மழைச் சேதத்துக்கு உரிய நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை


விழுப்புரம் மாவட்டத்தில், மழைச் சேதத்தை சரியாக மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் விளக்க உரையாற்றினார். மாவட்டத் துணை செயலாளர்கள் எம்.ஏ.கோவிந்தராஜ், ஆ.செளரிராஜன், பொருளாளர் ஆர்.கலியமூர்த்தி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன், கே.எஸ்.அப்பாவு, கே.இராமசாமி, இன்பஒளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மழை பாதிப்பில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பருவமழையால் மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நெல், வாழை, மணிலா, பருத்தி, உளுந்து, மரவள்ளி, தென்னை உள்ளிட்ட விளைபொருள்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மழைவெள்ள சேதத்தை சரியாக மதிப்பிடு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
பழுதடைந்த சாலைகளை செப்பனிடவும், உடைப்புகள் ஏற்படும் நிலையிலுள்ள ஏரிக்கரைகளை பலப்படுத்தவும், கல்வராயன் மலையில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும், மாவட்டத்தில் மரக்காணத்தில் துவங்கி கோட்டக்குப்பம் வரையுள்ள கடற்கரைகளில், கடலரிப்பைத் தடுக்க கற்குவியலைக் கொண்டு, தடுப்புகளை ஏற்படுத்த அரசை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisements