கோட்டக்குப்பத்தில் போலி டாக்டர் கைது


சேலம் உள்பட பல இடங்களில் ‘பேஸ்புக்‘ மூலம் பல பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்த கோட்டகுப்பத்தை சேர்ந்த  போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

téléchargement

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பிரபல வக்கீல் சகோதரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கின்றனர். அவர்கள் தங்க நகைகளை தங்கள் தாயாரிடம் கொடுத்து வைத்திருந்தனர். இதில் தம்பி குடும்பத்தினரின் நகைகள் அப்படியே இருக்க, அண்ணன் குடும்பத்தினரின் நகைகள் 60 சவரனுக்கு மேல் காணாமல்போனது. இதுகுறித்து அந்த வக்கீல் குடும்பத்தினர் குரோம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வக்கீல் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, வக்கீலின் மகள்தான் நகையை எடுத்து வாலிபர் ஒருவரிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

அதாவது, தன்னுடைய தோழி ஒருவருக்கு ‘பேஸ் புக்’ மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் டாக்டர் முகமது ஷானு என்பவர் பழக்கமானார். தோழி மூலம் வக்கீல் குடும்பத்தில் நடக்கும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நகைகளை கேரளாவில் பூஜை செய்து கொண்டுவருவதாக கூறி வாங்கியுள்ளார். அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

ஜிப்மர் மருத்துவமனையில் விசாரித்தபோது அதுபோல அங்கு யாரும் பணியாற்றவில்லை என தெரியவந்தது. போலீசார் முகமது ஷானுவின் செல்போன் நம்பரை வைத்து அவர் யார்? என்ற விவரங்களை சேகரித்தபோது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

முகமது ஷானுவின் உண்மையான பெயர் ரகுமத்துல்லா (வயது 27). அவர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த அசன்அலி என்பவரது மகன் என்றும், 10–ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் எனவும் தெரியவந்தது. அவருடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் யாராவது அவரை தொடர்பு கொள்கிறார்களா? என போலீசார் இரவு பகலாக கண்காணித்து வந்தனர்.

அப்போது டாக்டர் ஷானு என்ற பெயரில் ரகுமத்துல்லா சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூரு, திருநெல்வேலி என பல பகுதிகளிலும் பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. டாக்டர் என கூறியதால் பல இளம்பெண்கள் அவருடன் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் எளிதில் ஏமாறுபவர்களை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களுடன் உல்லாசமாக சுற்றிவிட்டு, கிடைக்கும் நகைகளை சுருட்டிக்கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இவரிடம் ஏமாந்த பெண்கள் அவமானம் காரணமாக போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் தீராத விளையாட்டு பிள்ளையாய் தன்னுடைய லீலைகளை தொடர்ந்துள்ளார். ரகுமத்துல்லாவை கைது செய்த போலீசார், அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் சுமார் 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பேஸ்புக் மூலம் இளம்பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

 

செய்தி நன்றி : தின தந்தி