கோட்டகுப்பம் கடலில் தொடரும் உயிர் பலி 


கோட்டக்குப்பம் ரகமத் நகரில் வசிப்பவர் சக்திமுருகன் (வயது 43). தச்சுத்தொழிலாளி. இவரது மகன் பெருமாள்ராஜா என்கிற சாரதி (11). இவன் முத்தியால்பேட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6–ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று சாரதி தனது நண்பர்களுடன் குளிக்க கோட்டக்குப்பம் கடற்கரைக்கு சென்றான்.அவன், நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலை இழுத்து சென்றது. உடனே அவனது நண்பர்கள் கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம்கேட்டு அங்கிருந்த மீனவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கடலுக்குள் சென்று சாரதியை தேடினார்கள். ஆனால் அவனை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதுகுறித்து சாரதியின் பெற்றோர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், மீனவர்கள் உதவியுடன் சாரதியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுவை துறைமுக முகத்துவாரம் மணல்மேட்டில் சாரதியின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.                                                                           புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகள், கோட்டகுப்பதில் உள்ள கடலில்       குளித்து விளையாடுகின்றனர்.
ஆபத்து நிறைந்த இக்கடலில் ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் அதி வேகத்துடன் வந்து சேரும். மேலும் வந்த வேகத்தில் மீண்டும் கடல் அலைகள் உள்வாங்கிக் கொள்ளும் ஆபத்தான கடல் இது.
இதுகுறித்தும், சுற்றுலா பயணிகள் குளித்து விளையாட தடை விதித்து எச்சரிக்கை பலகை வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டகுப்பம் கடலின் ஆபத்து குறித்து வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரியவாய்ப்பில்லை. எனவே, கோட்டகுப்பம், நடுக்குப்பம், பெரிய முதலியார் சாவடி, பொம்மையார் பாளையம் கடற்கரையில் எச்சரிக்கை பலகை வைத்து, கடலில் குளிப்பவர்களை போலிசார் மூலம் தடுக்க வேண்டும்.

Advertisements