ஒரு துளி மானுடம் – அஞ்சுமனின் பெருநாள் சந்திப்பு..


Advertisements

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..


 

அஞ்சுமன் அறிவு மையம் ஏற்பாட்டில் 4.8.18 அன்று நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நோயறிதல் முகாமை டாக்டர் L.M. ஷெரீப் தலைமையில் நடைபெற்றது. ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி மௌலவி A. பக்ருதீன் பாரூக் மற்றும் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹாமித் முன்னிலை வகித்தனர்.

அஞ்சுமன் செயலாளர் A. லியாகத் அலி அவர்கள் நிகழ்ச்சி குறித்து அறிமுகம் செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்

முகாமில் India turns Pink அமைப்பினர் தெளிவான வழிகாட்டுதல்களுடன் Power point Presentation ஐயும் வழங்கி கலந்துகொண்ட மகளிர்க்கு பெரும் பயனை அளித்தனர். நிகழ்ச்சியின் இறுதி ஒரு மணிநேரத்திற்கு அரங்கில் இருந்த ஆண்கள் முழுமையாக வெளியேறி, பங்கேற்ற பெண்கள் தங்களின் ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பம்சம்..

எங்கள் பணியைக் காட்டிலும் மும்மடங்கு சிறப்பாக இருக்கிறது ஷாஜஹானின் புத்தகம் என்பது ITP அமைப்பினரின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அதிலும் செவிலியர் சகோ. கீதா பேசும்போது, “தொடர்ந்து இந்த களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கே பல விசயங்களைத் தெளிவுபடுத்தியது இந்த நூல்” என்று சொன்னதில் ஷாஜியைக் காட்டிலும் நாங்கள் அனைவரும் பெருமை கொண்டோம்.

பிரயோஜனமான மாலைப் பொழுதை செம்மையாகத் திட்டமிட்டு நடத்திய அஞ்சுமன் மகளிர் மையப் பொறுப்பாளர்கள் பாராட்டுக் குரியவர்கள். 2030க்குள் மார்பகப் புற்றுநோயால் ஒருவர் கூட மரணிக்கக் கூடாது என்ற குறிநோக்கில் அயராது பாடுபடும் India Turns Pink, Puducherry Chapterக்கு வாழ்த்துகள்..

அஞ்சுமன் மகளிர் மையம் தலைவர் தஸ்லிமா மலிக் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

செல்பேசி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு நிறைவு விழா


கோட்டக்குப்பம் குவைத் ஜமாஅத் நிதி நல்கையில் அஞ்சுமனில் நடைபெற்ற செல்பேசி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு நிறைவு செய்த 35 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (24.6.18) மாலை நடைபெற்றது.. அஞ்சுமன் செயலாளர் ஜனாப். லியாகத் அலி @ கலீமுல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் குவைத் ஜமாஅத் பொறுப்பாளரும் ஜெய்னுதீன் யாசீன், பயிற்சி வழங்கிய மையத்தின் இயக்குனர் சக்திவேல், ஜமாஅத்தின் உள்ளூர் நிர்வாகிகள் ஜமாஅத் உறுப்பினர்கள் என திரளாக கலந்து சிறப்பித்தனர்.

பெரும் சிரமத்திற்கு மத்தியில் எதிர்கால நன்மையைக் கருதி கடந்த 3 ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும் அஞ்சுமன் உள்கட்டமைப்பு வசதிகள் உரிய பலனைத் தரத் துவங்கியிருப்பதில் பெரும் மகிழ்ச்சி.. அறிவு தேட்டத்திற்கும் ஆற்றல் படுவதற்கும் அஞ்சுமனை அதிகமதிகமாக மாணவர்களும் இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள முன்வரும் போதுதான் அவர்களுடைய தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற முயற்சிகளை மேற்கொள்வது சாத்தியமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

