கோட்டக்குப்பத்தில் ஹெல்மெட் கட்டாயம் – போலிசார் அதிரடி சோதனை


 

தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளதால், கோட்டகுப்பத்தை கடக்கும் புதுச்சேரி வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் (1-ம் தேதி) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீது காண்பித்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் திரும்பி வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர்.

விற்பனை ‘ஜோர்’ : இதன் எதிரொலியாக தமிழகத்தில் ஹெல்மெட் விற்பனை சக்கைபோடு போடுகிறது. ஹெல்மெட் கிடைக்காதவர்கள் புதுச்சேரி கடைகளில் வாங்கி செல்கின்றனர்.

புதுச்சேரி மாநிலம் தமிழக பகுதியுடன், பூகோள ரீதியாக இடையிடையே இணைந்துள்ளது. இதனால் தமிழக பகுதியை கடந்து தான் புதுச்சேரியின் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். உதாரணமாக வடக்கு பகுதியில் முத்தியால்பேட்டை பகுதியுடன் புதுச்சேரி எல்லை முடிந்து விடுகிறது. அடுத்து பிள்ளைச்சாவடியில் தான் புதுச்சேரி எல்லை துவங்குகிறது. இடையில் கோட்டக்குப்பம், பெரிய முதலியார்சாவடி, சின்ன முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம், ஆரோவில் உள்ளிட்ட தமிழக பகுதிகள் உள்ளன.

இந்த தமிழக பகுதிகளை கடந்து தான் புதுச்சேரி எல்லைக்குள் செல்ல முடியும். .இது போன்ற சூழ்நிலையில் தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தமிழக பகுதிகள் வழியாக செல்லும் புதுச்சேரி வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஹெல்மெட் அணியாமல் புதுச்சேரி வாகன ஓட்டிகள் தமிழக பகுதி வழியாக சென்றால் ஓட்டுனர் உரிமம் ரத்தாக நேரிடும்.

இது குறித்து கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் அரிகரன் கூறும்போதும்,’இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியும் ஆணையை உறுதியாக செயல்படுத்தும்படி தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் புதுச்சேரி வாகனங்களுக்கு விதிவிலக்கு ஏதும் கிடையாது. தமிழக பகுதியில் நுழையும் புதுச்சேரி வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து தான் செல்ல வேண்டும். அப்படி ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுனர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்’ என்றார்.

 

Advertisements