கோட்டக்குப்பத்தில் சாலைப் பணி தடுத்து நிறுத்தம்: தரமாக அமைக்கக் கோரிக்கை


நன்றி : தினமணி நாளிதழ்

கோட்டக்குப்பம் பகுதியில் தரமான சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி திமுகவினர் பணியை தடுத்து நிறுத்தினர்.

கோட்டக்குப்பம் சின்னமுதலியார்சாவடி தீப்பாஞ்சான்நகரில் பேரூராட்சி சார்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலை திமுக வர்த்தகர் அணிச் செயலர் ஜெயமூர்த்தி, மீனவரணி மணி ஆகியோர் தலைமையில் வந்த பேரூராட்சி உறுப்பினர்கள் இளங்கோ, சரவணன், பார்த்திபன் உள்ளிட்டோர், தரமற்ற சாலை அமைப்பதாகக் கூறி, பணியை தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் கூறியது: கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த கால மழை வெள்ளத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீரோடு, சாக்கடை நீரும் சேர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், உயர்வான சாலை, கால்வாய் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பேரில், பேரூராட்சி சார்பில் தீப்பாஞ்சான் நகரில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதில், பெரிய கற்களைக் கொட்டி தரமற்ற நிலையில் பணிகள் நடப்பதால் தடுத்துள்ளோம். இதே போல், கோட்டக்குப்பம் பர்கத் நகரிலும், கால்வாய், சாலை அமைக்கும் பணிகள் தரமானதாக இல்லை என்றனர்.

தகவல் அறிந்து வந்த பேரூராட்சி அதிகாரிகள், அவர்களிடம் பேசினர். சாலைகள் தரமானதாக அமைக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.