நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை


 

நிலத்திலிருந்து விவசாயம் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும்.

நிலத்தடி நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்தக் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் கட்டண முறை நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசின் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, தொழிற்சாலைகள், புட்டிகளில் குடிநீரை அடைக்கும் குடிசைத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை நிலத்தடி நீரை எடுப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறுத் தேவைகளுக்காக ஓர் அங்குலத்துக்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கன மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்கள், ஒரு கன மீட்டருக்கு ரூ.2 வரை கட்டணம் செலுத்த வேண்டும்; வீடுகளும் மத்திய அரசிடம் மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டுமாம்.

இனி வரும் காலங்களில் நீருக்காக மூன்றாவது உலகப் போர் மூளும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்படும் சூழலில் நிலத்தடி நீரை பாதுகாப்பது அவசியமானது. அதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வகை நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை. தொழிற்சாலை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதும் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.

ஆனால், வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். அவ்வாறு இருக்கும் போது குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும்.

நிலத்தடி நீருக்கு கட்டணம் அறிவித்துள்ள மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம், இந்த அறிவிப்பால் மக்கள் கோபம் அடைவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு முன்கூட்டியே இரு விளக்கங்களை அளித்திருக்கிறது. முதலாவது நிலத்தடி நீருக்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்பது அதற்கான விலை அல்ல; மாறாக நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கான செலவு என்பதாகும்.

இரண்டாவது வேளாண் தேவைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்பதாகும். இரண்டுமே மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்படும் விளக்கம் ஆகும். நிலத்தடி நீருக்கான கட்டணம் என்ன பெயரில் வசூலிக்கப்பட்டாலும் அது அதற்கான விலை தான்.

ஹிட்லருக்கு புத்தர் என்று பெயர் மாற்றம் செய்தால், அவர் எப்படி ஆசைகளைத் துறந்து, அமைதியை நேசிப்பவர் ஆகி விட மாட்டாரோ, அதேபோல் தான் பரமாரிப்புச் செலவு என்று கூறுவதாலேயே அது நிலத்தடி நீருக்கான கட்டணம் இல்லாமல் போய்விடாது.

அடுத்ததாக, விவசாயத்திற்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவிப்பை நினைத்து விவசாயிகளும், மற்றவர்களும் நிம்மதி அடைய முடியாது. இது ஓர் ஏமாற்று வேலை ஆகும். வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு கட்டணம் இல்லை என்பது தற்காலிக சலுகை மட்டுமே.

அடுத்த சில ஆண்டுகளில் வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது என்பது 1987 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய தண்ணீர் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

இதற்காக 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய வரைவு தண்ணீர் கொள்கையில், விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும், தண்ணீர் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும், தண்ணீர் விநியோகத்தை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தண்ணீர் கொள்கையை மத்திய அரசு இறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற தேசிய தண்ணீர் வார விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிலத்தடி நீர் இலவசமாகக் கிடைப்பதால்தான், அதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. நீர் இலவசப் பொருளல்ல. அது ஒரு வணிகப் பொருள். உரிய விலை கொடுத்துத்தான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதை தனியார் வசமோ அல்லது தனியாரோடு கூட்டுச் சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலத்தடி நீர் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட, தேசிய நீர் கொள்கை-2012 வடிவமைக்கப்படுகிறது என்று கூறினார்.

2012 தேசிய நீர் கொள்கை, அதுதொடர்பான அப்போதைய பிரதமரின் வார்த்தைகளுக்குத் தான் இப்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு நிலத்தடி நீர்த்தேவை 2,53,00,000 கோடி லிட்டர் ஆகும். இதில் 10 விழுக்காடு, அதாவது 25,00,000 கோடி லிட்டர் மட்டுமே தொழிற்சாலைகள் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கானது ஆகும். மீதமுள்ள 2,28,00,000 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வேளாண் பயன்பாட்டுக்கானது ஆகும்.

நிலத்தடி நீரை நிர்வகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் போது, 90% நிலத்தடி நீர் இலவசமாக பயன்படுத்தப்படுவதை தனியார் நிறுவனங்கள் அனுமதிக்காது. அப்போது நிச்சயமாக வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் ஆபத்தை இப்போதே தடுக்க வேண்டும்.

எனவே, குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாடு, வேளாண் பயன்பாடு ஆகியவற்றுக்கான நிலத்தடி நீருக்கு எக்காலத்திலும், எந்த பெயரிலும் கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு உறுதியளிக்க வேண்டும். 2012 ஆம் ஆண்டின் தேசிய தண்ணீர் கொள்கையில் இந்த வாக்குறுதியை அரசு சேர்க்க வேண்டும்.

Advertisements

செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?


உங்களுடைய வேலிடிட்டி XX-ம் தேதியுடன் முடிவடைகிறது; எனவே அவுட்கோயிங் கால்கள் அனைத்தும் XX-ம் தேதியுடன் நிறுத்தப்படும். சேவையைத் தொடர வேண்டுமென்றால் உடனே வேலிடிட்டி ரீசார்ஜ் செய்யவும்” – இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்குக் கடந்த வாரத்தில் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வந்திருக்கலாம்; வராதவர்களுக்கு இனிமேல் வரும். எதற்காக திடீரென இப்படி வருகிறது எனக் குழம்புகிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்!
செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?! #Alert

மேலே பார்த்தது போலவே எனக்கும் சமீபத்தில், “உங்கள் அவுட்கோயிங் கால்கள் இந்தத் தேதியுடன் நிறுத்தப்படும் என ஒரு மெசேஜ் வந்தது. இத்தனைக்கும் என்னுடைய மெயின் பேலன்ஸ் ஜீரோவும் இல்லை; சரி, ஒரு 20 ரூபாய்க்கு டாப் அப் செய்துவிடுவோம் என நினைத்து டாப் அப் செய்தேன். இப்போது என் மெயின் பேலன்ஸ் 32 ரூபாய். ஆனாலும், அந்த மெசேஜ் வருவது நிற்கவில்லை. ஏதோ டெலிகாம் ஆபரேட்டர் பிரச்னை என நினைத்து ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால், “உங்களுடைய வேலிடிட்டி முடிந்துவிட்டதால்தான் மெசேஜ் வந்திருக்கிறது. ஒன்றும் பிரச்னையில்லை. வேலிடிட்டிக்காக ஸ்மார்ட் ரீசார்ஜ் ஏதேனும் செய்தால் போதும்; சரியாகிவிடும்” என்றனர். “இதென்ன புதிதாக ஸ்மார்ட் ரீசார்ஜ்… இதுவரைக்கும் மெயின் பேலன்ஸ் மட்டும்தானே டாப்அப் செய்தோம்…” என்றால், இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்தத் திட்டம் தொடங்கியிருக்கிறது. இனிமேல் இப்படித்தான் சார்” என்றனர். சரி, அந்த ஸ்மார்ட் ரீசார்ஜ்தான் என்னவெனப் போய் பார்த்தால், இதுவரைக்கும் நாம் சிம்மிற்கு செலவு செய்த விதத்தையே மொத்தமாக மாற்றும் விதமாக இருக்கிறது அதன் விலைப்பட்டியல். குறைந்தது 35 ரூபாயிலிருந்து தொடங்குகிறது இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ். 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 26.66 ரூபாய் டாக்டைம்; 100 MB டேட்டா. கூடவே 28 நாள் வேலிடிட்டி. இதுதான் இங்கே முக்கியம். இந்த 35 ரூபாய்க்கு அடுத்த 28 நாள் மட்டும்தான் வேலிடிட்டி; அதற்குப் பின்னர் உங்கள் மெயின் பேலன்ஸில் பணம் இருந்தாலும், இல்லையென்றாலும் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் நோ அவுட்கோயிங்; நோ இன்கமிங். இந்த ஸ்மார்ட் ரீசார்ஜில் அதிகபட்ச வேலிடிட்டியே 84 நாள்கள்தான். 245 ரூபாய் பிளான் இது. அதற்குப் பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் மெயின் அக்கவுன்ட்டில் பேலன்ஸ் இருந்தாலும் பயன்படுத்த முடியாது. 

அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் நிறுத்தப்படுவது தொடர்பாக வரும் மெசேஜ்

இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ் இல்லாமல் 5,000 ரூபாய்க்கு டாக்டைம் ரீசார்ஜ் செய்தால்கூட, அந்த 5,000 ரூபாய் என்பது டாக்டைம்க்கு மட்டும்தான் லைஃப்டைம் வேலிடிட்டி. அவுட்கோயிங்கிற்கு 28 நாள்தான். மீண்டும் 35 ரூபாய்க்கு மெயின் பேலன்ஸில் இருந்தோ அல்லது தனியாகவோ ரீசார்ஜ் செய்யவேண்டும். அப்போது அந்த 5,000 ரூபாயிலிருந்து கழிக்கப்பட்ட 35 ரூபாயில் மீண்டும் 26.66 ரூபாய் மெயின் பேலன்ஸில் சேர்ந்துவிடும். இப்படி ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தினால் மட்டுமே இனி இன்கமிங் மற்றும் அவுட்கோயிங். ஒரே ஒருமுறை ரீசார்ஜ் செய்துவிட்டு, எப்போதும் இலவசமாக இன்கமிங் சேவையைப் பயன்படுத்தலாம் என்பதெல்லாம் இனி இல்லை. இந்தப் பிரச்னை. ஏர்டெல்லில் மட்டும் இல்லை. வோடஃபோனிலும்தான். இந்தத் திட்டத்தை முதலில் கொண்டுவந்ததே வோடஃபோன்தான். சரி, எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என டெலிகாம் வட்டாரத்தில் விசாரித்ததில், பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன.


ஜியோவின் வருகைக்குப் பின்னர் இந்திய டெலிகாம் துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அதில் முக்கியமானது பிற டெலிகாம் நிறுவனங்களின் பொருளாதார இழப்பு. இதை ஈடுகட்ட முடியாமல்தான் இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து மூன்றாகிப் போனது. இப்போது இந்தியாவில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் என்றால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் (+ஐடியா) மட்டும்தான். இதுதவிர அரசின் பி.எஸ்.என்.எல். தற்போது இந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்குள்தான் கடும்போட்டி. இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆட்டத்திலிருந்தே விலகிக்கொண்டன. தற்போது இறுதி ஆட்டத்தில் நிற்பது மொத்தம் மூன்றே நிறுவனங்கள்தாம். இதில் ஜியோ மட்டும்தான் அதன் வசந்தகாலத்தில் இருக்கிறது. மற்ற இரு நிறுவனங்களும் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. ஒருபக்கம் ஜியோவோ, வாடிக்கையாளர்கள், வருமானம் என இரண்டிலும் வளர்ந்துவருகிறது. ஆனால், பிற இரு நிறுவனங்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்திய டெலிகாம் துறையில் தற்போது இருக்கும் அளவுக்கு இதற்கு முன்பு பொருளாதார அழுத்தம், கடந்த காலங்களில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே! இந்நிலையில் எதைச் செய்தாவது சந்தையில் தங்களை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகின்றன இந்த இரு நிறுவனங்களும்.

டெலிகாம்

ஒருபுறம் 4G, 5G போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை அதிகரிக்கவேண்டும். அதற்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இன்னொருபுறம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், தக்கவைப்பதற்காகவும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற மதிப்புகூட்டு சேவைகளை வழங்க செலவுசெய்யவேண்டும். இந்தக் கூடுதல் பொருளாதாரச் செலவுகள் தவிர்த்து வழக்கமான பணிகளையும் மேற்கொள்ளவேண்டும். இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில் எப்படித் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் லாபமின்றியே இயங்கமுடியும் எனக் கேட்கின்றன இந்நிறுவனங்கள். டெலிகாம் நிறுவனங்களுக்கு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக இரண்டு வழிகளில் வருமானம் வருகிறது. ஒன்று, வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் செலவு; இரண்டாவது, Mobile Termination Charge (MTC). முதல் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இரண்டாவது விஷயத்தை மட்டும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

இந்தியாவில் இன்கமிங் கால்கள் அனைத்துக்கும் 2003-ம் ஆண்டுக்கு முன்புவரை வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் ட்ராய் இதனை இலவச சேவையாக மாற்றியது. எனவே அவுட்கோயிங் கால்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். டேட்டா போன்றவை கூடுதல் செலவு. இதில் இன்கமிங் காலை பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால், மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் குறிப்பிட்ட கட்டணத்தைப் பரிமாறிக்கொள்ளும். சிறிய உதாரணம் மூலம் பார்ப்போம். ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர் ஜியோ வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்தால் ஏர்டெல், கால் செய்யும் வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளும். இதுதவிர ஏர்டெல் நிறுவனத்திடமிருந்துவரும் காலை, ஜியோ தன்னுடைய வாடிக்கையாளருடன் இணைக்க வேண்டுமென்றால் அதற்கு ஜியோவும் பணம் கேட்கும். இதை ஏர்டெல்லிடமிருந்து பெற்றுக்கொள்ளும். இந்த விதி, பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கால்களை தங்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த முறைக்கு Calling Party Pays என்று பெயர். இதனை முற்றிலுமாக எதிர்க்கிறது ஜியோ.

