முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி நோட்டீஸ்: வாலிபர்களுக்கு வலை


முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி நோட்டீஸ்: வாலிபர்களுக்கு வலை

கோட்டக்குப்பம் பள்ளி வாசல் அருகே முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி

நோட்டீஸ் வினியோகித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 கோட்டக்குப்பம் கோட்ட வயல் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி மகன் அன்சாரி(25).

இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் கோட்டக்குப்பம் நகர துணை செயலாளராக உள்ளார்.

 கடந்த 15ம்தேதி, இங்குள்ள பள்ளி வாசலில் தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே

வந்தபோது அங்கு ஏராளமான பிட் நோட்டீஸ்கள் சிதறி கிடந்தன. அதில் தேர்தலின் போது

ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முஸ்லிம் பெண்கள் பற்றி அவதூறான வாசகங்கள்

இடம் பெற்றிருந்தது. இதனை பழைய பட்டிணம் பாதையை சேர்ந்த ரிஸ்வான்(25), பசித்(23)

ஆகியோர் வினியோகம் செய்தது தெரியவந்தது. இது குறித்து அன்சாரி கொடுத்த

புகாரின்பேரில் கோட்டக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு

பதிந்து நோட்டீஸ் வினியோகித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Advertisements

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ்: தடை கூறும் சட்டமென்ன?


முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது ?

ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை 11.04.2011 முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக “ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது” என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது என்பதால் இந்த இடுகை!

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

ஃபிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும்.

இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

அதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது.

மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண‌ சோதனை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது.

மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் ஃபிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார். கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இவைதான்!

இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆக‌வேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள‌ மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்; இந்த முகத்திரை தடைக்கான சட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இங்கு ஹிஜாப் முறையை சரியாக புரிந்துக் கொண்ட எத்தனையோ இஸ்லாமியர்களிடம் வேறு எந்த எதிர்ப்பலைகளும் எழவில்லை.

இஸ்லாமிய மக்கள் தங்களின் ஹிஜாபை பலவிதத்தில் அணிவது உலகெங்கும் பரவலாக காணப்படுவதுதான். முகத்திரை இல்லாத (முக்காடுடன் கூடிய) ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை. இந்த சட்டத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ள முகத்திரை வகைகள் கீழே படத்திலுள்ள இந்த இரண்டு வகைகள்தான்

இவற்றில் ஒருவகையான‌ முகத்திரைக்கு புர்கா என்ற வார்த்தையை இவர்கள் பயன்படுத்துவதால், முழு ஹிஜாபையும் தடை செய்துவிட்டதாக மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இதைத் தவிர பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும்படியான ஆடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்ற எந்த அறிவிப்போ, சட்டங்களோ இங்கு கொண்டு வரப்படவில்லை. இஸ்லாமியர்கள் என்று குறிப்பாக கவனிக்கப்படாமல் பொதுவான பாதுகாப்பு கருதியும், பல சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்காகவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பின் செய்திகள் அறிவிக்கின்றது.

ஃபிரான்ஸ் அல்லாமல் உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, அது ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்வதைத் தடைச்செய்ய‌ எத்தகைய‌ சட்டமும் இயற்ற இயலாது. ஐரோப்பிய/அமெரிக்க கலாச்சாரத்திலும், மற்ற சில நாடுகளிலும் பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைப்பதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோன்று தங்கள் உடலை மறைக்கும் உரிமையும் உள்ளது.

ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும், இந்த முகத்திரை விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக‌ எகிப்து நாட்டு ‘அல் அஜ்ஹர் பல்கலைகழக’த்திற்கு சென்று முகத்திரை சம்பந்தமாகவுள்ள‌ இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்பே சட்டமுடிவு எடுத்திருப்பதாக முந்தைய செய்திகள் அறிவித்த‌ன. ஆக, ஒரு ஜனநாயக நாட்டில் முகத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதைத் தடுக்க, மக்களின் உரிமையில் கைவைக்கும் எந்தச் சட்டமும் யாரும் கொண்டுவர முடியாது. அப்படி ஒருவேளை கொண்டு வ‌ந்தால் கண்டிப்பாக அதற்கு எதிராக போராட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த சட்டம் குறித்த தகவல்களை முழுமையாக அறிவதற்குள்ளாகவே, இஸ்லாமியர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது என்று நினைத்து குதூகலிக்க ஒரு கூட்டம்! (இங்குள்ளவர்கள் அல்ல‌, நம்ம இந்தியர்கள்தான்!) ஃபிரான்ஸின் இந்த சட்டத்திற்கு சில‌ பின்னூட்டங்களில் சிலர் சபாஷ் போடுவதைக் கண்டதால் இதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும்! ஃபிரான்ஸின் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்ற இங்கு எந்த தடையுமில்லை. அந்த சிலர் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் (இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்) நிலை ஒருகால் வந்தாலும் களமிறங்கி போராடுவோமே தவிர, யாருடைய குதூகலிப்பையும், கொண்டாட்டத்தையும் கண்டு மனமுடைந்து, ஒடுங்கி, ஓய்ந்துவிடமாட்டோம், இன்ஷா அல்லாஹ்!

நன்றி: பயணிக்கும் பாதை


வானூர் தொகுதி வாக்கு இயந்திரம் பூட்டி சீல் வைப்பு


வானூர் தொகுதி வாக்கு இயந்திரம் பூட்டி சீல் வைப்பு

வானூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடைபெற்று வாக்குபதிவுசெய்யப்பட்ட இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டு வாக்குகள் எண்ணிக்கை மையமான ஆகாசம்பட்டு அரவிந்தர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வானூர் தொகுதியில் 249 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு நடந்தது. அசம்பா விதங்கள் இன்றி அமைதியாக நடந்தது. பதிவு செய்யப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. நள்ளிரவு வரையில் இந்த இயந்திரங்கள் வந்தன. அவை அனைத்தும் கல்லூரியின் இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு கதவு பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த பகுதியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோடைகால பயிற்சி முகாம்


கோடைகால பயிற்சி முகாம்

இந்த ஆண்டு மாணவ மாணவியர்கள் கோடைகால விடுமுறையை

நல்ல வழியில் செலவிட கோட்டகுப்பம் குவைத் நல பேரவை,

மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்களை வருகின்ற மே

மாதம் முதல் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

எலெக்ஷன் ஓவர் மாப்பு… இனி யாருக்கொல்லாம் ஆப்பு?


எலெக்ஷன் ஓவர் மாப்பு… இனி யாருக்கொல்லாம் ஆப்பு?

பதறும் பிரசார ஸ்டார்கள்

கொள்கைக் கோட்பாடுகளை அடுக்கி, நல்லாட்சிக்கு உத்தரவாதம் தந்து, மக்கள் மனதில் நம்பிக்கை வைட்டமின் ஏற்றி, ஆட்சி அமைக்க முயற்சித்த காலம் மலையேறிவிட்டது. இலவச இனிமா, கவர்ச்சி சினிமா, கவருக்குள் ‘மணி’மா என்ற ஒற்றைக் கொள்கையைச் சகல கட்சிகளும் கடைப்பிடிக்கும் காலம் இது. அதிலும் எந்தப் பொது நல நோக்கும் இல்லாமல், தனிப்பட்ட விரோதம் தீர்க்கும் தனி மனித விமர்சனங்கள் இந்தத் தேர்தலில் அதன் உச்சத்தை எட்டியது.இதில், தேர்தல் சமயம் மட்டும் அரசியல் கால்ஷீட் கொடுத்து, ஆவேசம் காட்டுவது கோடம்பாக்க நட்சத்திரங்களின் பழக்கம். இந்தத் தேர்தலில் அப்படி சபைக்கு வந்து வெளுத்துக் கட்டியவர்களுள்

முக்கியமானவர்கள் விஜய், வடிவேலு, சரத்குமார் மற்றும் குஷ்பு. பிரசார அனல் அடங்கியதும் மீண்டும் இவர்கள் கோடம்பாக்கத்தில்தான் நிலை கொள்ள வேண்டும். ஒருவேளை இவர்கள் சார்ந்த கட்சி, ஆட்சிக் கட்டிலை எட்ட முடியாவிட்டால், இவர்களின் எதிர்காலம் என்ன? ‘எலெக்ஷன் ஓவர் மாப்பு… இனி, யாருக்கெல்லாம் ஆப்பு?’ என்று சோழி உருட்டி, கணிப்பு வேட்டை நடத்திக்கொண்டு இருக்கிறது கோலிவுட். ‘அப்படி என்னதான் நடக்கும்?’ என்று கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தோம்…

