ஒரு துளி மானுடம் – அஞ்சுமனின் பெருநாள் சந்திப்பு..


Advertisements

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்..


 

அஞ்சுமன் அறிவு மையம் ஏற்பாட்டில் 4.8.18 அன்று நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நோயறிதல் முகாமை டாக்டர் L.M. ஷெரீப் தலைமையில் நடைபெற்றது. ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி மௌலவி A. பக்ருதீன் பாரூக் மற்றும் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹாமித் முன்னிலை வகித்தனர்.

அஞ்சுமன் செயலாளர் A. லியாகத் அலி அவர்கள் நிகழ்ச்சி குறித்து அறிமுகம் செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்

முகாமில் India turns Pink அமைப்பினர் தெளிவான வழிகாட்டுதல்களுடன் Power point Presentation ஐயும் வழங்கி கலந்துகொண்ட மகளிர்க்கு பெரும் பயனை அளித்தனர். நிகழ்ச்சியின் இறுதி ஒரு மணிநேரத்திற்கு அரங்கில் இருந்த ஆண்கள் முழுமையாக வெளியேறி, பங்கேற்ற பெண்கள் தங்களின் ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பம்சம்..

எங்கள் பணியைக் காட்டிலும் மும்மடங்கு சிறப்பாக இருக்கிறது ஷாஜஹானின் புத்தகம் என்பது ITP அமைப்பினரின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அதிலும் செவிலியர் சகோ. கீதா பேசும்போது, “தொடர்ந்து இந்த களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கே பல விசயங்களைத் தெளிவுபடுத்தியது இந்த நூல்” என்று சொன்னதில் ஷாஜியைக் காட்டிலும் நாங்கள் அனைவரும் பெருமை கொண்டோம்.

பிரயோஜனமான மாலைப் பொழுதை செம்மையாகத் திட்டமிட்டு நடத்திய அஞ்சுமன் மகளிர் மையப் பொறுப்பாளர்கள் பாராட்டுக் குரியவர்கள். 2030க்குள் மார்பகப் புற்றுநோயால் ஒருவர் கூட மரணிக்கக் கூடாது என்ற குறிநோக்கில் அயராது பாடுபடும் India Turns Pink, Puducherry Chapterக்கு வாழ்த்துகள்..

அஞ்சுமன் மகளிர் மையம் தலைவர் தஸ்லிமா மலிக் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

கால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை


கோட்டக்குப்பம் முராது வீதி பழையபட்டின பாதை தொடங்கி சக்கில் வாய்க்கால் வரை முழுவதும், மற்றும் பள்ளிவாசல் தெரு, தைக்கால் திடல் போன்ற பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் பகுதிகள் உள்ள வாய்க்கால்களை சரி வர பராமரிக்காமல் விட்டதின் விலைவாக அதில் மணல், குப்பை சேர்ந்து கால்வாயின் ஆழம் குறைந்துள்ளது. இதன் காரணமாக மழை நீர் மற்றும் கழிவு நீர் தெருவில் ஓடி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் அதிகம் கூடும் ஷாதி மஹால் மற்றும் தர்கா அருகில் தண்ணீர் தேங்கி நின்றும் தெருவில் ஓடியும் அருவருப்பை உருவாகியுள்ளது.

வருகிற மழை காலத்தை கருத்தில் கொண்டு பேரூராட்சி துரித நடவடிக்கை எடுத்து அணைத்து வாய்க்கால்களையும் துர் வாரி கழிவு நீர் மற்றும் மழை நீர் தெருவில் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதனை வலியுறுத்து கிஸ்வா அமைப்பினர் சார்பாக இன்று பேரூராட்சி செயல் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

மாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி.


 

செய்தி உதவி : அஞ்சுமன் செயலாளர் லியாகத் அலி

 

மிகச் சிறப்பாக நடைபெற்ற மாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி..

நிகழ்ச்சி குறித்து அஞ்சுமன் முன்வைத்த நோக்கத்தின் விளக்கவுரையாகவே நிகழ்ச்சி அமைந்தது கூடுதல் சிறப்பு.. விவாதத்தை சீராக அமைத்துக்கொள்ள வழங்கப்பட்ட 4 அம்ச கருப்பொருளுக்கு உள்நின்று, வகுக்கப்பட்ட நெறிமுறைகளை மீறாமல் மிகச் சிறந்த உரையாடல் அரங்கைக் கட்டமைத்த கருத்தாளர் அனைவரும் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள் ஆவர்..

