் குறிப்பிட மறந்துவிட்டர் அல்லது இவ்வளவு மட்டும் போதும் என்று இருந்துவிட்டார்-அவ்வளவே)

    பீர்முகம்மது போன்றவர்களுக்கும் அவரது எழுத்தை நேசிக்கும் வாசிக்கும் அன்பர்களுக்கும் ஏன் தமிழ்நாட்டு தவ்ஹீத்வாதிகளுக்கும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அதாவது நபி முகம்மது அவர்களின் வாழ்வியலை மார்க்கமாக ஏற்றுக்கொண்டுள்ள நாம் நம்மை ‘முஸ்லிம்’ என்னும் பொது வார்த்தையில்தான் விளித்துக்கொள்ள வேண்டுமே தவிர தவ்ஹீத்வாதி என்றோ அல்லது வேறு எந்தப் பெயரைக் கூறியும் அடையாளப்படுத்துவது நபி முகமது அவர்களின் போதனைக்கே முரணானது
    (முஹம்மத் நபி (ஸல்)என்று எழுவதுதான் படிக்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கும்: உங்களைப் பற்றி (!?) தெரிந்துகொள்ள- அடையாளம்காட்ட வேண்டித்தான் இப்படி வெறுமையாக எழுதியிருக்கிறீர்களோ?)

    இஸ்லாமியக் கலாச்சாரப் பண்பாட்டுச் சீர்திருத்தம் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பரவலாக நடந்துகொண்டிருக்கிறது
    (இஸ்லாமியக் கலாச்சார பண்பாடு காணாமல்போய் கொண்டிருப்பதே உண்மை).

    அரபு தேசங்களில் ………குறை காண்பது பிழையாகும்.
    (அப்பாவி மக்களை பயங்கரவாதத்தால் பலியாக்கிவரும் சீர்திருத்தத்தை..இல்லை இல்லை..சீரழிவை பற்றி சகோதரர் பீர்முஹம்மத் குறிப்பிட மறந்தது மாபெரும்பிழைதான்).

    இஸ்லாமியப் பண்பாடு என்பது ……..நம்பச் சொல்கிறது இஸ்லாம்.
    (ஆனால், இதற்கு தவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர் மட்டும் விதிவிலக்கு)

    ஆகவே ஓர் இறை எனும் தத்துவத்தைப் பின்பற்றி நிலைநாட்டுவதுதான் மனித இனத்தினுடைய ஒற்றுமைக்கான முதல் படி.
    (ஓற்றுமையாக இருப்பதே ஓர் இறைக்கொள்கையின் முதற்படி என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்)

    இந்த ஓர் இறை – தத்துவத்திற்கு முரணானதுதான் சிலைகள் வழிபாடும் தனிமனித வழிபாடுகளும் இயக்க வழிபாடுகளும் தர்ஹா வழிபாடுகளும்..
    (மரியாதை செய்தல் , விஜயம் செய்தல், புகழ்தல், வணக்கம்(வாழ்த்து) தெரிவித்தல், வணங்குதல், வழிபடுதல், தொழுகை என்பதெல்லாம் ஒரே செயலா வௌ;வேறானதா என்பதைத் தெரிந்துகொள்ள முயல்வது நல்லது அப்போதுதான் நீங்களும் குழம்பமாட்டீhகள்: பிறரையும் குழப்பமாட்டீர்கள்)

    அந்த தர்ஹா………….எல்லா முஸ்லிம் அறிஞர்களுமே வலியுறுத்தி வரும் கருத்துதான்
    (தாய்தந்தையர்களை தற்போதைய நவீனவாதிகள் எப்பப்பா(?) எப்படி எல்லாம் கவனித்துக் கொள்(ல்);கிறார்கள்…சகோதரர் பீர்முஹம்மத் தவறாகச் சொல்லிவிட்டார்)

    இதைப்போலவே தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஏன் வரதட்சணை இல்லாத் திரு மணங்களாக இருக்கட்டும், மூடபழக்க வழக்கங்கள் ஒழிப்பாக இருக்கட்டும், தொப்பி, தாடி விசயமாகக்கூட இருக்கட்டும்
    (தங்கள் விருப்பப்படியே தொழுகைகளைக் குறைப்பதும், ஜமாத்களைப் பிரிப்பதும் பெருநாட்களைக்கூட்டுவதும் நல்லமல்களை எல்லாம் பித்அத்தாக்கி கழிப்பதும் மாபெரும் கலாச்சாரப் புரட்சியே அல்லாமல் வேறென்ன?)

    இந்த தவ்ஹீத்வாதிகள் மட்டும், ‘இவை இவை’ செய்ய மார்க்கத்தில் அனுமதி உண்டு ‘இவை இவை’ செய்யக் கூடாது என்று கொஞ்சம் கறாராகச் சொல்லிவிடுவார்கள்.
    (மார்க்கத்தைப் படிக்காமலே தத்தமது விருப்பப்படி ஆளொன்றுக்கும் நாளொன்றுக்கும் பத்வாக்களை வெளியிட்டு)

    அதாவது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகச் சொல்வது தவ்ஹீத்வாதிகளின் பாணி..
    .(இப்படி வெட்டித் துண்டாக்கித்தான் சமுதாயத்தை கூறுகூறாக்கினீர்களோ?)

    எது எப்படியோ, மற்ற ஆலிம் உலமாக்கள், பீர்முகம்மது போன்றோர் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
    . (பண்பாட்டு வீழ்ச்சியை ‘எழுச்சி’ என்று தவறாக எழுதிவிட்டார்)

    இந்த ‘தவ்ஹீத்வாதிகள்’ கொஞ்சம் சுயபரி சோதனை செய்து தம்மைத் தாமே திருத்திக்கொண்டால் ‘இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி” நன்றாக இருக்கும் என்பதுதான் நம் பெருங்கவலை..
    ( இவர்களாவது… திருந்துவதாவது)

    இந்தக் கட்டுரையின் உள்ளார்ந்த கருத்துகளையும் உண்மையான நோக்கத்தையும் பீர்முகம்மது போன்றவர்களும் அவரது கட்டுரையை உள் மனத்தில் நேசிக்கும் முஸ்லிம்களும் நிறையப் படிக்க வேண்டும்! யோசிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை
    (இக்கட்டுரையின் உள்ளார்ந்த நோக்கத்தை உடனேத்தான் உணர்ந்து கொள்ளத்தான் முடிகிறதே: இதுகூடவா யாருக்கும்தெரியாது)

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.