தொடரும் மணல் அரிப்பால் மீனவ கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம்


நன்றி : தினகரன் நாளிதழ்

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுக்குப்பம், சின்னமுதலியார்சாவடி, சோதனைகுப்பம், பொம்மையார்பாளையம் ஆகிய கிராமங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்த கிராமங்கள் கடலோரத்தில் அமைந்துள்ளதால் கடலரிப்பு ஏற்பட்டு கடல்நீர் ஊருக்குள் நுழையும் அபாய சூழல் இருந்து வருகிறது.

IMG_1932

குறிப்பாக இந்த கிராமங்களில் சின்ன முதலியார்சாவடி கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில்  ஏற்கனவே கடற்கரை இருந்த பகுதியில் இருந்து வெகு தொலைவுக்கு தாண்டி கடல்  ஊருக்குள் வந்துவிட்டது. இதில் கடற்கரையோரம் இருந்த பல வீடுகள், பொது இடங்கள்  உள்ளிட்டவை கடலுக்குள் சென்றுவிட்டது. இதனால் இப்பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில்,சுப்பிரமணி, சின்னமுதலியார்சாவடி: சின்ன முதலியார்சாவடியில் சுமார் 2500 பேர் வசித்து வருகிறோம். 2004ம் ஆண்டில் சுனாமிக்கு பிறகு எங்கள் பகுதியில் அதிகளவில் கடலரிப்பு ஏற்படுகிறது. முன்பு இருந்ததை விட 160 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்ளே வந்துவிட்டது. ஊரில் இருந்த 3 தெருக்கள் கடலுக்குள் சென்றுவிட்டது. இதில் இருந்த 120 வீடுகள் அடித்து சென்றுவிட்டது. மேலும் 20 மின்கம்பங்கள், 3 வலை பின்னும் கூடம், ஒரு ஏலக்கூடம் ஆகியவையும் கடலுக்குள் சென்று விட்டன. இப்படியே சென்றால் எங்கள் ஊர் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

பார்த்திபன், சின்னமுதலியார்சாவடி: எங்கள் கிராமம் கடலரிப்பால் பாதிக்கப்படுவதால் பல போராட்டங்கள் நடத்தினோம். இதன் விளைவாக கடந்த 2011ம் ஆண்டில் சின்ன முதலியார்சாவடியில் இருந்து பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி ஆகிய பகுதிகளில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலோரத்தில் கருங்கல் தடுப்புச்சுவர் எழுப்ப தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் சின்ன முதலியார்சாவடி பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கவும் உத்தரவு இடப்பட்டது. இதற்காக ரூ. 33 கோடியே 93 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி 700 மீட்டர் தூரத்திற்கு கருங்கற்கள் கொட்டப்பட்டது. அதற்குள் பசுமை தீர்ப்பாயத்தில் தடை உத்தரவு வாங்கிவிட்டார்கள். இதனால் பணி பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் கடல் ஊருக்குள் புகும் அபாயம் இருந்து வருகிறது.         
ராஜேந்திரன், நடுக்குப்பம்: எங்கள் பகுதியில் கடலரிப்பு அதிகளவில் இருக்கிறது. இதனால் இங்கு சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு கற்கள் கொட்டி தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடலில் அலையின் வேகம் குறையவில்லை. மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு செல்லும்போது அலை அதிக வேகத்தில் வீசுகிறது. இதனால் படகுகள் அடித்து சென்று கற்களில் மோதுகிறது. சமீபத்தில் 4 பேருடன் நான் கடலுக்கு சென்றபோது அலையின் வேகத்தால் கற்களில் படகு மோதி பெரும் விபத்து நடந்தது. இதில் நான் உயிர் பிழைத்ததே அரிதாகி விட்டது. காயம் பலமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்தேன். இதில் நாங்கள் சென்ற படகும் சேதமாகிவிட்டது.

தேசன், நடுக்குப்பம்: புதுச்சேரி பகுதியில் கடற்கரையில் பல இடங்களில் கற்கள் கொட்டப்பட்டிருப்பதே இப்பகுதிகளில் கரை அரிப்பு நிகழ காரணம். புதுச்சேரியில் கற்கள் கொட்டப்பட்டிருப்பதால் அங்கு அலையின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு, அருகில் உள்ள தமிழக பகுதியில் அலை வேகமாக வீசுகிறது. இதனால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அலை வீசும்போது கடற்கரையில் நிறுத்தி வைத்திருக்கும் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி பொருட்களும் சேதமடைகிறது.

இப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 15 மீட்டர் தூண்டில் வளைவினால் எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே புதிதாக 200 மீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைத்து கொடுக்க வேண்டும், என்றார்.இதனிடையே சின்ன முதலியார்சாவடி பகுதியில் கருங்கல் கொட்டும் பணிக்கான தடை கடந்த பிப்ரவரி மாதம் நீங்கிவிட்டதாகவும், தற்போது தேர்தல் நேரம் என்பதால் மேற்கண்ட பணிகளை தொடர முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisements