கோட்டக்குப்பம் ஆவணப்பட விழா


கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் ரீசைக்கிள் பின் வாசகர் வட்டம் (01.05.18) இன்று கோட்டக்குப்பம் வரலாற்றின் முதல் ஆவணப்பட விழாவை கவி கா.மு. ஷெரீஃப் நினைவரங்கில் அரங்கேற்றியது.. விழாவிற்கு அஞ்சுமன் செயலாளர் அ.லியாகத் அலி தலைமை தாங்கினார். வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர் அனஸ் சுல்தான் வரவேற்புரை ஆற்றினார். அஞ்சுமன் செயலாளர் அவர்கள் //முஸ்லிம் சமூகம் ஊடகங்களைக் குறை பேசிக் கொண்டிருப்பதை விடுத்து, அவற்றில் பங்கேற்பது குறித்தும் பங்களிப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.. தங்களின் கலாச்சார, பண்பாட்டு சிக்கல்களை ஆவணப்படுத்த தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள இதுபோன்ற விழாக்கள் பயனளிக்கும்// என்ற அஞ்சுமனின் நம்பிக்கையைத் தன் தலைமையுரையில் பதிவு செய்தார்.

விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் தோழர்.கருப்பு கருணா, //சினிமா, இசை ஹராம் என்று நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்ட சமூகத்தில், ஆவண மற்றும் குறும்படம் குறித்த பார்வையும் உரையாடலும் நடைபெறுவது உள்ளூர் திறன்களை வெளிக்கொணர பேருபகாரமாக அமையும். அதுவே இந்த விழாவின் மாபெரும் வெற்றி// என்றார்.

சுமார் 10.45 மணியளவில் தமிழ் முஸ்லிம்களின் வேர்களைத் தேடும் “யாதும்” ஆவணப்படம் திரையிடப்பட்டது.. படம் முடிந்த பிறகு, படத்தின் இயக்குநர் கொம்பை அன்வர் , படத்தை எடுக்க நேர்ந்த பின்னணியையும் தமிழ்ச் சமூகத்தில் இயல்பாகவே இழையோடும் இணக்கக் கூறுகளைத் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து //ஆவணப்படம் எடுப்பதை எளிமையான விசயமாக கருதாமல், மக்களுக்கான குரலைப் பதிவு செய்யும் பணியாக சிரத்தையோடு செய்ய வேண்டும். ‘யாதும்’ ஆவணப்படத்தின் ஒரு ஃபிரேம் கூட இதுவரை யாராலும் ஆட்சேபிக்கப் படவில்லை என்பதே அதன் உண்மைத் தன்மையையும் பின்னணியில் உள்ள உழைப்பையும் பறைசாற்றும்// என்று பேசினார்..

இரண்டாவது அமர்வில் முதுகெலும்பு (அழிந்து வரும் விவசாயம்), டுலெட் (வாடகை வீடு பிரச்சனை), முங்கேசா (தண்ணீர் பிரச்சனை குறித்த ஈரானிய படம்), கோமல் (குழந்தைகள் பாலியல் தொந்திரவு), கரம்கொடு (இரத்ததானத்தை வலியுறுத்த உள்ளூர் இளைஞர்கள் தயாரித்த படம்) என பல்வேறு விருது பெற்ற படங்கள் திரையிடப்பட்டன. இந்த படங்கள் குறித்தப் பார்வையை பதிவு செய்த தாகூர் கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேரா.இளங்கோ நாகமுத்து சுவைஞர்களோடு சுவாரஸ்யமான உரையாடலை நிகழ்த்தினார். முழுநீள திரைப்படங்களுக்கும், ஆவண மற்றும் குறும்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிச் சொன்னது சிறப்பாக அமைந்தது.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் தொடங்கிய மூன்றாம் அமர்வில், நடந்த கதை (சாதிய ஒடுக்குமுறை), மக்கு (படிப்பு தீவிரவாதம்) ஆட்டோக்கார அண்ணன் (ஆட்டோக்காரர் அவலம்), அஞ்சுமன் நூலகம் (வரலாற்று ஆவணம்), God is Greatest (சிரிய உள்நாட்டுக் கலவரத்தில் கொல்லப்படும் சாமானியர்கள்), மாற்று விவசாயம் குறித்த படம், Refuge (அகதிகள் குறித்த படம்) ஆகியவை திரையிடப்பட்டன. மேற்படி படங்கள் குறித்து ஈழ எழுத்தாளர் திரு. கவுரிபால் சாத்திரி கருத்துரைத்தார். ஒரு அகதியின் உணர்வு சார்ந்த போராட்டத்தை சொந்த அனுபவத்தில் எடுத்துரைத்த சாத்திரி, //என் தாயை முப்பது ஆண்டுகளுக்கு பிறகும் தம்பியை 32 ஆண்டுகளுக்கு பிறகும் சந்தித்த அவலத்தை// உணர்ச்சி பிழம்பாகப் பேசினார்.

நிறைவு நிகழ்வாக காயிதே மில்லத் கதை திரையிடப்பட்டது. விழாவில் ஊடகவியலாளர் திரு. PNS. பாண்டியன் வழங்கிய வாழ்த்துரையில் கோட்டக்குப்பம் புதுவையோடு இல்லாதது குறித்தும் கோட்டக்குப்பத்தில் தாம் இல்லாதது குறித்தும் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார். இறுதியாக நிறைவுரையாற்றிய புதுவை நகர ஜமாத்தே இஸ்லாமி தலைவர் அப்துல் ஹமீத் , இன்றைய சூழலில் ஊடக வலிமைதான் ஒரு சமுதாயத்தின் நிஜ வலிமை என்பதைக் குறிப்பிட்டு, அந்த ஆயுதத்தை கைகொள்வது குறித்த சிந்தனையை விதைத்து விழாவை முடித்து வைத்தார்..

குறும்படங்களை இயக்கி வெளியிட்ட இளவல்கள் அனைவருக்கும் “கலைக்குரிசில்” விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. முடிவில் சிறப்பு விருந்தினர் அனைவரும் ரீ சைக்கிள் பின் வாசகர் வட்டத்திற்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினர். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நண்பர் ஸ்ரீதரன் “நாத்திகனின் பிரார்த்தனைகளோடு” கௌரவப்படுத்தியது அஞ்சுமன்.. நிறைவாக அஞ்சுமன் இளைஞர் நல செயலர் அப்துல் மாலிக் நன்றியுரை யாற்றினார்..

கட்டுரை உதவி / தோழர் கலீமுல்லாஹ்

Advertisements