வோடஃபோன்

அதாவது, கால்களை கனெக்ட் செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் தருவதே அவர்களின் நெட்வொர்க்கிற்கான முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்காகத்தான். ஆனால், தற்போது சந்தையில் இருக்கும் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை, இதுவரை பெற்ற லாபம் மூலம் திரும்பப்பெற்றுவிட்டன. எனவே, இந்த MTC கட்டணத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ட்ராயிடம் சொன்னது ஜியோ. மற்ற நிறுவனங்களோ இப்போது MTC-க்காக பிற நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிமிடத்துக்கு 14 பைசாவில் இருந்து 30 பைசாவாக உயர்த்தவேண்டும் என்றன. இந்த விவாதம் நடந்தது கடந்த ஆண்டு பிற்பகுதியில். இறுதியில் இதுதொடர்பாக புது அறிவிப்பை வெளியிட்ட ட்ராய், MTC கட்டணத்தை 14 பைசாவிலிருந்து 6 பைசாவாகக் குறைத்தது. இந்த விதிமுறை கடந்த ஆண்டு அக்டோபர் முதலே அமலுக்கு வந்தது. இதனால் ஜியோ தவிர பிறநிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன. இந்தப் பிரச்னை ஒருபக்கம் என்றால், குறைந்துகொண்டே வந்த ARPU இந்த நிறுவனங்களை இன்னும் சிக்கல்படுத்தின.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் அந்த மொபைல் நிறுவனத்துக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்கிறாரோ அதுதான் அந்நிறுவனத்தின் ARPU (Average Revenue Per User). இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவின்படி ஜியோவின் ARPU 135 ரூபாய். ஏர்டெல் ARPU 101 ரூபாய். இந்த ARPU ஜியோவைத் தவிர மற்ற நிறுவனங்களுக்குத் தொடர்ந்து குறைந்துவருகிறது. இதற்குக் காரணம் டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங்கிற்காக ஜியோவையும், இன்கமிங் காலிற்காக மட்டும் ஏர்டெல் மற்றும் வோடஃபோனையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதுதான். உதாரணமாக ஒருவர் ஜியோ மற்றும் வோடஃபோன் என இரண்டு சிம்களைப் பயன்படுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் டேட்டாவுக்காக ஜியோவைத் தொடர்ந்து பயன்படுத்துவார். இதனால் ஜியோவுக்குத் தொடர்ந்து வருமானம் வரும். மேலும், ஜியோவின் வாய்ஸ் காலும் இலவசம் என்பதால் வாடிக்கையாளருக்குக் கூடுதல் லாபம். இதுபோக பழைய எண்ணாகவோ அல்லது பேக்அப்பிற்காக மட்டும் வோடஃபோனைப் பயன்படுத்துவார். ஜியோவே இலவசம்தான் என்பதால் தொடர்ந்து அவுட்கோயிங் சேவைகளையும் அதிலேயே பயன்படுத்துவார். ஆனால், அதே சமயம் இன்கமிங் சேவைக்காக மட்டும் வோடஃபோன் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவார். இது வோடஃபோனுக்குப் பெரியளவில் எவ்வித வருமானத்தையும் ஈட்டித்தராது.

ஜியோ

அந்த வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு 5 மணி நேரம் மட்டும் இன்கமிங் கால் பேசுகிறார் எனில், (300 நிமிடங்கள் * 0.06 பைசா) 18 ரூபாய் மட்டுமே வோடஃபோனுக்குப் பிற நிறுவனங்களிடமிருந்து வருமானமாக வரும். வேறு எவ்வித வருமானமும் வராது. இதுபோன்ற வாடிக்கையாளர்களால் வோடஃபோனின் மொத்த ARPU குறையும். இந்தக் கதை ஏர்டெல்லுக்கும் பொருந்தும். இப்படி ARPU தொடர்ந்து குறைந்தால் அந்நிறுவனத்தின் லாபம், பங்கு விலை போன்ற பல விஷயங்களில் அது எதிரொலிக்கும். எனவே இதுபோன்ற வாடிக்கையாளர்களை நீக்குவதே சரி என்ற முடிவை எடுத்திருக்கின்றன இந்நிறுவனங்கள். அதனால்தான் தற்போது வேலிடிட்டி பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யச்சொல்லி வற்புறுத்துகின்றன. இந்தப் புதிய முடிவின்மூலம் ஒன்று வாடிக்கையாளர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்து தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து சிம்மை அப்படியே வைத்திருந்து டீஆக்டிவேட் செய்துவிட்டு வெளியேறிவிட வேண்டும். நெட்வொர்க்கில் சுமையாக இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிட்டு, மற்ற வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கிட முடியும். இதுதான் இந்நிறுவனங்களின் தற்போதைய திட்டம். 

மேலும், இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. ஜியோவிடம் ஏர்டெல்லும், வோடஃபோனும் தோற்பது டேட்டா விலை விஷயத்தில்தான். அதனால்தான் டேட்டா என்றால் ஜியோவைப் பயன்படுத்திவிட்டு, கால் செய்யவேண்டுமென்றால் மட்டும் இந்நிறுவனங்களை அதிகம்பேர் நாடுகின்றனர். இந்த டேட்டா + வாய்ஸ் கால் விகிதத்தைச் சரிசெய்யவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றன இந்நிறுவனங்கள். தற்போது இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள ஸ்பெஷல் ரீசார்ஜ் பேக்குகள் மற்றும் ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்குகளில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இரண்டையும் சமஅளவில் கலந்தே கொடுக்கின்றன. நீங்கள் 35 ரூபாய் கொடுத்து ஏர்டெல் ரீசார்ஜ் செய்தால்கூட 100 MB டேட்டா கிடைக்கும். 245 ரூபாய் என்றால், ஒரு நாளைக்கு 2 GB டேட்டா கிடைக்கும். இதைப் பயன்படுத்திதான் ஆகவேண்டும். இதன்மூலம் டேட்டாவுக்கு ஜியோ, காலிற்கு ஏர்டெல் என்ற நிலைமை மாறும் என நம்புகின்றன இந்நிறுவனங்கள். இந்தப் புதிய மாற்றத்தால் இதுவரைக்கும் இருந்த 20, 30, 100 ரூபாய் டாப்அப் பேக்குகள் அனைத்தையும் தற்போது இவை நீக்கிவிட்டன. 10 ரூபாய் டாப்அப் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் மெயின் பேலன்ஸ் மட்டும்தான். வேலிடிட்டி இல்லை. எனவே காம்போ பேக்குகள்தான் இவற்றில் ஒரே வழி.

ஏர்டெல்

இந்த மாற்றங்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட் ஆகிவருகின்றன. ஏர்டெல் இப்போதைக்கு தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் (மேற்கு) மற்றும் பஞ்சாப் ஆகிய தொலைத்தொடர்பு வட்டாரங்களில் மட்டுமே இதை அமல்படுத்தியிருக்கிறது. இங்கே சோதனை முயற்சிகள் முடிந்தபின்பு நாடு முழுவதும் விரிவுசெய்யப்படும். வோடஃபோனும் இப்போதுதான் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இன்னும் சில நாள்களில் பலருக்கும் மேலே பார்த்த மெசேஜ்கள் வரத்தொடங்கலாம். எவ்வித ரீசார்ஜ்களும் செய்யாமல் வெறும் மெயின் பேலன்ஸூடன் மட்டும் சிம் கார்டை வைத்திருக்கலாம் என்பது மாறி இனி 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டிய நிலைமை வந்திருக்கிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் டெலிகாம் சேவை என்பது மீண்டும் செலவுமிக்க ஒன்றாக மாறியிருக்கிறது. அவ்வளவுதான். சரி, ஜியோ என்ன செய்யவிருக்கிறது?