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. மீது வெளிப்படையாக வெறுப்பு காட்டினார், அ.தி.மு.க சார்பாக தேர்தலில் போட்டியிடுவார் என்று ஹேஷ்யங்கள், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசா ரம் மேற்கொள்வார் என்று விஜய்யை மையமாக வைத்து, முன் எப்போதைக் காட்டிலும் அதிக அரசியல் அனல். ஆனால், வாக்குப் பதிவு நெருக்கத்தில், ‘இனி, விஜய் அரசியலில் ஈடுபட மாட்டார்!’ என்று அதிரடியாக பேக் அடித்தார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்.

தடாலடியாக, விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலனை அலேக் செய்தது தி.மு.க. ”என்னதான் நடக்குது விஜய்யைச் சுற்றி?” என்று ஜெயசீலனிடம் கேட்டதும்  கொந்தளித்துவிட்டார். ”கடந்த 15 வருஷமா விஜய் ரசிகர் மன்றப் பொறுப்புல இருந்தேன். 3 ஆயிரம் மன்றங்களை இத்தனை வருஷத்துல 40 ஆயிரம் மன்றங் களா ஆக்கி இருக்கோம். கூண்டுக் கிளியா இருந்த விஜய்யை மக்கள் மன்றம் அமைப்பு மூலமா, பொது மேடைக்கு அழைச்சுட்டு வந்ததே எங்களைப்போன்ற ரசிகர்களின் உறுதிதான். ஆனா, இன்னிக்கு அவரோட ஒரு படத்தை ரிலீஸ் பண்றதில் சிக்கல் உண்டாகவும், சுய நலத்துக்காக தனித்தன்மையை விட்டுட்டு அ.தி.மு.க. பக்கம் ஒதுங்கிட்டார். இதுக்காகவா ராத்திரி பகலா நாங்க கஷ்டப்பட்டோம்!

முதல்ல, ‘விஜய் மக்கள் இயக்கம்’னு ஓர் அமைப்பு இல்லவே இல்லை. அது ஜெயலலிதாவை ஏமாத்தப் போட்ட ஒரு நாடகம். திடீர்னு ஒருநாள், தமிழகம் முழுக்க 32 மாவட்டத் தலைவர்களை சென்னைக்கு அழைத்தார், எஸ்.ஏ.சந்திர சேகரன். ‘தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுக்கலாம்?’னு கூட்டத்தில் கேட்டவர், எங்க கருத்துக்களைக் காதில் போட்டுக் காம, ‘நீங்க எல்லாரும் தி.மு.க-வுக்கு எதிரா வேலை பார்க்கணும். அ.தி.மு.க-வுக்கு ஆதரவா இருப்பதா விஜய்கிட்டே சொல் லுங்க. அப்பதான் அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுப்பார்’னு அவரோட சொந்த விருப்பத்தை எங்க மேல திணிச்சார். அ.தி.மு.க-வுக்கு ஆதரவா செயல்பட அங்கே இருந்த 27 மாவட்டத் தலைவர்களுக்குப் பிடிக்கலை. இதை விஜய்கிட்ட நேர்லயே சொன்னோம். ‘அதுபத்தி எனக்கு எதுவும் தெரியாது. எல்லாத்தையும் அப்பாகிட்ட பேசிக்குங்க’ன்னு சொல்லி நழுவிட்டார் விஜய்.

நிச்சயம் கலைஞர்தான் முதல்வர் ஆவார். அப்போ, விஜய்யும் அவர் அப்பாவும் அடிக்கிற அந்தர் பல்டியைப் பார்க்கத்தானே போறோம்!”

”ஜெயா டி.வி ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி மூலமா தமிழகப் பெண்கள் மத்தியில் குஷ்பு வளர்த்துக்கொண்ட புகழை தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்து அறுவடை செய்துகொண்டார். ‘எனக்கு அரசியலில் பிடித்த பெண் ஜெயலலிதா’ன்னு முன்னாடி சொன்னவங்க, இப்போ அவங்களை எதிர்த்து அரசியல் செய்யுற அளவுக்கு வளர்ந்துட்டாங்களா? குஷ்புவுக்கு எப்படி திராவிடப் பாரம்பர்யம் பத்தித் தெரியாதோ… அப்படித்தான் தி.மு.க பாரம்பர்யமும் தெரியாது!” என்று மர்மப் புன்னகை பூக்கிறார் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி.