கோட்டக்குப்பம் ஆவணப்பட விழா


கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் ரீசைக்கிள் பின் வாசகர் வட்டம் (01.05.18) இன்று கோட்டக்குப்பம் வரலாற்றின் முதல் ஆவணப்பட விழாவை கவி கா.மு. ஷெரீஃப் நினைவரங்கில் அரங்கேற்றியது.. விழாவிற்கு அஞ்சுமன் செயலாளர் அ.லியாகத் அலி தலைமை தாங்கினார். வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர் அனஸ் சுல்தான் வரவேற்புரை ஆற்றினார். அஞ்சுமன் செயலாளர் அவர்கள் //முஸ்லிம் சமூகம் ஊடகங்களைக் குறை பேசிக் கொண்டிருப்பதை விடுத்து, அவற்றில் பங்கேற்பது குறித்தும் பங்களிப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.. தங்களின் கலாச்சார, பண்பாட்டு சிக்கல்களை ஆவணப்படுத்த தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள இதுபோன்ற விழாக்கள் பயனளிக்கும்// என்ற அஞ்சுமனின் நம்பிக்கையைத் தன் தலைமையுரையில் பதிவு செய்தார்.

விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் தோழர்.கருப்பு கருணா, //சினிமா, இசை ஹராம் என்று நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்ட சமூகத்தில், ஆவண மற்றும் குறும்படம் குறித்த பார்வையும் உரையாடலும் நடைபெறுவது உள்ளூர் திறன்களை வெளிக்கொணர பேருபகாரமாக அமையும். அதுவே இந்த விழாவின் மாபெரும் வெற்றி// என்றார்.

சுமார் 10.45 மணியளவில் தமிழ் முஸ்லிம்களின் வேர்களைத் தேடும் “யாதும்” ஆவணப்படம் திரையிடப்பட்டது.. படம் முடிந்த பிறகு, படத்தின் இயக்குநர் கொம்பை அன்வர் , படத்தை எடுக்க நேர்ந்த பின்னணியையும் தமிழ்ச் சமூகத்தில் இயல்பாகவே இழையோடும் இணக்கக் கூறுகளைத் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து //ஆவணப்படம் எடுப்பதை எளிமையான விசயமாக கருதாமல், மக்களுக்கான குரலைப் பதிவு செய்யும் பணியாக சிரத்தையோடு செய்ய வேண்டும். ‘யாதும்’ ஆவணப்படத்தின் ஒரு ஃபிரேம் கூட இதுவரை யாராலும் ஆட்சேபிக்கப் படவில்லை என்பதே அதன் உண்மைத் தன்மையையும் பின்னணியில் உள்ள உழைப்பையும் பறைசாற்றும்// என்று பேசினார்..

இரண்டாவது அமர்வில் முதுகெலும்பு (அழிந்து வரும் விவசாயம்), டுலெட் (வாடகை வீடு பிரச்சனை), முங்கேசா (தண்ணீர் பிரச்சனை குறித்த ஈரானிய படம்), கோமல் (குழந்தைகள் பாலியல் தொந்திரவு), கரம்கொடு (இரத்ததானத்தை வலியுறுத்த உள்ளூர் இளைஞர்கள் தயாரித்த படம்) என பல்வேறு விருது பெற்ற படங்கள் திரையிடப்பட்டன. இந்த படங்கள் குறித்தப் பார்வையை பதிவு செய்த தாகூர் கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேரா.இளங்கோ நாகமுத்து சுவைஞர்களோடு சுவாரஸ்யமான உரையாடலை நிகழ்த்தினார். முழுநீள திரைப்படங்களுக்கும், ஆவண மற்றும் குறும்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிச் சொன்னது சிறப்பாக அமைந்தது.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் தொடங்கிய மூன்றாம் அமர்வில், நடந்த கதை (சாதிய ஒடுக்குமுறை), மக்கு (படிப்பு தீவிரவாதம்) ஆட்டோக்கார அண்ணன் (ஆட்டோக்காரர் அவலம்), அஞ்சுமன் நூலகம் (வரலாற்று ஆவணம்), God is Greatest (சிரிய உள்நாட்டுக் கலவரத்தில் கொல்லப்படும் சாமானியர்கள்), மாற்று விவசாயம் குறித்த படம், Refuge (அகதிகள் குறித்த படம்) ஆகியவை திரையிடப்பட்டன. மேற்படி படங்கள் குறித்து ஈழ எழுத்தாளர் திரு. கவுரிபால் சாத்திரி கருத்துரைத்தார். ஒரு அகதியின் உணர்வு சார்ந்த போராட்டத்தை சொந்த அனுபவத்தில் எடுத்துரைத்த சாத்திரி, //என் தாயை முப்பது ஆண்டுகளுக்கு பிறகும் தம்பியை 32 ஆண்டுகளுக்கு பிறகும் சந்தித்த அவலத்தை// உணர்ச்சி பிழம்பாகப் பேசினார்.

நிறைவு நிகழ்வாக காயிதே மில்லத் கதை திரையிடப்பட்டது. விழாவில் ஊடகவியலாளர் திரு. PNS. பாண்டியன் வழங்கிய வாழ்த்துரையில் கோட்டக்குப்பம் புதுவையோடு இல்லாதது குறித்தும் கோட்டக்குப்பத்தில் தாம் இல்லாதது குறித்தும் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார். இறுதியாக நிறைவுரையாற்றிய புதுவை நகர ஜமாத்தே இஸ்லாமி தலைவர் அப்துல் ஹமீத் , இன்றைய சூழலில் ஊடக வலிமைதான் ஒரு சமுதாயத்தின் நிஜ வலிமை என்பதைக் குறிப்பிட்டு, அந்த ஆயுதத்தை கைகொள்வது குறித்த சிந்தனையை விதைத்து விழாவை முடித்து வைத்தார்..

குறும்படங்களை இயக்கி வெளியிட்ட இளவல்கள் அனைவருக்கும் “கலைக்குரிசில்” விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. முடிவில் சிறப்பு விருந்தினர் அனைவரும் ரீ சைக்கிள் பின் வாசகர் வட்டத்திற்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினர். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நண்பர் ஸ்ரீதரன் “நாத்திகனின் பிரார்த்தனைகளோடு” கௌரவப்படுத்தியது அஞ்சுமன்.. நிறைவாக அஞ்சுமன் இளைஞர் நல செயலர் அப்துல் மாலிக் நன்றியுரை யாற்றினார்..

கட்டுரை உதவி / தோழர் கலீமுல்லாஹ்

மாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி


கோட்டக்குப்பம் வரலாற்றில் முதன் முறையாக மாணவ மாணவிகளுக்கு பெரிய அளவில் திறனறி போட்டி அஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் இன்று ஷாதி மஹாலில் நடைபெற்றது. மாணவ மாணவிகள் பெருமளவில் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அஞ்சுமன் மகளிர் மன்றம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் 

 

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விரைவில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

 

அஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி


கோட்டக்குப்பம் மாணவ மாணவிகளுக்கு முதன் முறையாக பெரிய அளவில் திறனாய்வு போட்டி அஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் நடைபெற இருக்கிறது.

கல்வி ஆண்டு விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படும் வகையில் இந்த போட்டியில் பெருவாரியான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு,  தங்கள் திறன் அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை இந்த போட்டியில் கலந்து கொள்ள வலியுறுத்தவேண்டுகிறோம்.

 

அஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்


லயோலா தொழிற்கல்வி நிறுவனத்தின் இயக்குனர் திருமிகு அருண் கண்ணண் அவர்களுடன் ஈழம் குறித்த ஓர் உரையாடல் இன்று 11/03/2018 அஞ்சுமன் நூலகத்தில் நடைபெற்றது.