நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை


 

நிலத்திலிருந்து விவசாயம் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும்.

நிலத்தடி நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்தக் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் கட்டண முறை நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசின் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, தொழிற்சாலைகள், புட்டிகளில் குடிநீரை அடைக்கும் குடிசைத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை நிலத்தடி நீரை எடுப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறுத் தேவைகளுக்காக ஓர் அங்குலத்துக்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கன மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்கள், ஒரு கன மீட்டருக்கு ரூ.2 வரை கட்டணம் செலுத்த வேண்டும்; வீடுகளும் மத்திய அரசிடம் மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டுமாம்.

இனி வரும் காலங்களில் நீருக்காக மூன்றாவது உலகப் போர் மூளும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்படும் சூழலில் நிலத்தடி நீரை பாதுகாப்பது அவசியமானது. அதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வகை நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை. தொழிற்சாலை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதும் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.

ஆனால், வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். அவ்வாறு இருக்கும் போது குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும்.

நிலத்தடி நீருக்கு கட்டணம் அறிவித்துள்ள மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம், இந்த அறிவிப்பால் மக்கள் கோபம் அடைவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு முன்கூட்டியே இரு விளக்கங்களை அளித்திருக்கிறது. முதலாவது நிலத்தடி நீருக்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்பது அதற்கான விலை அல்ல; மாறாக நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கான செலவு என்பதாகும்.

இரண்டாவது வேளாண் தேவைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்பதாகும். இரண்டுமே மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்படும் விளக்கம் ஆகும். நிலத்தடி நீருக்கான கட்டணம் என்ன பெயரில் வசூலிக்கப்பட்டாலும் அது அதற்கான விலை தான்.

ஹிட்லருக்கு புத்தர் என்று பெயர் மாற்றம் செய்தால், அவர் எப்படி ஆசைகளைத் துறந்து, அமைதியை நேசிப்பவர் ஆகி விட மாட்டாரோ, அதேபோல் தான் பரமாரிப்புச் செலவு என்று கூறுவதாலேயே அது நிலத்தடி நீருக்கான கட்டணம் இல்லாமல் போய்விடாது.

அடுத்ததாக, விவசாயத்திற்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவிப்பை நினைத்து விவசாயிகளும், மற்றவர்களும் நிம்மதி அடைய முடியாது. இது ஓர் ஏமாற்று வேலை ஆகும். வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு கட்டணம் இல்லை என்பது தற்காலிக சலுகை மட்டுமே.

அடுத்த சில ஆண்டுகளில் வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது என்பது 1987 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய தண்ணீர் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

இதற்காக 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய வரைவு தண்ணீர் கொள்கையில், விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும், தண்ணீர் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும், தண்ணீர் விநியோகத்தை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தண்ணீர் கொள்கையை மத்திய அரசு இறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற தேசிய தண்ணீர் வார விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிலத்தடி நீர் இலவசமாகக் கிடைப்பதால்தான், அதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. நீர் இலவசப் பொருளல்ல. அது ஒரு வணிகப் பொருள். உரிய விலை கொடுத்துத்தான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதை தனியார் வசமோ அல்லது தனியாரோடு கூட்டுச் சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலத்தடி நீர் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட, தேசிய நீர் கொள்கை-2012 வடிவமைக்கப்படுகிறது என்று கூறினார்.

2012 தேசிய நீர் கொள்கை, அதுதொடர்பான அப்போதைய பிரதமரின் வார்த்தைகளுக்குத் தான் இப்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு நிலத்தடி நீர்த்தேவை 2,53,00,000 கோடி லிட்டர் ஆகும். இதில் 10 விழுக்காடு, அதாவது 25,00,000 கோடி லிட்டர் மட்டுமே தொழிற்சாலைகள் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கானது ஆகும். மீதமுள்ள 2,28,00,000 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வேளாண் பயன்பாட்டுக்கானது ஆகும்.

நிலத்தடி நீரை நிர்வகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் போது, 90% நிலத்தடி நீர் இலவசமாக பயன்படுத்தப்படுவதை தனியார் நிறுவனங்கள் அனுமதிக்காது. அப்போது நிச்சயமாக வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் ஆபத்தை இப்போதே தடுக்க வேண்டும்.

எனவே, குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாடு, வேளாண் பயன்பாடு ஆகியவற்றுக்கான நிலத்தடி நீருக்கு எக்காலத்திலும், எந்த பெயரிலும் கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு உறுதியளிக்க வேண்டும். 2012 ஆம் ஆண்டின் தேசிய தண்ணீர் கொள்கையில் இந்த வாக்குறுதியை அரசு சேர்க்க வேண்டும்.

Advertisements

செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?


உங்களுடைய வேலிடிட்டி XX-ம் தேதியுடன் முடிவடைகிறது; எனவே அவுட்கோயிங் கால்கள் அனைத்தும் XX-ம் தேதியுடன் நிறுத்தப்படும். சேவையைத் தொடர வேண்டுமென்றால் உடனே வேலிடிட்டி ரீசார்ஜ் செய்யவும்” – இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்குக் கடந்த வாரத்தில் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வந்திருக்கலாம்; வராதவர்களுக்கு இனிமேல் வரும். எதற்காக திடீரென இப்படி வருகிறது எனக் குழம்புகிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்!
செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?! #Alert

மேலே பார்த்தது போலவே எனக்கும் சமீபத்தில், “உங்கள் அவுட்கோயிங் கால்கள் இந்தத் தேதியுடன் நிறுத்தப்படும் என ஒரு மெசேஜ் வந்தது. இத்தனைக்கும் என்னுடைய மெயின் பேலன்ஸ் ஜீரோவும் இல்லை; சரி, ஒரு 20 ரூபாய்க்கு டாப் அப் செய்துவிடுவோம் என நினைத்து டாப் அப் செய்தேன். இப்போது என் மெயின் பேலன்ஸ் 32 ரூபாய். ஆனாலும், அந்த மெசேஜ் வருவது நிற்கவில்லை. ஏதோ டெலிகாம் ஆபரேட்டர் பிரச்னை என நினைத்து ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால், “உங்களுடைய வேலிடிட்டி முடிந்துவிட்டதால்தான் மெசேஜ் வந்திருக்கிறது. ஒன்றும் பிரச்னையில்லை. வேலிடிட்டிக்காக ஸ்மார்ட் ரீசார்ஜ் ஏதேனும் செய்தால் போதும்; சரியாகிவிடும்” என்றனர். “இதென்ன புதிதாக ஸ்மார்ட் ரீசார்ஜ்… இதுவரைக்கும் மெயின் பேலன்ஸ் மட்டும்தானே டாப்அப் செய்தோம்…” என்றால், இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்தத் திட்டம் தொடங்கியிருக்கிறது. இனிமேல் இப்படித்தான் சார்” என்றனர். சரி, அந்த ஸ்மார்ட் ரீசார்ஜ்தான் என்னவெனப் போய் பார்த்தால், இதுவரைக்கும் நாம் சிம்மிற்கு செலவு செய்த விதத்தையே மொத்தமாக மாற்றும் விதமாக இருக்கிறது அதன் விலைப்பட்டியல். குறைந்தது 35 ரூபாயிலிருந்து தொடங்குகிறது இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ். 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 26.66 ரூபாய் டாக்டைம்; 100 MB டேட்டா. கூடவே 28 நாள் வேலிடிட்டி. இதுதான் இங்கே முக்கியம். இந்த 35 ரூபாய்க்கு அடுத்த 28 நாள் மட்டும்தான் வேலிடிட்டி; அதற்குப் பின்னர் உங்கள் மெயின் பேலன்ஸில் பணம் இருந்தாலும், இல்லையென்றாலும் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் நோ அவுட்கோயிங்; நோ இன்கமிங். இந்த ஸ்மார்ட் ரீசார்ஜில் அதிகபட்ச வேலிடிட்டியே 84 நாள்கள்தான். 245 ரூபாய் பிளான் இது. அதற்குப் பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் மெயின் அக்கவுன்ட்டில் பேலன்ஸ் இருந்தாலும் பயன்படுத்த முடியாது. 

அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் நிறுத்தப்படுவது தொடர்பாக வரும் மெசேஜ்

இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ் இல்லாமல் 5,000 ரூபாய்க்கு டாக்டைம் ரீசார்ஜ் செய்தால்கூட, அந்த 5,000 ரூபாய் என்பது டாக்டைம்க்கு மட்டும்தான் லைஃப்டைம் வேலிடிட்டி. அவுட்கோயிங்கிற்கு 28 நாள்தான். மீண்டும் 35 ரூபாய்க்கு மெயின் பேலன்ஸில் இருந்தோ அல்லது தனியாகவோ ரீசார்ஜ் செய்யவேண்டும். அப்போது அந்த 5,000 ரூபாயிலிருந்து கழிக்கப்பட்ட 35 ரூபாயில் மீண்டும் 26.66 ரூபாய் மெயின் பேலன்ஸில் சேர்ந்துவிடும். இப்படி ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தினால் மட்டுமே இனி இன்கமிங் மற்றும் அவுட்கோயிங். ஒரே ஒருமுறை ரீசார்ஜ் செய்துவிட்டு, எப்போதும் இலவசமாக இன்கமிங் சேவையைப் பயன்படுத்தலாம் என்பதெல்லாம் இனி இல்லை. இந்தப் பிரச்னை. ஏர்டெல்லில் மட்டும் இல்லை. வோடஃபோனிலும்தான். இந்தத் திட்டத்தை முதலில் கொண்டுவந்ததே வோடஃபோன்தான். சரி, எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என டெலிகாம் வட்டாரத்தில் விசாரித்ததில், பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன.