”நான் தி.மு.க-வுக்காக எத்தனையோ வருஷம் கஷ்டப்பட்டு இருக்கேன். ஆனா, என் ஒட்டுமொத்த உழைப்பையும் உறிஞ்சிக்கொண்டு என்னை குப்பைக் காகித மாகக் கடாசியது தி.மு.க. தலைமை. எப்பவும் பழசை மறந்துவிடும் குணாதிசயம்கொண்டவர் கருணாநிதி. புதுசுக்குத்தான் மவுசு. குஷ்பு தி.மு.க-வுக்குக் கிடைச்ச புதுத் துடைப்பம். அதனால கொஞ்ச நாள் பட்டுக் குஞ்சம் கட்டி வேடிக்கை பார்த்தாங்க. இப்போ வடிவேலு என்ட்ரி கொடுத்த பிறகு குஷ்பு பழசாகிவிட்டார். ‘தி.மு.க ஆளுங்க மாதிரி மோசமானவங்களை நான் பார்த்ததே இல்லை’னு கதறிக்கிட்டே குஷ்பு கட்சியைவிட்டு வெளியேறும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. குஷ்பு போஸ்டரை முறத்தால் அடித்தவர்கள், அவரது வீட்டில் கழுதையைக் கொண்டுவந்து கட்டியவர்கள், அவர் முகத்துக்கு நேராத் துடைப்பத்தைத் தூக்கிக் காண்பித்தவர்களின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இப்போ பிரசாரம் செய்கிறார் குஷ்பு.

போன தடவை தி.மு.க ஜெயித்தவுடன் என் மீதும், எஸ்.எஸ்.சந்திரன் மீதும் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளினார் கருணாநிதி. என் துறை சார்ந்தவர் என்ற நேசத்தில் சொல்றேன்…

அம்மாவைப் பத்தி அவதூறாகப் பேசுவதை குஷ்பு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து அம்மா ஆட்சி என்பதை மறந்துடக் கூடாது!” என்று எச்சரிக்கை தொனியில் முடிக்கிறார் ராதாரவி.

‘இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்… இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்டா!’ என்று சினிமாவில் வடிவேலுவுவைக் காய்ச்சி எடுத்த சிங்கமுத்து, அரசியலிலும் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து அதகளப்படுத்துகிறார்.

”உண்மையில் வடிவேலு வீட்லயும் அலுவலகத்திலும் கல் எறிஞ்சது தி.மு.க -தான். இதுகூடத் தெரியாம விஜயகாந்த் ஆளுங்க அடிச்சதா நம்பிட்டு, ஊர் ஊரா சுத்திட்டு இருக்கார். தி.மு.க-வின் கொள்கைக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு வடிவேலு அந்தக் கட்சிக்காகப் பிரசாரம் பண்ணலை. என் மேல பொய் வழக்கு போடவும், விஜயகாந்த்கூட மல்லுக்கட்டவும் அந்தப் பக்கம் ஒதுங்கி இருக்கார். மத்தபடி தி.மு.க-வை ஜெயிக்கவைக்கிறது அவர் நோக்கமா இருக்காது. எம்.ஜி.ஆரை தி.மு.க. தூக்கி எறிஞ்சப்ப, தமிழ்நாட்டு மக்கள் அவரைத் தாங்கிப் பிடிச்சு அன்புக் கடலில் ஆழ்த்தினாங்க. தன்னைக் காயப்படுத்திய தி.மு.க-வை எதிர்த்து எம்.ஜி.ஆர் ஆவேசமாப் பாடிய பாடல்களை, இப்போ தி.மு.க. மேடையில வெட்கமே இல்லாமப் பாடிட்டு இருக்காரு வடிவேலு.

