பெண்கள் ஜாக்கிரதை :- கோட்டக்குப்பம் பகுதியில் 2 பெண்களிடம் செயின் பறிப்புகோட்டக்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பெண்களிடம் தாலிச் செயின்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி விஜயா(27). இவர், இடையன்சாவடி பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், வேலை முடிந்து, இடையன்சாவடி பகுதியிலிருந்து குயிலாப்பாளையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது, பின்தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், திடீரென, மோட்டார் சைக்கிளில் வந்த விஜயாவின் கழுத்திலிருந்த, ரூ.1.5 லட்சம் மதிப்பிலான, 7 பவுன் தங்கத் தாலிச் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதில், நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த விஜயா, போலீஸில் புகார் கொடுத்தார். இது குறித்து, ஆரோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டக்குப்பத்தில் செயின் பறிப்பு:
கோட்டக்குப்பம் அருகே உள்ள பிள்ளைச்சாவடி பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி விமலா(40). இவர், புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பணி முடிந்து, தனது மோட்டார் சைக்கிளில் அவர், புதுவையிலிருந்து பிள்ளைச்சாவடி நோக்கி வந்தார். கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சறுக்கு பாலம் அருகே வந்தபோது, பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், திடீரென விமலாவின் கழுத்திலிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 2 பவுன் தங்க தாலிச் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டக்குப்பம் பகுதியில், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் செயின் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements