எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்


தபால்காரர் நமது அன்றாட வாழ்க்கையின் மிக முக்கிய அங்கத்தினராகத் திகழ்ந்த நாட்கள் அவை…

“கிளிங் கிளிங்” என்று சைக்கிள் பெல்லின் மணியோசை அவர் வருவதை அறிவிக்கும்.

செயல் தலைவர் பாஷையில் சொன்னால் தபால்காரர் வரும் முன்னே கிளிங் கிளிங் ஓசை வரும் பின்னே …..

காலை நேர பரபரப்பு முடித்து, முந்தானையில் கை துடைத்தபடி பெண்கள் வீட்டு வாசலில் நிற்க தொடங்குவார்கள்… வெளிநாட்டில் தங்கள் மகன் அல்லது கணவர் போடும் கடிதத்தை ஆவலோடு எதிர்நோக்குவார்கள்…மாத தொடக்கத்தில் வரும் பதிவு தபால் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் (அதில் தான் செக் DD இருக்கும்)…

ஓய்வு பெற்ற திண்ணை தாத்தாக்களின் பார்வைகள் தெருக்கோடியை மொய்க்கும் ! …

பதினொரு மணி வாக்கில் பளபளக்கும் சைக்கிளில் தபால்களும், பார்சல்களும் தளும்ப, சந்தன பொட்டோடு வலம்வருவார் தபால்காரர் ஐயா ராமலிங்கம் !

ஒவ்வொருவீட்டு வாசலின் விசாரிப்புக்கும் ஒவ்வொருவிதமாய்ப் பதிலளிப்பார்… ஆனால் முகத்தின் சிரிப்பு மாறாது !

வீட்டில் இருக்கும் அணைத்து நபர்களின் பெயர்களும் அவருக்கு அத்துப்படி. வீட்டில் இல்லை என்றால் வெளியில் எங்கயாவது பார்த்தால் உங்களுக்கு லெட்டர் வந்து இருக்கு என்று கொடுத்து விட்டு செல்வார்.

தலைவாசலில் நின்று அவர் விசிறும் கடிதங்கள் மிகச் சரியாய் வீட்டினுள் விழும் !

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் திண்ணையில் தபால்காரர் அமர்ந்தால் மணியார்டர்… ரெஜிஸ்டர் தபால் அல்லது பார்சல் !

மணியார்டர் பாரத்தை விரித்து, பணத்தை எண்ணுபவருக்கு உபசாரம் தூள் பறக்கும் ! வரும் தொகையின் அளவை பொறுத்து அவரின் கையில் கொஞ்சம் தினிப்பவர்களும் உண்டு ! காபியோ, டீயோ அல்லது சிறு பணமோ எதுவாக இருந்தாலும் சிரிப்புடன் பெற்றுக்கொள்வார் !

திருமணம் மற்றும் விட்டு விசேஷங்களுக்கு கூப்பிட்டால் தவறாமல் ஆஜராவார். அதுநாள் வரையிலும் காக்கி சீருடையில் மட்டுமே பார்த்த தபால்காரர் சாதாரண மனிதராக குடும்பத்துடன் வருவார்.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவை கொண்டுவரும் தபால்காரரை தலையில் தூக்காத குறையாகக் கொண்டாடிய காலம் !

பள்ளியில் படிக்கிற இளம்பருவத்தினர் ஊருக்கு வரும் தபால்காரரின் சைக்கிள் பின்னாலேயே தபால்காரர் தபால்காரர் என சப்தமிட்டுக்கொண்டே பிள்ளைகள் ஓடுவார்கள்….

80 – 90 களில் வரும் புரொமோட்டேட் டூ தி நெக்ஸ்ட் கிளாஸ் ( PROMOTED TO THE  NEXT CLASS ) என்ற பாடாவதி ரப்பர் ஸ்டாம்ப் அடித்து எச் எம் கையேழுத்து போட்டு வரும் தபால் கார்டுகளை பார்த்து வருட முடிவில் ரிசல்ட் பார்த்து குதித்து தொலைப்போம்…. சில நேரங்களில் நீ பாஸ் பண்ணிட்டே என்று தபால்காரர் கார்ட்டை பார்த்து படித்து சொல்லி விட்டு போய் விடுவார். 

 

கல்லூரி மாணவர்களுக்கு இன்டெர்வியூ கார்டு, வேலை வாய்ப்பு குறித்து கடிதம், வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் இளைஞர்களின் பாஸ்போர்ட் போன்ற அனைத்தும் இவர் மூலமே வந்தடைந்தது.

அரசு ஊழியர் என்ற நிலையைத் தாண்டி, ஒவ்வொரு நாளும் நம் வீடு வரும் சொந்தக்காரரை போலத் தபால்காரர் நடத்தப்பட்ட காலம் ! சம்பளத்துக்கு வேலை என்ற கடமையையும் தாண்டி தான் சுமந்து வரும் கடிதங்களில் பொதிந்த சுக துக்கங்களைத் தன்னுடையவைகளைப் போலப் பாவித்த அரசு ஊழியரின் காலம் !

கோட்டக்குப்பம் ஊர் தொடங்கி பெரியமுதலியார் சாவடி வரை இவரே அனைத்து ஊர்களுக்கும் தபால் பட்டுவாடா செய்தார்.

அவருக்கு வேறு ஊருக்கு மாறுதல் மற்றும் வேறு உயர் பதவி கிடைத்தும் நமதூரை விட்டுச் செல்லாமல் கடைசி வரை தபால்காரராக இருந்து ஓய்வு பெற்றார்.

இப்பொழுதெல்லாம் கோட்டகுப்பதின் யார் தபால்காரர்  என்றே தெரியவில்லை . லெட்டர் கூட அதிகம் வருவதில்லை. எதுவாக இருந்தாலும் போனில்தான்.

தபால்காரர் கொண்டு வந்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் கொடுத்த சந்தோஷத்தில் கடுகளவேனும் இன்றைய இணைய வாழ்த்துக்கள் கொடுக்கின்றனவா என்றால் சத்தியமாக இல்லை என்பதே உண்மை. நான்கு வரிகளையோ அல்லது இணையத்தில் எடுத்த படங்களையோ ஒட்டு மொத்தமாய் அனைவரின் முகவரிக்கும் அனுப்பவதில் அப்படி என்ன ஆனந்தம் இருந்துவிடப் போகிறது?

வாழ்த்து அட்டைகள் தொலைந்த இந்த நாட்களில் ஒப்புக்காக நாம் சொல்லும் வாழ்த்தில் ஏனோ நெருக்கமான அன்பும் 1.50 பைசா அட்டை கொடுத்த சந்தோஷமும் இல்லாமல் போய்விட்டது என்பதே உண்மை. 

முன்னேற்றங்கள் முக்கியமானவைகளை ஏப்பம் விட்டுவிட்டன… உறவுகளுக்குள் பாசத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிட்டன.

புதிய தொழில்நுட்பஅலை சுகம், துக்கம், காதல், பிரிவு, நட்பு, துரோகம் என ஒரு தலைமுறையின் அனைத்து உணர்ச்சிகளையும் சுமந்து சுற்றிய கடிதம் மற்றும் அதனை சுமந்து வந்த தபால்காரர்களை மறக்கடித்துவிட்டது.

இனி வரும் தலைமுறை நாம் அனுபவித்தவற்றில் பலவற்றை இழந்து கணிப்பொறியே உலகம் என வாழப் போகிறது என்பது வேதனைக்குறியதாக இருந்தாலும் மாற்றங்கள்  உலகில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஊரின் அணைத்து சுக துக்கத்தில் பங்கு கொண்ட நம்ப ஊர் தபால்காரர் ஐயா ராமலிங்கம் அவர்கள் வாழ்க பல்லாண்டு !!!!!

Advertisements