மே 13-ம் தேதிக்குப் பிறகு அம்மா ஆட்சி நிச்சயம். அப்போ, இந்த மாப்புக்கு ஆப்பும் நிச்சயம். தமிழ் சினிமா சார்பா அம்மாவுக்குப் பாராட்டு விழா நடத்துனப்போ, கையெடுத்துக் கும்பிட்டு கால்ல விழாத குறையாக் கெஞ்சினவர் இந்த வடிவேலு. இப்போ மறுபடி அம்மா முதலமைச்சர் ஆனதும், ‘அம்மா தாயே… நீங்கதான் பராசக்தி! என்னை மன்னிச்சுக் காப்பாத்துங்க தாயீ’ன்னு அம்மா கால்ல விழத்தான் போறார். அதையும் நாம பார்க்கத்தானே போறோம்!” என்று சீறுகிறார்.

தி.மு.க பாசறையில் முழங்கிக்கொண்டு இருக்கும் பாக்யராஜ், சரத்குமார் பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ”சினிமா நடிகருக்கு இமேஜ் ரொம்பவே முக்கியம். ஆனா, சரத்குமார் அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப்பட்டதாவே தெரியலை.  தி.மு.க-வில் எம்.பி., பதவி கொடுத்துக் கௌரவித்தார்கள். அந்தக் கட்சியை மதிக்காமல் ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வில்ஐக்கியமானார். அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் தி.மு.க அரசு அமைத்த திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினரா சரத்குமாரை நியமித்தார் கலைஞர். ஆனா, இவர் பாட்டுக்கு திடீர்னு அவர் சாதியினரைச் சேர்த்துக்கொண்டு ‘பெருந்தலைவர் மக்கள் கட்சி’ன்னு ஆரம்பித்தார். அங்கேயாவது ஒழுங்கா இருந்தாரா?

அந்தக் கட்சி பொறுப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல், ஒரு ராத்திரியில் தன்னிச்சையா அ.தி.மு.க-வுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டார். இப்போ, அவரோட ஒரே பலத்தையும் இழந்து நிற்கிறார். நிச்சயம் மீண்டும் கலைஞர் ஆட்சி மலரும். அப்போ, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சமாதானத் தூது விடுவார் சரத்குமார். ‘ஐயா, உங்களைப்போல் ஒரு தலைவர்… முதல்வர் உலகத்துலயே இல்லை’ன்னு சரண்டராகி காக்கா பிடிப்பார் சரத்!”

நன்றி : விகடன்

கோட்டக்குப்பத்தில் அமைதியான ஓட்டுப்பதிவு


கோட்டக்குப்பத்தில் அமைதியான ஓட்டுப்பதிவு

கோட்டக்குப்பத்தில் இன்று காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு

எந்த வித அசம்பாவிதமின்றி நடந்து முடிந்தது. மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர்.

தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு பலம‌டங்கு அதிகரிக்கப்பட்டது.

 

 

 


யாருக்கு வோட்டுப் போடுவது?


யாருக்கு வோட்டுப் போடுவது?

ஞாநி

 

நம் அரசியல் கட்சிகள் திருந்தவில்லை என்பதற்குத் தொடர்ந்து பல அடையாளங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. நாம்தான் அவற்றைச் சரியாகக் கவனிப்பதும் இல்லை. அழுத்தம் கொடுப்பதும் இல்லை.

சென்றமுறை ஜெயித்து வந்த 234 எம்.எல்.ஏ.க்களில் 77 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. இந்த முறை போட்டி யிடும் வேட்பாளர்களில் 18 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 66 பேர் மீது உள்ளவை கடும் குற்றச்சாட்டுகள். ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர் களிலும் கிரிமினல் வழக்குள்ளவர்கள் சதவிகிதம் அதிர்ச்சியாக இருக்கிறது. தி.மு.க – 22 சதவிகிதம். அ.தி.மு.க – 30. பா.ம.க -52. விடுதலைச் சிறுத்தைகள்- 50. தே.மு. தி.க- 19. காங்கிரஸ்- 11. பி.ஜே.,பி- 11.

சென்ற முறை ஜெயித்தவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள். இந்த முறை போட்டியிடுபவர்களில் 35 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். மீதி பெரும்பாலோர் லட்சாதிபதிகள். கோடீஸ்வர வேட்பாளர்கள் கட்சி வாரியாக: தி.மு.க – 65.77 சத விகிதம். அ.தி.மு.க – 52.08. காங்கிரஸ் – 61.11. பா.ம.க – 40.74. விடுதலைச் சிறுத்தைகள் – 33.33. தே.மு.தி.க – 33.333. பி.ஜே.பி- 14.79. மார்க்சிஸ்ட் – 8.33. கம்யூனிஸ்ட்- 0.

