கோட்டக்குப்பம் பேரூராட்சியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக் கோரி மக்கள் நலக்கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்


நன்றி : தினமணி

கோட்டக்குப்பம் பேரூராட்சியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக் கோரி மக்கள் நலக்கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மதிமுக நிர்வாகி எம்.ஏ.எஸ்.அமீர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் ஏ.அன்சாரி, சுந்தரம், தமிழ்பாவலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், மதிமுக இலக்கிய அணிச் செயலர் கே.கருணாகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சு.இரணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வானூர் வட்டத்துக்கு உள்பட்ட கோட்டக்குப்பம் பேரூராட்சிப் பகுதியில், குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு கல்வீடுகளை உடனடியாக கட்டிக்கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கணக்கெடுப்பை தொடங்கி, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீர்செய்வதுடன், கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக கால்வாய்களையும் சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.

குளம், குட்டைகளை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இதில், மக்கள் நலக் கூட்டணியினர் பலர் கலந்துகொண்டனர்.

Advertisements