பேரூராட்சி முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்  


கோட்டக்குப்பத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏரி, குளங்களை தூர் வாராத அதிகாரிகளை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுவையை அடுத்த தமிழக பகுதியான ேகாட்டக்குப்பம் பர்கத் நகர், ரகமத் நகர், இசிஆர் ரவுண்டானா, சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதற்கிடையே ஏரி, குளங்களை தூர்வாராததால் மழைநீர் தேங்க வழியில்லாமல் ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என குற்றம் சாட்டிய பொதுமக்கள் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் அங்கு வந்த வானூர் தாசில்தார் கமர்சிங் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடம், உணவு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டிய பொதுமக்கள் இவற்றை உடனே வழங்குமாறும், ஏரி, குளங்களை விரைவில் தூர்வார வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையே இசிஆர் சாலையோரம் உள்ள வாய்க்கால்களை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நேற்று நடந்தது.


  
  
  
  
  
  
  
  
Advertisements