ஐந்து வருடங்களில் இவர்களுடைய சொத்து எப்படிப் பெருகியிருக்கிறது என்பதே இவர்கள் மக்களுக்கு எப்படி சேவை செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டி விடும். தி.மு.க அமைச்சர் இ.வ.வேலுவின் சொத்து பல நூறு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆட்சியில் இருந்த அமைச்சர்களை விட அவர்களுடைய மனைவிகள், துணைவிகள் சொத்து அதிகரித்திருக்கிறது. முதலமைச்சர்தான் இதில் வழிகாட்டி. பிறவி கம்யூனிஸ்ட் அல்லவா அவர்! 2006ல் அவர் சொத்து 26.52 கோடி. 2011ல் 44.14 கோடி இதில் கருணாநிதியின் சொத்து வெறும் சுமார் 5 கோடிதான். தயாளுவுடையது சுமார் 16 கோடி. ராஜாத்தியுடையது சுமார் 24 கோடி! இன்னும் பல பேர் மனைவி-துணைவி கணக்கு காட்டியிருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு வெறும் 75 லட்சம். மனைவி ரங்கநாயகியுடையதோ 93 லட்சம். துணைவி லீலாவுடையதோ 2.25 கோடி!

தேர்தல் ஆணையம் இந்த முறை தமிழ்நாட்டில் பிரதான பிரச்னை, பெரும் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கப்படுவதைத் தடுப்பதுதான் என்று அறிவித்து, கடுமையாகச் செயல்பட்டிருக்கிறது. இதன் விளைவு டீக்கடைக்காரர் வீட்டில் சில லட்சங்களும் ஆம்னி பஸ் கூரையில் பல கோடிகளும் பிடிபட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த அளவு கறுப்புப் பணம் சுழற்சியில் இருக்கிறது என்பதற்கு, தேர்தல் ஆணையம் தரும் ஒரு புள்ளிவிவரமே சாட்சி. சென்ற வாரம் வரை பிடிபட்ட 22 கோடியே 40 லட்சம் ரூபாயில், முறையாகக் கணக்கு காட்டி தேர்தலுக்குச் சம்பந்தம் இல்லாத நியாயமான சொந்தப் பணம் என்று நிரூபித்து திரும்பப் பெறப்பட்ட தொகை வெறும் 4 கோடியே 88 லட்சம்தான்.

பணபலம் இல்லாமல் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருசில விதிவிலக்கான இடதுசாரி வேட்பாளர்கள் தவிர, எந்தப் பெரிய கட்சி வேட்பாளரும் ஆணையம் நிர்ணயித்த வரம்புக்குள் செலவு செய்வதே இல்லை என்பது உண்மை. பணபலம் இல்லாமலே ஜெயிக்க முடியும் என்று நம்பும் படித்த இளைஞர்களின் பிரதிநிதியாகத் தங்களை முன்னிறுத்தும் சுயேச்சை வேட்பாளர் சரத்பாபு போன்றோர் போடும் கணக்குக் கூட தப்பாகவே இருக்கிறது. மொத்தம் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ள வேளச்சேரியில் தமக்கு 40 ஆயிரம் வாக் குகள் கிடைத்தால் ஜெயித்து விடலாம் என்று அவர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 70 சதவிகித வாக்குப் பதிவு என்றால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் விழும். அதில் 40 ஆயிரம் ஜெயிக்கப் போதும் என்றால் மீதி ஒரு லட்சம் வாக்குகளுக்கு அர்த்தம் என்ன? அவை பல வேட்பாளரிடையே பிரிவதால் தான் 40 ஆயிரத்துக்கு மதிப்பு வருகிறது!