ஜியோவின் வருகைக்குப் பின்னர் இந்திய டெலிகாம் துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அதில் முக்கியமானது பிற டெலிகாம் நிறுவனங்களின் பொருளாதார இழப்பு. இதை ஈடுகட்ட முடியாமல்தான் இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து மூன்றாகிப் போனது. இப்போது இந்தியாவில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் என்றால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் (+ஐடியா) மட்டும்தான். இதுதவிர அரசின் பி.எஸ்.என்.எல். தற்போது இந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்குள்தான் கடும்போட்டி. இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆட்டத்திலிருந்தே விலகிக்கொண்டன. தற்போது இறுதி ஆட்டத்தில் நிற்பது மொத்தம் மூன்றே நிறுவனங்கள்தாம். இதில் ஜியோ மட்டும்தான் அதன் வசந்தகாலத்தில் இருக்கிறது. மற்ற இரு நிறுவனங்களும் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. ஒருபக்கம் ஜியோவோ, வாடிக்கையாளர்கள், வருமானம் என இரண்டிலும் வளர்ந்துவருகிறது. ஆனால், பிற இரு நிறுவனங்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்திய டெலிகாம் துறையில் தற்போது இருக்கும் அளவுக்கு இதற்கு முன்பு பொருளாதார அழுத்தம், கடந்த காலங்களில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே! இந்நிலையில் எதைச் செய்தாவது சந்தையில் தங்களை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகின்றன இந்த இரு நிறுவனங்களும்.

டெலிகாம்

ஒருபுறம் 4G, 5G போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை அதிகரிக்கவேண்டும். அதற்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இன்னொருபுறம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், தக்கவைப்பதற்காகவும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற மதிப்புகூட்டு சேவைகளை வழங்க செலவுசெய்யவேண்டும். இந்தக் கூடுதல் பொருளாதாரச் செலவுகள் தவிர்த்து வழக்கமான பணிகளையும் மேற்கொள்ளவேண்டும். இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில் எப்படித் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் லாபமின்றியே இயங்கமுடியும் எனக் கேட்கின்றன இந்நிறுவனங்கள். டெலிகாம் நிறுவனங்களுக்கு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக இரண்டு வழிகளில் வருமானம் வருகிறது. ஒன்று, வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் செலவு; இரண்டாவது, Mobile Termination Charge (MTC). முதல் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இரண்டாவது விஷயத்தை மட்டும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

இந்தியாவில் இன்கமிங் கால்கள் அனைத்துக்கும் 2003-ம் ஆண்டுக்கு முன்புவரை வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் ட்ராய் இதனை இலவச சேவையாக மாற்றியது. எனவே அவுட்கோயிங் கால்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். டேட்டா போன்றவை கூடுதல் செலவு. இதில் இன்கமிங் காலை பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால், மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் குறிப்பிட்ட கட்டணத்தைப் பரிமாறிக்கொள்ளும். சிறிய உதாரணம் மூலம் பார்ப்போம். ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர் ஜியோ வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்தால் ஏர்டெல், கால் செய்யும் வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளும். இதுதவிர ஏர்டெல் நிறுவனத்திடமிருந்துவரும் காலை, ஜியோ தன்னுடைய வாடிக்கையாளருடன் இணைக்க வேண்டுமென்றால் அதற்கு ஜியோவும் பணம் கேட்கும். இதை ஏர்டெல்லிடமிருந்து பெற்றுக்கொள்ளும். இந்த விதி, பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கால்களை தங்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த முறைக்கு Calling Party Pays என்று பெயர். இதனை முற்றிலுமாக எதிர்க்கிறது ஜியோ.

வோடஃபோன்

அதாவது, கால்களை கனெக்ட் செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் தருவதே அவர்களின் நெட்வொர்க்கிற்கான முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்காகத்தான். ஆனால், தற்போது சந்தையில் இருக்கும் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை, இதுவரை பெற்ற லாபம் மூலம் திரும்பப்பெற்றுவிட்டன. எனவே, இந்த MTC கட்டணத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ட்ராயிடம் சொன்னது ஜியோ. மற்ற நிறுவனங்களோ இப்போது MTC-க்காக பிற நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிமிடத்துக்கு 14 பைசாவில் இருந்து 30 பைசாவாக உயர்த்தவேண்டும் என்றன. இந்த விவாதம் நடந்தது கடந்த ஆண்டு பிற்பகுதியில். இறுதியில் இதுதொடர்பாக புது அறிவிப்பை வெளியிட்ட ட்ராய், MTC கட்டணத்தை 14 பைசாவிலிருந்து 6 பைசாவாகக் குறைத்தது. இந்த விதிமுறை கடந்த ஆண்டு அக்டோபர் முதலே அமலுக்கு வந்தது. இதனால் ஜியோ தவிர பிறநிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன. இந்தப் பிரச்னை ஒருபக்கம் என்றால், குறைந்துகொண்டே வந்த ARPU இந்த நிறுவனங்களை இன்னும் சிக்கல்படுத்தின.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் அந்த மொபைல் நிறுவனத்துக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்கிறாரோ அதுதான் அந்நிறுவனத்தின் ARPU (Average Revenue Per User). இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவின்படி ஜியோவின் ARPU 135 ரூபாய். ஏர்டெல் ARPU 101 ரூபாய். இந்த ARPU ஜியோவைத் தவிர மற்ற நிறுவனங்களுக்குத் தொடர்ந்து குறைந்துவருகிறது. இதற்குக் காரணம் டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங்கிற்காக ஜியோவையும், இன்கமிங் காலிற்காக மட்டும் ஏர்டெல் மற்றும் வோடஃபோனையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதுதான். உதாரணமாக ஒருவர் ஜியோ மற்றும் வோடஃபோன் என இரண்டு சிம்களைப் பயன்படுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் டேட்டாவுக்காக ஜியோவைத் தொடர்ந்து பயன்படுத்துவார். இதனால் ஜியோவுக்குத் தொடர்ந்து வருமானம் வரும். மேலும், ஜியோவின் வாய்ஸ் காலும் இலவசம் என்பதால் வாடிக்கையாளருக்குக் கூடுதல் லாபம். இதுபோக பழைய எண்ணாகவோ அல்லது பேக்அப்பிற்காக மட்டும் வோடஃபோனைப் பயன்படுத்துவார். ஜியோவே இலவசம்தான் என்பதால் தொடர்ந்து அவுட்கோயிங் சேவைகளையும் அதிலேயே பயன்படுத்துவார். ஆனால், அதே சமயம் இன்கமிங் சேவைக்காக மட்டும் வோடஃபோன் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவார். இது வோடஃபோனுக்குப் பெரியளவில் எவ்வித வருமானத்தையும் ஈட்டித்தராது.

ஜியோ

அந்த வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு 5 மணி நேரம் மட்டும் இன்கமிங் கால் பேசுகிறார் எனில், (300 நிமிடங்கள் * 0.06 பைசா) 18 ரூபாய் மட்டுமே வோடஃபோனுக்குப் பிற நிறுவனங்களிடமிருந்து வருமானமாக வரும். வேறு எவ்வித வருமானமும் வராது. இதுபோன்ற வாடிக்கையாளர்களால் வோடஃபோனின் மொத்த ARPU குறையும். இந்தக் கதை ஏர்டெல்லுக்கும் பொருந்தும். இப்படி ARPU தொடர்ந்து குறைந்தால் அந்நிறுவனத்தின் லாபம், பங்கு விலை போன்ற பல விஷயங்களில் அது எதிரொலிக்கும். எனவே இதுபோன்ற வாடிக்கையாளர்களை நீக்குவதே சரி என்ற முடிவை எடுத்திருக்கின்றன இந்நிறுவனங்கள். அதனால்தான் தற்போது வேலிடிட்டி பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யச்சொல்லி வற்புறுத்துகின்றன. இந்தப் புதிய முடிவின்மூலம் ஒன்று வாடிக்கையாளர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்து தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து சிம்மை அப்படியே வைத்திருந்து டீஆக்டிவேட் செய்துவிட்டு வெளியேறிவிட வேண்டும். நெட்வொர்க்கில் சுமையாக இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிட்டு, மற்ற வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கிட முடியும். இதுதான் இந்நிறுவனங்களின் தற்போதைய திட்டம். 

மேலும், இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. ஜியோவிடம் ஏர்டெல்லும், வோடஃபோனும் தோற்பது டேட்டா விலை விஷயத்தில்தான். அதனால்தான் டேட்டா என்றால் ஜியோவைப் பயன்படுத்திவிட்டு, கால் செய்யவேண்டுமென்றால் மட்டும் இந்நிறுவனங்களை அதிகம்பேர் நாடுகின்றனர். இந்த டேட்டா + வாய்ஸ் கால் விகிதத்தைச் சரிசெய்யவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றன இந்நிறுவனங்கள். தற்போது இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள ஸ்பெஷல் ரீசார்ஜ் பேக்குகள் மற்றும் ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்குகளில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இரண்டையும் சமஅளவில் கலந்தே கொடுக்கின்றன. நீங்கள் 35 ரூபாய் கொடுத்து ஏர்டெல் ரீசார்ஜ் செய்தால்கூட 100 MB டேட்டா கிடைக்கும். 245 ரூபாய் என்றால், ஒரு நாளைக்கு 2 GB டேட்டா கிடைக்கும். இதைப் பயன்படுத்திதான் ஆகவேண்டும். இதன்மூலம் டேட்டாவுக்கு ஜியோ, காலிற்கு ஏர்டெல் என்ற நிலைமை மாறும் என நம்புகின்றன இந்நிறுவனங்கள். இந்தப் புதிய மாற்றத்தால் இதுவரைக்கும் இருந்த 20, 30, 100 ரூபாய் டாப்அப் பேக்குகள் அனைத்தையும் தற்போது இவை நீக்கிவிட்டன. 10 ரூபாய் டாப்அப் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் மெயின் பேலன்ஸ் மட்டும்தான். வேலிடிட்டி இல்லை. எனவே காம்போ பேக்குகள்தான் இவற்றில் ஒரே வழி.

ஏர்டெல்

இந்த மாற்றங்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட் ஆகிவருகின்றன. ஏர்டெல் இப்போதைக்கு தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் (மேற்கு) மற்றும் பஞ்சாப் ஆகிய தொலைத்தொடர்பு வட்டாரங்களில் மட்டுமே இதை அமல்படுத்தியிருக்கிறது. இங்கே சோதனை முயற்சிகள் முடிந்தபின்பு நாடு முழுவதும் விரிவுசெய்யப்படும். வோடஃபோனும் இப்போதுதான் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இன்னும் சில நாள்களில் பலருக்கும் மேலே பார்த்த மெசேஜ்கள் வரத்தொடங்கலாம். எவ்வித ரீசார்ஜ்களும் செய்யாமல் வெறும் மெயின் பேலன்ஸூடன் மட்டும் சிம் கார்டை வைத்திருக்கலாம் என்பது மாறி இனி 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டிய நிலைமை வந்திருக்கிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் டெலிகாம் சேவை என்பது மீண்டும் செலவுமிக்க ஒன்றாக மாறியிருக்கிறது. அவ்வளவுதான். சரி, ஜியோ என்ன செய்யவிருக்கிறது?

ஜியோவைப் பொறுத்தவரை இவையெல்லாம் பிரச்னையே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பலரும் இந்த மாற்றங்கள் பிடிக்காமல் MNP மூலம் ஜியோவுக்கு மாறலாம். அது சாதகமான அம்சமே. இரண்டாவது, ஜியோ இதுபோல புதிதாக எந்த மாறுதல்களும் தன்னுடைய சேவையில் செய்யத் தேவையில்லை. ஜியோ முதல் வருடம் தன் சலுகையை அறிமுகம் செய்தபோதே கட்டணத்தில் தெளிவான திட்டமிடலுடன் களமிறங்கியது. வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி, மியூசிக் போன்ற கூடுதல் சேவைகளை அனுபவிக்க வேண்டுமென்றால், பிரைம் உறுப்பினராக வேண்டுமெனச் சொல்லி அப்போதே ஆண்டுக்கு 99 ரூபாய் வாங்கியது. அதன்பின்பு கட்டண விவரங்களில் மாறுதல்கள் செய்த ஜியோ, வேலிடிட்டி விஷயத்தையும் அதற்கேற்ப மாற்றியது. இப்போது ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்யவேண்டுமென்றால் குறைந்தது 98 ரூபாய் செலவிட வேண்டும். அப்போதுதான் வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டையும் பெறமுடியும். இதுவே  ஜியோ போன் என்றால் 49 ரூபாய். இந்தத் திட்டங்கள் ஏற்கெனவே வேலிடிட்டி மற்றும் கட்டணத்தில் சரியாக இருப்பதால் ஜியோவுக்குப் பெரிய பிரச்னையில்லை. வாடிக்கையாளர்களுக்குத்தான் சிக்கல்கள் காத்திருக்கின்றன.

நன்றி ; விகடன்

கால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை


கோட்டக்குப்பம் முராது வீதி பழையபட்டின பாதை தொடங்கி சக்கில் வாய்க்கால் வரை முழுவதும், மற்றும் பள்ளிவாசல் தெரு, தைக்கால் திடல் போன்ற பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் பகுதிகள் உள்ள வாய்க்கால்களை சரி வர பராமரிக்காமல் விட்டதின் விலைவாக அதில் மணல், குப்பை சேர்ந்து கால்வாயின் ஆழம் குறைந்துள்ளது. இதன் காரணமாக மழை நீர் மற்றும் கழிவு நீர் தெருவில் ஓடி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் அதிகம் கூடும் ஷாதி மஹால் மற்றும் தர்கா அருகில் தண்ணீர் தேங்கி நின்றும் தெருவில் ஓடியும் அருவருப்பை உருவாகியுள்ளது.

வருகிற மழை காலத்தை கருத்தில் கொண்டு பேரூராட்சி துரித நடவடிக்கை எடுத்து அணைத்து வாய்க்கால்களையும் துர் வாரி கழிவு நீர் மற்றும் மழை நீர் தெருவில் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதனை வலியுறுத்து கிஸ்வா அமைப்பினர் சார்பாக இன்று பேரூராட்சி செயல் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

சென்னை புதுவை ECR இன் மற்றொரு 82 கி.மீ. நீட்டிக்கப்பட உள்ளது


கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கத் திட்ட நிலம் கையகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மரக்காணம் பகுதி மக்கள், 5 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.சென்னை-புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலை (332ஏ) விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசு நெடுஞ்சாலைத் துறை செயல்படுத்த உள்ளது.தற்போது, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையிலான சாலையை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளனர்.இதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம், ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, அனுமந்தை, செட்டிக்குப்பம், கீழ்பேட்டை, கூனிமேடு, பனிச்சமேடு உள்ளிட்ட கிராமங்களில், கிழக்கு கடற்கரைச் சாலையோரம் உள்ள நிலங்களை வருவாய்த் துறையினர் அளவீடு செய்து வருகின்றனர்.இந்தத் திட்டத்துக்காக, மரக்காணம் பகுதியில் 180 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மரக்காணம், அனுமந்தை பகுதிகளைச் சேர்ந்த ஜி.பாஸ்கர், என்.சுகுமாரன், எஸ்.ஆவணி, எஸ்.சந்திரன் உள்ளிட்ட நில உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்துக் கூறியதாவது:மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியைச் சார்ந்து வாழ்ந்து வருகிறோம். அரசின் சாலை விரிவாக்கத் திட்டத்தால், வாழ்வாதாரமும், எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமந்தை கிராமத்திலுள்ள வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள், உணவகங்கள், வீட்டு மனைகள், விளைநிலங்கள் என அனைத்தும் கையகப்படுத்தப்படுகிறது.அனுமந்தை கிராமம், சுற்றுப்புற 25 கிராமங்களுக்கு நுழைவு வாயிலாக உள்ளது. சுங்கச்சாவடி, கிழக்கு கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தம், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் உள்ள வளர்ச்சி பெற்ற பகுதியாகும். மீன்பிடி தொழில், தென்னை சாகுபடி சிறந்து விளங்குகிறது.அதனால், இங்குள்ள விளைநிலங்களின் மதிப்பும் உயர்ந்துள்ளது.எங்களின் நிலங்களை எதிர்கால வாழ்வாதாரத்துக்காக வைத்துள்ளோம். நிலம் கையகத்துக்கு அண்மையில் சாலையோரம் 30 மீட்டர் அளவுக்கு அளவீடு செய்த நிலையில், தற்போது நிலங்களுக்கான சர்வே எண்களை அறிவித்து நிலங்களை கையகப்படுத்த உள்ளதாகவும், அதுகுறித்து 21 நாள்களுக்குள் முறையிடுமாறு திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.நிலங்களை முழுமையாக கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தற்போது ஒரு சென்ட் நிலம் ரூ.9 லட்சத்துக்கு விலை போகிறது.இதைக் கருத்தில்கொண்டு கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீடாக சந்தை மதிப்பைவிட 5 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுகுறித்து நிலம் கையகப் பிரிவு தனி மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு


 

தமிழகம் எங்கும் இன்று ஷவ்வால் மாத தலைப்பிறை தெரியாததால், நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.

இடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்


தமிழக-புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள, செம்மண் ஓடை பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வானுார் ஒன்றியம், திருச்சிற்றம்பலம் பஞ்சாயத்திற்குட்பட்ட பட்டானுார் கிராமம், புதுச்சேரி மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது.

இங்குள்ள நர்மதா நகரில், மொரட்டாண்டி செம்மண் ஓடை உள்ளது. இதன் மீது புதுச்சேரிக்கு செல்வதற்கு வசதியாக சிறிய பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் மூலமாக நர்மதா நகர், கலைவாணர் நகர், ஸ்ரீராம் நகர், வசந்தபுரம் உள்ளிட்ட தமிழக பகுதி மக்களும், லாஸ்பேட்டை குமரன் நகர் பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள், ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல இந்த பாலம் பெரும் உதவியாக இருந்து வருகிறது. இந்த பாலம் தற்போது பலவீனமாக காட்சியளிக்கிறது.

பாலத்தின் ஒரு பக்க தடுப்பு சுவர் சேதமடைந்து சரிந்துள்ளது. பாலத்தின் அடிப்பகுதியில் சிமெண்ட் காரை மட்டுமே ஒட்டிக்கொண்டுள்ளது.

எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள இந்த பாலத்தின் வழியே தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

மேலும், மின் விளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் பாலத்தில் இருந்து தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, புதுச்சேரி பகுதியையும், தமிழக பகுதியையும் இணைக்கும் பிரதான சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து அகற்றவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி : தினமலர்

சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c


நன்றி : விகடன்

ர்க்கரைநோய்… பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக் கணக்கிடலாம். இந்த அளவு, சாப்பாட்டுக்கு முன்னர் 70 முதல் 99 எம்.ஜி/டெ.லி (mg/dl)-க்குள் இருக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் 140 எம்.ஜி/டெ.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்தச் சோதனையின் அடிப்படை. ஆனால், இந்த சாதாரண பரிசோதனை முறையைவிட துல்லியமாகக் கணக்கிடக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது, அது ஹெச்.பி.ஏ.1.சி (HbA1c).

ஹெச்.பி.ஏ.1.சி (HbA1c)

 

2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, `உலகிலுள்ள பதினோரு பேரில் ஒருவருக்கு சர்க்கரைநோய் உண்டு’ என்கிறது. டைப் 2 டயாபட்டீஸ், வாழ்வியல் நோய்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. சர்க்கரைநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், அதன் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சர்க்கரைநோயை உறுதி செய்வதற்கும், அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இருக்கும் வழிமுறைகளில் முக்கியமான ஹெச்.பி.ஏ.1.சி சோதனை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் வழக்கமான முறையைவிட, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் துல்லியமாக இருக்கும். ஏனென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் முறைகளின் ரிசல்ட், பரிசோதனைக்குள்ளானவர் அன்றைய தினமும், அதற்கு முந்தைய தினமும் என்ன சாப்பிட்டார் என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட்டில் கடந்த மூன்று மாதங்களாக குளூக்கோஸ் எந்த அளவுக்கு ரத்தத்தில் அதிகரித்திருக்கிறது, எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். இந்த அளவை சற்று அதிகரித்துப் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் (American Diabetes Association). இந்தப் பரிசோதனை, அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் வலியுறுத்தும் புதிய அளவீடு குறித்து சர்க்கரைநோய் நிபுணர் ராம்குமாரிடம் பேசினோம்…

“நமது உடம்பிலுள்ள கணையம் எனும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் குறைவாக சுரக்கும் போதும், சரியாக வேலை செய்யாத போதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள், உடலிலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்வதுக்கொள்வது போல், ஹெச்.பி.ஏ.1.சி. (HbA1c) பரிசோதனையையும்  செய்துக்கொள்ளவது நல்லது. இந்த பரிசோதனையின் மூலம் கிடைக்கும் அளவு, ரத்தச்சிவப்பணுக்களிலுள்ள சர்க்கரை அளவைக் குறிக்கும். ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையில், ஹெச்.பி.எல்.சி. (HPLC) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதும், பாதிக்கப்பட்டுள்ளார் எனில் அவரின் சர்க்கரை அளவு கடந்த மூன்று மாதங்களில் எவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்துள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கேற்ப மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் அளவு, 5.6 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் பாதிப்பு இல்லை என்று அர்த்தம். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரைநோய் வரலாம் (Pre-Diabetes) என்று அர்த்தம். இவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.6.5 மேல் இருந்தால் சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட், வருடத்திற்க்கு இரண்டு அல்லது நான்கு முறை செய்யப்படும்.   6.5 முதல் 7 சதவிகிதம் வரை இருந்தால்  சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கிறது என்றும் பொருள். 7 சதவிகிதத்துக்கும் மேல் என்றால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இல்லை, 8 சதவிகிதத்துக்கு மேல் என்றால், மிக மோசமான நிலை என்று பொருள்.

ஹெச்.பி.ஏ.1.சி (HbA1c) அளவு

ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்டின் இந்த அளவீடுகளில்தான் இப்போது சிக்கல் உருவாகியிருக்கிறது. இந்த 7 சதவிகிதம் என்ற அளவு, இப்போது அமெரிக்க மருத்துவர்கள் அமைப்பு (American college of physicians) மூலம் 8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் க்ளினிக்கல் எண்டோக்ரைணாலஜி (American Association of Clinical Endocrinolog), 6.5 சதவிகிதம் தான் சரியான அளவெனக் கூறுகின்றனர். அமெரிக்கன் டயாபிடிஸ் அசோசியேஷன்  (American Diabetes Association) 7 சதவிகிதத்தையே சரியெனக் கூறுகின்றனர். 

இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்கள் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவுகளை, நோயாளியின் வயது மற்றும் அவரது உடலில் ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளை வைத்துதான் அளவிடுவார்கள். பொதுவாக 6.5 முதல் 7 சதவிகிதம் வரை சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றுதான் நோயாளிகள் அறிவுறுத்தப்படுவார்கள். உதாரணமாக, சர்க்கரைநோயைத் தவிர உடலில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் 7 சதவிகிதம் என்ற அளவை மிகத் துல்லியமாக வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். உடல் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், நோயாளியின் உடல் சிகிச்சைக்கு முழுவதுமாக ஒத்துழைக்காமல் போகும் என்பதால் அவர்கள், 8 சதவிகிதம் வரை இந்த அளவை வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். இதுபோன்ற சூழலில் சர்க்கரைநோயைத் தவிர உடல் சார்ந்த எந்த பாதிப்பும் இல்லாத ஒருவர் 8 என்ற சர்க்கரை அளவை சரியானதாக நினைத்துக்கொண்டு, அதைப்பின்பற்றுவது அவரது சர்க்கரை பாதிப்பை தீவிரப்படுத்தக்கூடும். இப்படி சர்க்கரைநோய்க்கான பாதிப்பு அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கும். உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்” என்கிறார் சர்க்கரை மற்றும் நாளமில்லா சுரப்பி மருத்துவர் ராம்குமார்.

ஏன் இந்தச் சிக்கல்?

சர்க்கரைநோய்க்கான அளவை அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் அதிகரித்ததுபோல், அண்மையில் ரத்த அழுத்தத்துக்கான அளவுகோலை அமெரிக்க இதயநல மருத்துவர்கள் சங்கம் குறைத்திருக்கிறது. இதுவரை 140/90 எம்.எம்.ஹெச்.ஜி என்று இருந்த அளவு, 130/80 என பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அளவு மாற்றங்கள் குறித்து பொது மருத்துவர் கு.கணேசனிடம் பேசினோம்…

சர்க்கரைநோய்

“சர்க்கரைநோய்க்கான அளவு எட்டாகிவிட்டால், 7-8 சதவிகிதம் அளவிலிருப்பவர்கள், தாங்கள் சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, தங்களுடைய சிகிச்சை முறைகளைத் தளர்த்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அமெரிக்க சர்க்கரைநோய் சங்கத்தின் ஆய்வுகள், அங்கே வாழ்பவர்களின் வாழ்வியலைப் பொறுத்தது. அவர்கள் கூற்றுப்படி, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவு 7 முதல் 8 சதவிகிதம்வரை, எந்த அளவிலிருந்தாலும், அது ஏற்படுத்தும் பாதிப்புகளில் மாற்றமிருக்காது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தியாவின் உணவு, சூழல், தட்பவெப்பநிலை முதலியவற்றை ஒட்டி இந்த ஆராய்ச்சி அமையவில்லை. அப்படியென்றால், `நாம் இப்போது பின்பற்றும் 6.5 – 7 சதவிகிதம் என்ற அளவு யாரால் முன்மொழியப்பட்டது?’ என நீங்கள் கேள்வி எழுப்பலாம். அது, இந்தியாவைச் சுற்றியுள்ள சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளம் போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த  கோட்பாடு. ஆக, நமக்குப் பொருந்தும் அளவுகோல் 6.5 – 7 சதவிகிதம்தான்.

இது போன்ற அளவு விரிவாக்கங்கள், ஒருவரின் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தவும், பாதிப்பே இல்லாதவர்களை நோயாளியாக்கவும் செய்துவிடும். இதெல்லாம் இன்று, நேற்று நடப்பதல்ல. சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு எனப் பல விஷயங்களில் அமெரிக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு, மாற்று அளவுகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. இப்படி நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மருந்து வியாபாரிகளுக்கு மட்டுமே நன்மை இருக்க முடியும். அமெரிக்க ஆய்வுகள் அனைத்தும், அனைத்து நேரங்களிலும் அனைத்து இடங்களிலும் பொருந்தாது. ஒவ்வோர் இடத்தைப் பொறுத்து மாறுபடும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, இந்திய அளவில் மருத்துவ ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். குறைந்தபட்சம், இப்போதைய தீர்வாக இந்த ஆய்வு முடிவுகளை ஏற்காமலாவது இருக்க வேண்டும். இந்தியாவில் செய்யப்படும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அளவு நிர்ணயங்கள் மாற்றப்படுவது மட்டுமே சரியான மாற்றமாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் கு.கணேசன் அழுத்தம் திருத்தமாக!