ஜியோவைப் பொறுத்தவரை இவையெல்லாம் பிரச்னையே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பலரும் இந்த மாற்றங்கள் பிடிக்காமல் MNP மூலம் ஜியோவுக்கு மாறலாம். அது சாதகமான அம்சமே. இரண்டாவது, ஜியோ இதுபோல புதிதாக எந்த மாறுதல்களும் தன்னுடைய சேவையில் செய்யத் தேவையில்லை. ஜியோ முதல் வருடம் தன் சலுகையை அறிமுகம் செய்தபோதே கட்டணத்தில் தெளிவான திட்டமிடலுடன் களமிறங்கியது. வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி, மியூசிக் போன்ற கூடுதல் சேவைகளை அனுபவிக்க வேண்டுமென்றால், பிரைம் உறுப்பினராக வேண்டுமெனச் சொல்லி அப்போதே ஆண்டுக்கு 99 ரூபாய் வாங்கியது. அதன்பின்பு கட்டண விவரங்களில் மாறுதல்கள் செய்த ஜியோ, வேலிடிட்டி விஷயத்தையும் அதற்கேற்ப மாற்றியது. இப்போது ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்யவேண்டுமென்றால் குறைந்தது 98 ரூபாய் செலவிட வேண்டும். அப்போதுதான் வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டையும் பெறமுடியும். இதுவே  ஜியோ போன் என்றால் 49 ரூபாய். இந்தத் திட்டங்கள் ஏற்கெனவே வேலிடிட்டி மற்றும் கட்டணத்தில் சரியாக இருப்பதால் ஜியோவுக்குப் பெரிய பிரச்னையில்லை. வாடிக்கையாளர்களுக்குத்தான் சிக்கல்கள் காத்திருக்கின்றன.

நன்றி ; விகடன்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..


 

அஞ்சுமன் அறிவு மையம் ஏற்பாட்டில் 4.8.18 அன்று நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நோயறிதல் முகாமை டாக்டர் L.M. ஷெரீப் தலைமையில் நடைபெற்றது. ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி மௌலவி A. பக்ருதீன் பாரூக் மற்றும் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹாமித் முன்னிலை வகித்தனர்.

அஞ்சுமன் செயலாளர் A. லியாகத் அலி அவர்கள் நிகழ்ச்சி குறித்து அறிமுகம் செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்

முகாமில் India turns Pink அமைப்பினர் தெளிவான வழிகாட்டுதல்களுடன் Power point Presentation ஐயும் வழங்கி கலந்துகொண்ட மகளிர்க்கு பெரும் பயனை அளித்தனர். நிகழ்ச்சியின் இறுதி ஒரு மணிநேரத்திற்கு அரங்கில் இருந்த ஆண்கள் முழுமையாக வெளியேறி, பங்கேற்ற பெண்கள் தங்களின் ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பம்சம்..

எங்கள் பணியைக் காட்டிலும் மும்மடங்கு சிறப்பாக இருக்கிறது ஷாஜஹானின் புத்தகம் என்பது ITP அமைப்பினரின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அதிலும் செவிலியர் சகோ. கீதா பேசும்போது, “தொடர்ந்து இந்த களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கே பல விசயங்களைத் தெளிவுபடுத்தியது இந்த நூல்” என்று சொன்னதில் ஷாஜியைக் காட்டிலும் நாங்கள் அனைவரும் பெருமை கொண்டோம்.

பிரயோஜனமான மாலைப் பொழுதை செம்மையாகத் திட்டமிட்டு நடத்திய அஞ்சுமன் மகளிர் மையப் பொறுப்பாளர்கள் பாராட்டுக் குரியவர்கள். 2030க்குள் மார்பகப் புற்றுநோயால் ஒருவர் கூட மரணிக்கக் கூடாது என்ற குறிநோக்கில் அயராது பாடுபடும் India Turns Pink, Puducherry Chapterக்கு வாழ்த்துகள்..

அஞ்சுமன் மகளிர் மையம் தலைவர் தஸ்லிமா மலிக் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

கால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை


கோட்டக்குப்பம் முராது வீதி பழையபட்டின பாதை தொடங்கி சக்கில் வாய்க்கால் வரை முழுவதும், மற்றும் பள்ளிவாசல் தெரு, தைக்கால் திடல் போன்ற பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் பகுதிகள் உள்ள வாய்க்கால்களை சரி வர பராமரிக்காமல் விட்டதின் விலைவாக அதில் மணல், குப்பை சேர்ந்து கால்வாயின் ஆழம் குறைந்துள்ளது. இதன் காரணமாக மழை நீர் மற்றும் கழிவு நீர் தெருவில் ஓடி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் அதிகம் கூடும் ஷாதி மஹால் மற்றும் தர்கா அருகில் தண்ணீர் தேங்கி நின்றும் தெருவில் ஓடியும் அருவருப்பை உருவாகியுள்ளது.

வருகிற மழை காலத்தை கருத்தில் கொண்டு பேரூராட்சி துரித நடவடிக்கை எடுத்து அணைத்து வாய்க்கால்களையும் துர் வாரி கழிவு நீர் மற்றும் மழை நீர் தெருவில் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதனை வலியுறுத்து கிஸ்வா அமைப்பினர் சார்பாக இன்று பேரூராட்சி செயல் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

கொழுப்பைக் குறைப்போம்


மனித உடலுக்குக் கொழுப்புச்சத்து தேவையானது; முக்கியமானது. ஆனால், அதன் அளவு கொஞ்சம் அதிகமானாலும் உடலுக்கு ஏற்படுவது பிரச்னை.

கொழுப்புச்சத்தில் எத்தனை வகைகள் இருக்கின்றன, உடலிலிருக்கும் அதன் அளவை எப்படித் தெரிந்துகொள்வது, எத்தனை நாளைக்கு ஒருமுறை அதன் அளவைப் பரிசோதிக்க வேண்டும், அது அதிகரிக்க என்ன காரணம், உணவுப்பழக்கத்தை மாற்றுவதால் அதை எப்படிக் கட்டுப்படுத்தலாம்…

ஏ டு இசட் தகவல்களைத் தருகிறார்கள் பொது மருத்துவர் அர்ஷத் அகில், ஊட்டச்சத்து நிபுணர் டேப்னி மற்றும் இரைப்பை, குடல் சிறப்பு மருத்துவர் ஜீவன்குமார்.

கொழுப்புச்சத்து

கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச்சத்து போன்றவை உடலுக்கு அவசியமானவை. உடலின் சீரான இயக்கத்துக்கும், ஆற்றலுக்கும், உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளை உட்கிரகிக்கவும் இவை உதவும். கொழுப்புச்சத்திலிருக்கும் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறா கொழுப்பு (Unsaturated Fat) இரண்டுமே முக்கியமானவை. முற்றிலும் கலோரிகளால் உருவானது என்பதால், தேவைக்கு அதிகமான கொழுப்புச்சத்தை உட்கொண்டால் உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்.

நிறைவுற்ற கொழுப்பு: தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், பால் பொருள்கள், இறைச்சி உணவுகள் போன்றவற்றில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமுள்ளன. இதில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன. நிறைவுற்ற கொழுப்புச்சத்து அறை வெப்பத்தில் திடமானதாக இருக்கும். இது, உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகம் உற்பத்தி செய்யும். இதய பாதிப்புகள் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும் என்பதால், இதைக் குறைந்த அளவிலேயே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நிறைவுறா கொழுப்புஆலிவ் ஆயில், தேங்காய், நிலக்கடலை, கடுகு எண்ணெய், நட்ஸ், மீன் வகைகள், கடல் வாழ் உயிரினங்கள், வால்நட், ஆளி விதை மற்றும் அனைத்து எண்ணெய்களிலும் நிறைவுறா கொழுப்பு இருக்கிறது. இதன் மூலம் ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற சத்துகள் உடலுக்குக் கிடைக்கும். இதில், மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட் (Monounsaturated Fat) மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட் (Polyunsaturated Fat) என இரண்டு வகைகள் உள்ளன.

கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால் என்ன வித்தியாசம்?

நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் செரிமானமானதும், ரத்தத்தால் உட்கிரகிக்கப்படும். அப்படி உட்கிரகிக்கப்படும் சத்துகள், உடல் முழுக்கப் பரவி, உடல் இயக்கத்துக்கு உதவிபுரியும். இதற்கிடையே, கல்லீரல், கொழுப்புச்சத்தை உட்கிரகிக்கத் தொடங்கிவிடும். அங்கே அவை, கொலஸ்ட்ராலாக மாறும். ஆக, உணவு மூலம் உடலுக்குக் கொழுப்புச்சத்து கிடைக்கும். கொழுப்புச்சத்து கல்லீரலை அடையும்போது, கொலஸ்ட்ராலாக மாறி அதன் பணிகளைச் செய்யும். ஆற்றலுக்கும் ஹார்மோன் செயல்பாட்டுக்கும் கொலஸ்ட்ரால் உதவியாக இருக்கும்.

கொலஸ்ட்ரால் வகைகள்

கொலஸ்ட்ராலில்,

* நல்ல கொலஸ்ட்ரால் (ஹெச்.டி.எல் HDL – High Density Lipoproteins),

* கெட்ட கொலஸ்ட்ரால் (எல்.டி.எல் LDL – Low Density Lipoproteins),

* மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் (VLDL – Very Low Density Lipoproteins) என்ற வகைகள் உள்ளன.

இந்த மூன்றும் ரத்தத்தில் கரையாது என்பதால், லிப்போபுரோட்டீனுடன் (Lipoprotein) சேர்ந்த பிறகே உடல் உறுப்புகளைச் சென்றடையும்.

ட்ரான்ஸ் ஃபேட் (Trans Fat)ஒரு பொருளின் ஆயுள்காலத்தை நீட்டிக்க, அதை ஹைட்ரோஜெனேஷன் (Hydrogenation) என்ற செயல்முறைக்கு உட்படுத்தும்போது அதிலுள்ள நல்ல கொழுப்புகள் முழுமையாக வெளியேறி ட்ரான்ஸ் ஃபேட் உருவாகும். ட்ரான்ஸ் ஃபேட், கொழுப்புச்சத்திலிருந்து உருவாக்கப்படும் ஒரு கொழுப்பு வகை. இது, கடைகளில் விற்கப்படும் எண்ணெய்ப் பலகாரங்கள், அங்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், பேக்கரி பொருள்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களில் இருக்கும். இது முழுக்க முழுக்க செயற்கைக் கொழுப்பு வகை என்பதால், இயற்கையான உணவு வகைகளில் இருக்காது. பெரும்பாலான கார்ப்பரேட் கம்பெனிகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களில், ‘குறைவான ட்ரான்ஸ் ஃபேட்’ எனக் குறிப்பிட்டிருப்பார்கள். இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

ட்ரைகிளைசரைடு (Triglyceride): ரத்தத்தில் உள்ள ஒருவகை கொழுப்புச்சத்து இது. எண்ணெய் மற்றும் வெண்ணெயில் ட்ரைகிளைசரைடு அதிகம் உள்ளது. உணவு மூலம் உடலுக்குக் கிடைக்கும் கொழுப்புச்சத்தான இதை, அளவாக உட்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலைப் பெறலாம். ட்ரைகிளைசரைடு அளவு அதிகமாக உள்ளவர்கள், அன்றாட உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுப்பழக்கம் மூலம், பிரச்னைகளைச் சரிசெய்யலாம்.

நிறைவுறா கொழுப்புச்சத்து, ட்ரான்ஸ் ஃபேட் – இதயப் பிரச்னைக்கு எது காரணம்?

ஹைட்ரோஜெனேஷன் (Hydrogenation) செயல்முறைக்குப் பிறகு உற்பத்தியாகும் ட்ரான்ஸ் ஃபேட்தான், நோய் பாதிப்பு அதிகரிக்க அடிப்படையாக இருக்கிறது. நூடுல்ஸ், சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், பால் பொருள்கள், கறி வகைகளிலும் இது கணிசமான அளவு உள்ளது. ஹைட்ரோஜெனேட்டட் எண்ணெய் (Hydrogenated Vegetable Oil) வகைகளிலும் அதிகம் உள்ளது. பெரியவர்கள் ஒரு நாளைக்கு, ஐந்து கிராமுக்கு மேல் ட்ரான்ஸ் ஃபேட் உட்கொள்ளக் கூடாது என்றாலும், அதை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

நல்ல கொழுப்புச்சத்துள்ள உணவுகள்

நட்ஸ் வகைகள், தேங்காய், மீன் போன்றவை நல்ல கொழுப்புள்ள உணவுகளாகும். வாரத்தில் இரண்டு நாள் மீனும், தினம் ஒரு கை நட்ஸும் உட்கொள்ளலாம். ஆலிவ் ஆயில், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பாதாம் பருப்பு, வால்நட்ஸ், அவகேடோ போன்றவற்றையும் சாப்பிடலாம்.

கொழுப்புச்சத்து உடலுக்குள் என்ன செய்யும்?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல கொழுப்புச்சத்து அவசியம். ஒருவகையில் கொழுப்புச்சத்தும் சர்க்கரைச்சத்தைப் போன்றதே. அளவுக்கு மீறினால் ஆபத்து.

நல்ல கொழுப்புச்சத்து

* வைட்டமின் சத்துகளை உட்கிரகிக்க உதவும்.

* உடலிலுள்ள திசுக்களும் நரம்புகளும் சீராக இயங்க உதவும்.