இந்தத் தேர்தல் முறையே தவறு; விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது பற்றித்தான் படித்தவர்கள் பிரசாரம் செய்து கருத்து திரட்ட வேண்டும். இருக்கும் தவறான முறைக்குள்ளேயே செயல்பட்டு ஜெயித்துவிடலாம் என்று கணக்குப் போடுவது படித்த நல்லவர்களின் அப்பாவித்தனம் அல்லது சாமர்த்தியம். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் என் நண்பர் அவருக்கு எதிர் வேட்பாளர் மூன்று கோடி செலவு செய்தால், தான் ஒரு கோடி வரைக்குமாவது செலவிடும் கட்டா யத்துக்குத் தள்ளப்படுவேன் என்கிறார். நண்பருக்கு மாத வருவாயே 15 ஆயிரத்துக்குள்தான். எப்படி ஒரு கோடி திரட்ட முடியும்? கொடுப்பவர்கள் நாளைக்கு பதிலுக்கு என்னவெல்லாம் பிரதி உபகாரம் கேட்பார்கள் என்பதை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒட்டுமொத்த அருவருப்பான சூழ்நிலையில் ஒரே நம்பிக்கைக் கீற்று, தேர்தல் ஆணையத்தின் கறாரான செயல்பாடு மட்டும்தான். ஆனால் அது போதாது. இன்னும் பல தேர்தல்களுக்கு இப்படிப்பட்ட கெடுபிடிகள் தொடர்ந்தால்தான் கட்சி அமைப்பு சீர்படும்.

இப்போதும் பணபலமும், இலவச ஆசை காட்டி வோட்டு வாங்கும் உத்தியும் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன.

இந்தச் சூழலில் எந்தக் கட்சிக்கு வோட்டுப் போடுவது என்று பலரும் என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நம் முன்னால் மூன்று வழிகள்தான் இருக்கின்றன.

வழி 1: 49 ஓ. எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமை. இப்போதைக்கு இது மின் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ரகசிய பட்டனாக இல்லை. எனவே பகிரங்கமாக சொல்லித்தான் இதைப் பதிவுசெய்ய வேண்டும். எனவே பெருவாரியானவர்கள் இதைப் பயன்படுத்தும் வாய்ப்புக் குறைவு. பெருவாரியாக 49 ஓ விழுந்தால்தான் கட்சிகளுக்குக் கலக்கம் ஏற்படும். ஒரு சில நூறு 49 ஓக்கள் பயன் தராது. என் கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று நமக்கு நாமே வலியுறுத்திக் கொள்ள இது உதவும்.

வழி 2: தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு மட்டைகளுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்தான்.

(இது-பற்றி நான் எழுதிய நையாண்டி நாடகம் ‘ஆப்புக்கு ஆப்பு’ தேர்தலுக்குச் சில தினங்கள் முன்னால் எங்கள் பரீக்‌ஷா குழுவால் நடிக்கப்பட இருக்கிறது.) கடந்த ஆட்சிக் காலங்களைப் பார்த்தீர்களானால், 1996-2001ல் தி.மு.க ஆட்சியும், 2001-2006ல் அ.தி. மு.க ஆட்சியும் சகிக்கக்கூடியனவாக இருந்தன. ஆனால், 1991-96 அ.தி.மு.க ஆட்சியும் 2006-2011 தி.மு.க ஆட்சியும் சகிக்க முடியாதவை. மூன்றாவது அணியாக உருப்படியாக எதுவும் உருவாவதற்கு இன்னும் 15 வருடங்கள் ஆகலாம். அதுவரை எந்த ஒரு கழகத்தையும் தொடர்ந்து பத்தாண்டு ஆள விடாமல், 5 வருடங்களுக்கு ஒரு முறை கேரளா மாடலில் மாற்றி மாற்றித் தேர்ந்தெடுத்து நம்மை நாமே கொஞ்சம் ஆறுதல்படுத்திக் கொள்ளலாம்.

வழி 3: வேட்பாளர் அடிப்படையில் பார்ப்போம். சரியான கட்சியில் இருக்கும் தப்பான ஆள் என்று சொல்ல எவருமில்லை. ஏனென்றால் சரியான கட்சிகளே இல்லை. தப்பான கட்சியில் இருக்கும் சரியான ஆட்களாக யாரேனும் இருக்கிறார்களா என்று தேடலாம். (சரியான ஆளாக இருந்தால் அவர் ஏன் தப்பான இடத்துக்குப் போகிறார் என்ற தர்க்க நியாயம் தனி.) இரு பிரதான அணிகளிலும் இருக்கும் வேட்பாளர்களில் இருப்பதில் சுமாரானவர் என்பவருக்கு வோட்டுப் போடலாம். நல்ல சுயேச்சைகளுக்குப் போட்டுப் பயனில்லை. எப்படியும் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். அவற்றில் பெருவாரியாக முழு அயோக்கியர்களுக்கு பதில், ஓரளவு நல்லவர்களை யாவது ஜெயிக்க வைக்கலாம்.

