புதுவையில் இருந்து கோட்டகுப்பத்துக்கு இடம்பெயரும் வர்த்தகர்கள்


pudhuvai_industry_2936966f

 

நன்றி : தமிழ் ஹிந்து

புதுச்சேரியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டுள்ள சிறு வணிக நிறுவனங்கள் மூடப்பட் டுள்ளதாக வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதுப்பிக்காத காரணத்தால் கடந்த 12 ஆண்டுகளில் 7,892 வணிக நிறுவனங்களின் உரிமத்தை புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டதன் காரணமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் இயங்கி வந்தன. இந்நிலையில் புதுச்சேரியில் தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப் பட்டன.

புதுச்சேரி அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் புதுச்சேரியில் இருந்து வெளியேறின. இந்த தொழிற்சாலைகளின் வெளியேற்றம் சிறு வணிக நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளன.

2004-ம் ஆண்டு முதல் தற்போது வரை புதுப்பிக்காத காரணத்தால் புதுச்சேரியில் வரி செலுத்தும் பட்டியலில் இருந்த 7,892 சிறு வணிக நிறுவனங்களின் உரிமத்தை புதுச்சேரி அரசு ரத்து செய்து அதற்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: புதுச்சேரியில் பெரிய தொழிற்சாலைகள் சமச்சீர் வரியால் மூடப்பட்டதை தொடர்ந்து, ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் வேலை வாய்ப்பை இழந்தனர். இதில் பெரும்பாலானோர் தமிழக பகுதிக்கு குடியேறினார்கள். அதைத்தொடர்ந்து ஏடிஎம் இயந்தி ரங்கள் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கி பல நிறுவனங்கள் தமிழகம் உட்பட வேறு மாநிலத்துக்கு மாறின. இதனால் புதுச்சேரியில் வாங்கும் சக்தி குறைந்ததை தொடர்ந்து சிறு வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

பல சிறு வணிக நிறுவனங்களும் திண்டிவனம், கோட்டக்குப்பம் என புதுச்சேரி அடுத்துள்ள தமிழக பகுதிக்கு சென்று விட்டன. இதனால் புதுச்சேரியில் முன் எப்போ தும் இல்லாத அளவுக்கு வாடகை வீடுகள் காலியாக உள்ளன.

புதுச்சேரி அரசின் கணக்கெடுப்பின்படி 12 ஆண்டுகளில் 7,892 வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என குறிப்பிட் டுள்ளனர். வணிக வரி செலுத்துவோர் பட்டியல் அடிப்படையில் இவ்விவரத்தை வெளியிட்டுள்ளனர். வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத, ரூ.10 லட்சத்துக்குள் விற்பனை செய்யும் பலரும் சிறு நிறுவனங்களை மூடியுள்ளனர். உண்மையில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது என்பதே உண்மை.

புதிதாக பொறுப்பேற்றுள்ள புதுச்சேரி அரசாவது விரிவான ஆய்வு நடத்தி புதுச்சேரியில் மீதமுள்ள சிறு வணிக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.