இச்சனநாயக உரையாடலை மேற்கொண்ட கருத்தாளர்கள் அன்பிற்கினிய அஹமத் ரிஸ்வான் (SIO) அப்ஜெல் பாஷா (SMI), வதனுர் சே சிவா (RSF) அனஸ் சுல்தானா (SFI), எழிலன் (Aisf) , சுஹைல் அப்துல் ஹமீது (ASA) ஆகிய அனைவரும் மிகச் சிறப்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்..

விவாதத்தின் இடையீட்டாளர்களாக அமைந்த தோழர்கள் ஜலால் , விசாகன் மையக் கருத்துக்களை உள்வாங்கி செம்மையான தொகுப்புரையை வழங்கினர். இதற்கு தலைமையேற்று நெறிபடுத்திய பேரா. இளங்கோ நாகமுத்து தம்முடைய தனி முத்திரை பதித்த நிறைவு கருத்துக்களை பதிவு செய்து நிகழ்ச்சியை வேறொரு தரத்திற்கு உயர்த்தினார்..

நோக்கர்களில் பாலசுப்ரமணியன் ஜென்னி உட்பட மூவர் தங்களின் கருத்துக்களை அழகாக எடுத்துரைத்தனர். பங்கேற்ற அனைவரும் காலத்தின் தேவையறிந்து முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சியையும் அதன் அமைப்பையும் வெகுவாக பாராட்டி இது ஒரு தொடக்கம்.. இது மேலும் வெவ்வேறு மட்டங்களில் தொடரும் என்று மகிழ்ச்சி தரும் செய்தியை வழங்கிச் சென்றனர்..

சென்னை புதுவை ECR இன் மற்றொரு 82 கி.மீ. நீட்டிக்கப்பட உள்ளது


கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கத் திட்ட நிலம் கையகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மரக்காணம் பகுதி மக்கள், 5 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.சென்னை-புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலை (332ஏ) விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசு நெடுஞ்சாலைத் துறை செயல்படுத்த உள்ளது.தற்போது, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையிலான சாலையை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளனர்.இதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம், ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, அனுமந்தை, செட்டிக்குப்பம், கீழ்பேட்டை, கூனிமேடு, பனிச்சமேடு உள்ளிட்ட கிராமங்களில், கிழக்கு கடற்கரைச் சாலையோரம் உள்ள நிலங்களை வருவாய்த் துறையினர் அளவீடு செய்து வருகின்றனர்.இந்தத் திட்டத்துக்காக, மரக்காணம் பகுதியில் 180 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மரக்காணம், அனுமந்தை பகுதிகளைச் சேர்ந்த ஜி.பாஸ்கர், என்.சுகுமாரன், எஸ்.ஆவணி, எஸ்.சந்திரன் உள்ளிட்ட நில உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்துக் கூறியதாவது:மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியைச் சார்ந்து வாழ்ந்து வருகிறோம். அரசின் சாலை விரிவாக்கத் திட்டத்தால், வாழ்வாதாரமும், எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமந்தை கிராமத்திலுள்ள வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள், உணவகங்கள், வீட்டு மனைகள், விளைநிலங்கள் என அனைத்தும் கையகப்படுத்தப்படுகிறது.அனுமந்தை கிராமம், சுற்றுப்புற 25 கிராமங்களுக்கு நுழைவு வாயிலாக உள்ளது. சுங்கச்சாவடி, கிழக்கு கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தம், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் உள்ள வளர்ச்சி பெற்ற பகுதியாகும். மீன்பிடி தொழில், தென்னை சாகுபடி சிறந்து விளங்குகிறது.அதனால், இங்குள்ள விளைநிலங்களின் மதிப்பும் உயர்ந்துள்ளது.எங்களின் நிலங்களை எதிர்கால வாழ்வாதாரத்துக்காக வைத்துள்ளோம். நிலம் கையகத்துக்கு அண்மையில் சாலையோரம் 30 மீட்டர் அளவுக்கு அளவீடு செய்த நிலையில், தற்போது நிலங்களுக்கான சர்வே எண்களை அறிவித்து நிலங்களை கையகப்படுத்த உள்ளதாகவும், அதுகுறித்து 21 நாள்களுக்குள் முறையிடுமாறு திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.நிலங்களை முழுமையாக கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தற்போது ஒரு சென்ட் நிலம் ரூ.9 லட்சத்துக்கு விலை போகிறது.இதைக் கருத்தில்கொண்டு கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீடாக சந்தை மதிப்பைவிட 5 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுகுறித்து நிலம் கையகப் பிரிவு தனி மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

பாரம்பரிய பிரியர்களுக்காக கோட்டகுப்பதில் செயல்படும் தனித்துவமான விற்பனையங்கள்!


புதுவை அருகே உள்ளது கோட்டக்குப்பம் என்கிற பகுதி. இங்கு பழைய மர பொருட்களை வாங்கி அதை புதுபித்து விற்கும் 50-க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் உள்ளது. ஆரம்பகாலத்தில் இப்பகுதிக்கு அருகே ஆரோவில் இருப்பதால் இங்கு சில வெளிநாட்டவர்கள் வருகை தருவது உண்டு. எனவே இங்கு ஒரு சில பாரம்பரிய விற்பனையகங்கள் தொடங்கப்பட்டது. பின்னர் நாளடைவில் இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பழைய பாரம்பரிய மர பொருள் விற்பனையகங்கள் தோன்றியது.

புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் செட்டிநாடு வகை வீடுகள் என்று அழைக்கப்படும் பாரம்பரிய கட்டிடங்கள் ஏராளமாகவே உள்ளது.இந்தக் கட்டடங்களை காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்படுவது உண்டு. அவ்வாறு இடிக்கும் போது பழையது என்று தூக்கி வீசப்படும் கதவு, ஜன்னல், இரும்பு சாமான்கள் போன்ற பழைய மரத்தாலான பொருட்களை வாங்கி, அதில் பயன்பட தகுந்த பொருட்களை புதுபித்து விற்கின்றனர். இங்குள்ள விற்பனையாளர்கள், மிகவும் மோசமான நிலையில் உள்ள மர பொருட்களை கூட மெருகேற்றி பாரம்பரியம் மாறாமல் விற்றுவருகிறார்கள். கதவு, ஜன்னல் மட்டுமின்றி ஒத்தவண்டி எனப்படும் மாட்டுவண்டி சக்கரம், மர உலக்கை, பெரிய மரத்தூண்கள், மரத்தாலான குதிரை, யானை போன்ற பொருட்களும் விற்பனையகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள விற்பனையகத்தில் உள்ள பாரம்பரிய பொருட்களை வாங்க வெளி மாநிலத்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பாரம்பரியம் மாறாமல் திருமணம் செய்யவேண்டும் என நினைப்பவர்கள் கோட்டக்குப்பத்தில் உள்ள விற்பனையகத்திற்கு வந்து பாரம்பரியத்துடன் காட்சியளிக்கும் பீரோ, கட்டில், டைனிங் டேபில், சேர் போன்ற பொருட்களை வாங்கி செல்கின்றனர். பாரம்பரிய மர பொருட்கள் விற்பனையகங்கள் ஒருபுறம் இருக்க அதே பகுதியில், ட்ரங்கு பெட்டி எனப்படும் பழைய இரும்பு பெட்டிகள், பழைய பிலிம் ரோல், கேமரா பெட்டர்மாஸ் லைட், கிரமோபோன் போன்ற பழைய தொலைபேசிகள், வால்வு ரேடியோ, பழைய வகை டேப் ரெக்காடர், ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உயர் ரக மது பாட்டில்கள், பழைய சமயல் பாத்திரங்கள், 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் என சுற்றி சுற்றி பார்த்து வியக்கவைக்கும் வகையில் மற்றொரு ரக பாரம்பரிய விற்பனையகங்களும் இங்கு உள்ளது. பழமை மறந்து நவீன வாழ்க்கை முறைக்கு மாறிவரும் மக்கள் மத்தியில் பாரம்பரியத்தை தேடி வருபவர்களுக்காக பாரம்பரியம் உயிர்தெழும் வகையில் இவர்கள் செய்யும் தொழில் பலரையும் கவர்ந்து வருகிறது.

 

Credit : EENADUINDIA

ஜமியத் நகரில் தூக்கில் ஆண் சடலம்: கொலையா? போலீஸ் விசாரணை


 

 

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜமீத் நகர் பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் அங்கு ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவருக்கு சுமார் 50 வயது இருக்கும். யாராவது அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.