மூன்றில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ செய்யுங்கள். ஆனால் வோட்டுப் போடாமல் மட்டும் இருந்து விடாதீர்கள். மூன்றில் எப்படி வோட்டுப் போட்டாலும் தொலைநோக்கில் மாற்றம் வர அது நிச்சயம் உதவும்.

இந்த வாரப் பூச்செண்டு!

தேர்தல் ஆணையத்துக்கு.

இந்த வார சந்தேகங்கள்!

1. விஜயகாந்த் குடித்துவிட்டு வந்து பிரசாரத்தில் உளறுகிறார் என்று பிரசாரம் செய்யும் சன், கலைஞர் தொலைக்காட்சிகள், ஒரு முதலமைச்சர் மனைவி, துணைவி என்று இருவருடன் பகிரங்கமாக வாழ்க்கை நடத்துவதை குடிக்குச் சமமான ஒழுக்கக்கேடாக ஏன் கருதவில்லை ?

2. வேட்பாளர்கள், தலைவர்கள் மட்டும்தான் மது குடிக்காத ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டுமா? ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை படைத்த வாக்காளர்களுக்கும் அந்த ஒழுக்கம் வேண்டாமா? வருடத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்குக் குடிப்பவர்கள் தொகை குறைந்தபட்சக் கணக்குப்படி ஒரு கோடிக்கு மேல். குடிப்பழக்கம் உள்ள இந்த ஒரு கோடி வாக்காளர்கள் வோட்டுப் போடும் தகுதி உடையவர்களா, இல்லையா?

3. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பை என்னவோ 11 பேருக்கு மட்டும்தான் உரியது. ஆனால் தேசமே அதைத் தங்கள் வெற்றியாகக் கொண்டாடுவது போலத்தான் தி.மு.க.வினரும் கூட்டணியினரும் கட்சியில் ஒரு சிலர் மட்டுமே தேர்தலில் வாய்ப்பு பெற்று வெற்றியடைவதைக் கருத வேண்டும் என்று கருணாநிதி அறிவுறுத்தியிருக்கிறார். அதாவது கிரிக்கெட் 11 பேர் மாதிரி அவர் குடும்பத்தினர் 11 பேர் எல்லா லாபங்களையும் அடைவதை எல்லா தி.மு.க.வினரும் கொண்டாட வேண்டும் என்று இதற்கு அர்த்தமா?

4. அமைச்சராக இருக்கையில் ராசா மீது கடும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட தருணத்தில் அவரைப் புகழ்ந்து தொழிலதிபர் ரத்தன் டாட்டா கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றிக் கேட்ட போது, ‘அப்படி ஒரு கடிதமும் தமக்கு வர வில்லை’ என்றார் கருணாநிதி. இப்போது நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு விசாரணையில் டாட்டா தம் கைப்பட கடிதம் எழுதியதாகவும், நீரா ராடியா தாம் அதை நேரில் கருணாநிதியிடம் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார்களே? கருணாநிதிக்கு செலக்டிவ் அம்னீஷியாவா? ராடியா வேறு யாராவது கருணாநிதியிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டாரா?

5. ஒரே மேடையில் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் பேசுவார்களா என்று சவால் விடும் தி.மு.கவினர், ஏன் ஒரே மேடையில் ராகுல் காந்தியும் கருணாநிதியும் தோன்றுவதில்லை என்பதை விளக்குவார்களா? ராகுல் காந்தி, ஸ்டாலினோடு கூட ஒரே மேடையில் தோன்ற முன் வருவதில்லையே ஏன் ?

6. தேர்தல் நேரத்தில் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகம் இயங்குவதால் எல்லாம் ஒழுங்காக நடைபெறுவது பற்றி மக்களிடையே பெரும் மகிழ்ச்சி இருக்கிறது. இதே அதிகாரிகள்தானே நிர்வாகத்தை எப்போதும் கவனித்து வருகிறார்கள்? ஏன் இதே போல சுதந்திரமாக, சட்டப்படி எப்போதும் நடப்பதில்லை? தடுப்பது யார் என்று அவர்கள் அடையாளம் காட்ட வேண்டாமா?

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: