கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் போலீஸ் பற்றாக்குறை


PS_2959214

கோட்டக்குப்பம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் போலீஸ் பற்றாக்குறையால், குற்ற நடவடிக்கைகளை தடுக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.

புதுச்சேரி அருகே, விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட கோட்டக்குப்பம் காவல் உட்கோட்டம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில், ஆரோவில், கிளியனுார், மரக்காணம், வானுார் ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன. இத்தனை போலீஸ் நிலைய பகுதிகளையும் உள்ளடக்கிய கோட்டக்குப்பத்தில், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்படுகிறது. ஒவ்வொரு போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் குறைந்தது 40 கிராமங்கள் உள்ளன. தினமும் ஏராளமான குற்ற சம்பவங்கள், புகார்கள் வருகின்றன. ஆனால், அதற்கேற்ப போலீசார் இல்லாததால், பணியில் உள்ள போலீசாருக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. போலீஸ் பற்றாக்குறையால், போலீஸ் நிலையத்தின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. கோட்டக்குப்பம் உட்கோட்டம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது.

குறிப்பாக, கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 51 பேர் இருக்க வேண்டும். ஆனால், 15 பேர் மட்டுமே இங்கு பணியில் உள்ளனர். இருக்கும் போலீசாரும், கோர்ட், பாதுகாப்பு என மாற்றுப்பணிக்கு சென்று விடுவதால், புகார்களை விசாரிக்க கூட போலீசார், திண்டாடுகின்றனர்.

மகளிர் போலீசில், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், மூன்று ஏட்டுகள், 10 போலீசார் பணியில் இருக்க வேண்டிய இடத்தில், நான்கு பேர் மட்டுமே தற்போது உள்ளனர். சப் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, மகளிர் காவல் நிலையம் உட்பட போலீஸ் நிலையங்களில், போலீஸ் பணியிடங்கள் நிரப்ப விழுப்புரம் எஸ்.பி,, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

செய்தி நன்றி : தினமலர்

 

Advertisements