* ஹார்மோன் உற்பத்திக்கு உதவும்.

* மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

* உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கும்.

* வைட்டமின் டி உற்பத்திக்கு உதவும்.

எந்த கொழுப்புச்சத்தை எவ்வளவு உட்கொள்ளலாம்?

உடலுக்குத் தேவைப்படும் சக்தியில், 25-30 சதவிகித கலோரிகள் கொழுப்புச்சத்திலிருந்து கிடைக்க வேண்டும். அதில் 10 சதவிகிதம் மட்டுமே நிறைவுற்ற கொழுப்புச்சத்தாக இருந்தால் போதுமானது. க்ரீம், கொழுப்பு அதிகமுள்ள பால், சீஸ், வெண்ணெய், இறைச்சி உணவுகள் போன்றவை நிறைவுறா கொழுப்பு வகைகள். இவற்றிலுள்ள கொழுப்புப்படலம் மிகவும் திடமாக இருப்பதால், அவற்றைத் தவிர்க்கச் சொல்கிறார்கள். இவை இதயத்தில் எளிதாகப் படிந்து, இதய பாதிப்புக்கு வழிவகுக்கும்.

எடையில் இருக்கட்டும் கவனம்

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு கொழுப்புச்சத்து குறைவான அளவே தேவைப்படும். இவர்கள், நல்ல கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் உணவுகளை மட்டுமே உட்கொள்ளலாம். மேலும், இவர்களுக்கு அதிக உடல் உழைப்பு அவசியம் தேவை.

உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு கொழுப்புச்சத்தின் தேவை அதிகமாக இருக்கும். எனவே, நல்ல கொலஸ்ட்ராலை அதிகம் உற்பத்தி செய்யும் உணவுகளை மட்டுமே இவர்கள் உட்கொள்ள வேண்டும்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்கக் காரணங்கள்

உடலுழைப்பு இல்லாமல் இருப்பது, மது அருந்துவது, புகைபிடித்தல், நல்ல கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது, பேக்கரி பொருள்களை அதிகம் உட்கொள்வது, ஹார்மோன் பிரச்னைகள் இருப்பது, அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாவது போன்றவை கொலஸ்ட்ரால் அதிகரிக்கக் காரணங்கள்.

லேபிளை கவனியுங்கள்

உணவுக்கு மட்டுமன்றி, வாழ்க்கை முறைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ட்ரான்ஸ் ஃபேட் வகைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். நிறைவுற்ற கொழுப்பு வகை உணவுகளுக்குப் பதிலாக, மோனோஅன்சாச்சுரேட்டட் ஃபேட் வகை உணவுகளை உட்கொள்ளலாம்.

கடைகளில் உணவுப் பொருள்கள் வாங்கும்போது, அதன் பின்னால் இருக்கும் லேபிளில், `பார்ஷியலி ஹைட்ரோஜெனேட்டட்’ (Partially Hydrogenated) என்று இருக்கிறதா என்பதை `செக்’ செய்துகொள்ளவும். அசைவப் பிரியர்கள், கொழுப்புச்சத்து குறைவான கறி வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். உதாரணமாக சிக்கன், மட்டன் போன்ற கறி வகைகளுக்குப் பதிலாக, மீன் வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். மன அழுத்தமின்றி இருக்கவேண்டியது முக்கியம்.

உடலுக்குத் தேவைப்படும் கொலஸ்ட்ராலை, 80 சதவிகிதம் கல்லீரலே உற்பத்தி செய்வதால், 20 சதவிகிதம் மட்டும் உணவு மூலம் கிடைத்தால் போதுமானது.

ஹைப்பர்லிபிடெமீயா (Hyperlipidemia)

ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது `ஹைப்பர்லிபிடெமீயா’ எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு, கொலஸ்ட்ரால் அளவு 200 மி.கி-க்கு மேலே இருக்கும். கொலஸ்ட்ரால், ட்ரைகிளைசரைடு மற்றும் கொழுப்புச்சத்து அதிகளவு சேரும்போது, இதயப் பகுதிகளின் மேலே படிவதுடன், ரத்த ஓட்டத்திலும் சிக்கல் ஏற்படும்.

இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அடிக்கடி கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நல்ல கொழுப்புச்சத்தின் அளவு, 40 மி.கி-க்கு மேல் இருக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 100 மி.கி-க்குக் குறைவாக இருக்க வேண்டும். ட்ரைகிளைசரைடு அளவு 150 மி.கி-க்குக் குறைவாக இருக்க வேண்டும். மொத்தமாக 200 மி.கி வரை இருக்கலாம்.

லிப்பிட் புரொஃபைல் (Lipid Profile)

கொலஸ்ட்ராலின் அளவு வயதைப் பொறுத்தும், பாலினத்தைப் பொறுத்தும், உடல் எடையைப் பொறுத்தும் மாறுபடும். எனவே, குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது கொலஸ்ட்ரால் அளவைப் பரிசோதிக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவைப் பரிசோதிக்கும் டெஸ்ட்டின் பெயர், `லிப்பிட் புரொஃபைல்’ (Lipid Profile). ஏற்கெனவே இதயப் பிரச்னை, சர்க்கரை நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்கள், ஆண்டுக்கு மூன்று முறை இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இதில், மொத்த கொலஸ்ட்ரால் அளவு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவு, நல்ல கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ட்ரைகிளைசரைடு அளவுகள் பரிசோதிக்கப்படும்.

35 வயதைத் தாண்டியவர்கள், ஆண்டுக்கொருமுறை இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். யாருக்குக் கொலஸ்ட்ரால் பிரச்னை இருக்கிறதோ, அவரது குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வப்போது இந்த டெஸ்ட்டைச் செய்ய வேண்டும். மற்ற இடங்களைக் காட்டிலும், இடுப்பில் கொலஸ்ட்ரால் சேர்வதே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தொப்பை இருப்பவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது.

உடல் பருமனாக உள்ளவர்கள், மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்கள், சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இந்தப் பரிசோதனையைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். தேவையான அளவு உடலுழைப்பு இல்லாதவர்கள், அன்றாடம் சரியாக உடற்பயிற்சி செய்யாதவர்கள், சரியான உணவுப்பழக்கம் இல்லாதவர்கள் எனச் சீரான வாழ்வியல் முறையைப் பின்பற்றாதவர்கள் கண்டிப்பாக டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.

கொலஸ்ட்ரால் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏன்?

* உணவுப் பழக்கம் – நிறைவுற்ற கொழுப்புச்சத்து, ட்ரான்ஸ் ஃபேட், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.

* அதிக உடல் எடையும் உடலுக்குத் தேவையான உழைப்பைக் கொடுக்காததும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.

* பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கக்கூடும்.

கொழுப்புச்சத்து உட்கொள்வதில் கவனம்!

இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், வயிற்றுப் பகுதியில் அதிகளவு கொழுப்பு உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் அதன் அளவிலும் தரத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உணவில் எவ்வளவு நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டாலே போதும்.

தவிர்க்கவேண்டிய உணவுகள்

கெட்ட கொழுப்பு உள்ள உணவுகளையும் கெட்ட கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் உணவுகளையும் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக எண்ணெய், பால், வெண்ணெய், நெய், இறைச்சி வகைகள், ஜங்க் ஃபுட்ஸ், சிப்ஸ் மற்றும் வறுத்த உணவுகள். இவற்றிலுள்ள நிறைவுற்ற கொழுப்பும், ட்ரான்ஸ் ஃபேட்டும் ரத்தத்தில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ராலின் அளவை முற்றிலும் அதிகரிக்கக்கூடும்.

இதயப் பிரச்னைக்குத் தீர்வாகும் நிறைவுறா கொழுப்புகள்!

மற்ற கொழுப்பு வகைகளோடு நிறைவுறா கொழுப்புகளை ஒப்பிட்டால், இவை அதிக நன்மை அளிப்பவை. இவை உடலுக்குள் செல்லும்போது, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும். உடலில் ஆங்காங்கே கொழுப்புச்சத்து படிவதையும் தடுக்கும்.

உடலில் எந்தப் பகுதியில் கொழுப்பு சேர்வது ஆபத்து? 

சிலருக்குக் கழுத்துப் பகுதியில் கொழுப்பு சேரும்; சிலருக்கு இடுப்பில் சேரும். வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதும் ஆபத்து. மருத்துவத்தில் இது ‘சென்ட்ரல் ஒபிசிட்டி’ (Central Obesity) என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு இந்தியாவின் மாறுபட்ட உணவு முறைகளும்கூட ஒரு காரணம். ஒல்லியாக இருப்பவர்களும்கூட சிறு தொப்பையோடு காணப்படுவதுண்டு. இதுபோல வயிற்றைச் சுற்றி கொழுப்பு படரும்போது, உடல் உபாதைகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

கொழுப்புச்சத்து அதிகமாவதால் ஏற்படும் பிரச்னைகள்

கொழுப்பு எந்த இடத்தில் அதிகளவு சேர்கிறது என்பதைப் பொறுத்து, பிரச்னை ஏற்படும். இதயத்தில் படிந்தால் இதயப் பிரச்னைகள் மற்றும் மாரடைப்பும், ரத்தச் சர்க்கரையில் கலந்தால் சர்க்கரை நோயும் வயிற்றுப் பகுதியில் சேரும்போது தொப்பை விழவும் வாய்ப்பிருக்கிறது. மூளையில் சேர்ந்தால் பக்கவாதமும், காலில் சேர்ந்தால் அழுகல் (Gangrene) போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.

மேலும், ஆபத்தான ரத்தச்சோகை (Pernicious Anemia), உயர் ரத்த அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். இவற்றில் பெரும்பாலானவை ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. எல்லாப் பிரச்னைகளும் முடியுமிடம் இதயம் என்பதால், இதயக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உறுப்புகளில் கொலஸ்ட்ரால் சேரும்போது ஏற்படும் பிரச்னைகள்

* மூளை – பக்கவாதம், மூளை அடைப்பு, ஞாபகசக்தியில் பாதிப்பு

* இதயம் – மாரடைப்பு, இதய அடைப்பு

* தோள்பட்டை – அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis), நெஞ்சுவலி, ரத்த ஓட்டத்தில் சிக்கல்

* இடுப்பு – அடிவயிற்றுவலி, சிறுநீரகக்கல்

* கால் – மூட்டுப் பகுதியில் உணர்ச்சியில்லாமை

யாருக்கு என்ன உணவு?

சர்க்கரை நோயாளிகள்:
 பாலிஅன்சாச்சுரேட் ஃபேட் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளலாம். உதாரணமாக, நட்ஸ், விதைகள், மீன், ஒமேகா-3 உள்ள உணவுகள்.

இதய நோயாளிகள்
ஆலிவ் ஆயில் மற்றும் மீன் உட்கொள்ளலாம். கொழுப்பு நிறைந்த பால், கறி, ரெட் மீட், இனிப்பு போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

சிறு வயது உடல் பருமனில் அலட்சியம் வேண்டாம்!

இன்றைய சூழலில், இளம் வயதைச் சேர்ந்த பலரும் உடல் எடை அதிகமாகவும் பருமனாகவும் இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம், உணவுகள் மூலம் உடலுக்குக் கிடைக்கும் கெட்ட கொழுப்புச்சத்துதான். ஜங்க் ஃபுட்ஸ், எண்ணெய்ப் பொருள்கள், சிக்கன், மாட்டிறைச்சி, வறுத்த உணவுகள், மிகவும் குறைவான உடலுழைப்பு போன்றவைதான் சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கியக் காரணங்கள். சிறு வயதிலிருந்தே குழந்தைகளைச் சத்தான உணவுகளைச் சாப்பிடவும், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கவும், உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யவும் பழக்கப்படுத்த வேண்டும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம் 

அதிக உடல் உழைப்பு தர வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளான வெண்ணெய், பால் வகை உணவுகள், சீஸ், ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நல்ல கொலஸ்ட்ரால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளான ஆலிவ் ஆயில், மீன், நட்ஸ் வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

உடல் எடை அதிகரிப்புக்கு மரபு காரணமாகுமா?

சிறு வயதிலேயே குழந்தைகளின் உடல் எடை அதிகமாக இருப்பதற்கு, உணவு மற்றும் வாழ்க்கை முறை எந்தளவு காரணமாக இருக்கின்றனவோ, அதே அளவு மரபும் காரணமாக இருக்கக்கூடும். சில குடும்பங்களில், குறிப்பிட்ட ஏதாவதொரு கொலஸ்ட்ரால் வகை அதிகமாக இருக்கும். அது, நல்ல கொலஸ்ட்ராலாகவும் இருக்கலாம், கெட்ட கொலஸ்ட்ராலாகவும் இருக்கலாம். அடுத்தடுத்த தலைமுறைக்கு, இவை கடத்தப்பட்டு, அவர்கள் இளம் வயதிலேயே பருமனாக இருப்பார்கள்.

கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க விரும்புபவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிறைவுற்ற கொழுப்பு, ட்ரான்ஸ் ஃபேட் வகைகளுக்குப் பதிலாக, ஒமேகா 3 அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். கெட்ட கொழுப்பைக் குறைக்கப் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். உடலுக்குத் தரும் அதே அளவு முக்கியத்துவத்தை, மனதுக்கும் தர வேண்டும். தியானம், யோகா போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

உடல்பருமன் – கொலஸ்ட்ரால்

உடல்பருமனும் கொலஸ்ட்ராலும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், உடல் பருமனாக இருக்கும் சிலருக்கு கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும். இதுவே, மிகவும் மெலிதான உடலமைப்பு உள்ள சிலருக்கு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவுக்கதிகமாக இருக்கும்.

உணவுமுறை மாற்றம், மரபு போன்றவைதான் இந்த மாற்றங்களுக்குக் காரணம். இது வளர்சிதை மாற்றம் எனப்படுகிறது. இத்தகைய வளர்சிதை மாற்றம் உள்ளவர்களின் உடலில்,

* அதிகளவிலான கெட்ட கொலஸ்ட்ரால்

* குறைவான நல்ல கொலஸ்ட்ரால்

* அதிக ட்ரைகிளிசரைடு

* உயர் ரத்த அழுத்தம்

* அதிக ரத்தச் சர்க்கரை போன்றவை இருக்கும்.

கொலஸ்ட்ரால் அளவைத் தெரிந்துகொள்ள லிப்பிட் புரொஃபைல் (Lipid Profile) டெஸ்ட் செய்ய வேண்டியது அவசியம்.

எவ்வளவு இருக்கலாம் கொழுப்பு?

கொழுப்பின் அளவை ரத்தப் பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம்.

12 மணி நேரத்துக்கு எதையும் சாப்பிடாமல் இருந்து ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அறியலாம்.

மொத்த கொழுப்பின் அளவு

* 200 மி.கி /டி.எல்-க்குக் குறைவாக இருப்பது சிறப்பு

* 200 முதல் 239 வரை அபாயத்தின் எல்லை

* 240க்கு மேல் இருந்தால் ஆபத்து நிலை

எல்.டி.எல் (கெட்ட கொழுப்பு)

* 100-129 இயல்பு நிலை

* 130-159 விளிம்பு நிலை

* 160-189 அதிகம்

* 190க்கு மேல் மிக அதிகம்

ஹெச்.டி.எல் (நல்ல கொழுப்பு)

* ஆண்களுக்கு 40க்குக் கீழ் – ஆபத்து

* பெண்களுக்கு 50க்குக் கீழ் – ஆபத்து

* 50-59 பரவாயில்லை

* 60க்கு மேல் சிறப்பு

ட்ரைகிளிசரைடு

* 150குக் கீழ் சரியான அளவு

* 150-199 வரை விளிம்பு நிலை

* 200-499 அதிகம்

* 500க்கு மேல் மிக அதிகம்

தீர்வுகள்

நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதுடன் உடல் எடையைக் குறைக்க வேண்டும். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். இடுப்பு மற்றும் தொடைப்பகுதிக்கானப் பயிற்சிகளைத் தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது மேற்கொள்ள வேண்டும். மது மற்றும் புகைப்பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு பெண்களுக்குக் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. ஆனால் மெனோபாஸுக்குப் பிறகு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் கொழுப்பு படிவது அதிகரிக்கும். எனவே உணவு மற்றும் வாழ்வியல் முறையில் கவனம் தேவை.

 

பாரம்பரிய பிரியர்களுக்காக கோட்டகுப்பதில் செயல்படும் தனித்துவமான விற்பனையங்கள்!


புதுவை அருகே உள்ளது கோட்டக்குப்பம் என்கிற பகுதி. இங்கு பழைய மர பொருட்களை வாங்கி அதை புதுபித்து விற்கும் 50-க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் உள்ளது. ஆரம்பகாலத்தில் இப்பகுதிக்கு அருகே ஆரோவில் இருப்பதால் இங்கு சில வெளிநாட்டவர்கள் வருகை தருவது உண்டு. எனவே இங்கு ஒரு சில பாரம்பரிய விற்பனையகங்கள் தொடங்கப்பட்டது. பின்னர் நாளடைவில் இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பழைய பாரம்பரிய மர பொருள் விற்பனையகங்கள் தோன்றியது.

புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் செட்டிநாடு வகை வீடுகள் என்று அழைக்கப்படும் பாரம்பரிய கட்டிடங்கள் ஏராளமாகவே உள்ளது.இந்தக் கட்டடங்களை காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்படுவது உண்டு. அவ்வாறு இடிக்கும் போது பழையது என்று தூக்கி வீசப்படும் கதவு, ஜன்னல், இரும்பு சாமான்கள் போன்ற பழைய மரத்தாலான பொருட்களை வாங்கி, அதில் பயன்பட தகுந்த பொருட்களை புதுபித்து விற்கின்றனர். இங்குள்ள விற்பனையாளர்கள், மிகவும் மோசமான நிலையில் உள்ள மர பொருட்களை கூட மெருகேற்றி பாரம்பரியம் மாறாமல் விற்றுவருகிறார்கள். கதவு, ஜன்னல் மட்டுமின்றி ஒத்தவண்டி எனப்படும் மாட்டுவண்டி சக்கரம், மர உலக்கை, பெரிய மரத்தூண்கள், மரத்தாலான குதிரை, யானை போன்ற பொருட்களும் விற்பனையகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள விற்பனையகத்தில் உள்ள பாரம்பரிய பொருட்களை வாங்க வெளி மாநிலத்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பாரம்பரியம் மாறாமல் திருமணம் செய்யவேண்டும் என நினைப்பவர்கள் கோட்டக்குப்பத்தில் உள்ள விற்பனையகத்திற்கு வந்து பாரம்பரியத்துடன் காட்சியளிக்கும் பீரோ, கட்டில், டைனிங் டேபில், சேர் போன்ற பொருட்களை வாங்கி செல்கின்றனர். பாரம்பரிய மர பொருட்கள் விற்பனையகங்கள் ஒருபுறம் இருக்க அதே பகுதியில், ட்ரங்கு பெட்டி எனப்படும் பழைய இரும்பு பெட்டிகள், பழைய பிலிம் ரோல், கேமரா பெட்டர்மாஸ் லைட், கிரமோபோன் போன்ற பழைய தொலைபேசிகள், வால்வு ரேடியோ, பழைய வகை டேப் ரெக்காடர், ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உயர் ரக மது பாட்டில்கள், பழைய சமயல் பாத்திரங்கள், 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் என சுற்றி சுற்றி பார்த்து வியக்கவைக்கும் வகையில் மற்றொரு ரக பாரம்பரிய விற்பனையகங்களும் இங்கு உள்ளது. பழமை மறந்து நவீன வாழ்க்கை முறைக்கு மாறிவரும் மக்கள் மத்தியில் பாரம்பரியத்தை தேடி வருபவர்களுக்காக பாரம்பரியம் உயிர்தெழும் வகையில் இவர்கள் செய்யும் தொழில் பலரையும் கவர்ந்து வருகிறது.

 

Credit : EENADUINDIA

நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ் நண்பர்கள் நிதிஉதவி


பிரான்ஸ் வாழ் முஸ்லீம் நண்பர்கள் மூலம் கடந்த ஆண்டு முதல் வசதி இல்லாத பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி காய்ச்ச பண உதவி செய்யப்படுகிறது. இந்த வருடம் வசதி வாய்ப்பில்லாத 6 பள்ளிவாசல்களுக்கு பண உதவி செய்யப்பட்டது.

உதவி செய்த அணைத்து நண்பர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்க பிராத்திக்கிறோம்.