கோட்டாட்சியரை முற்றுகையிட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள்


கோட்டகுப்பம் அருகே சுனாமி நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற தீயணைப்புத் துறையின் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கு சென்ற வருவாய் கோட்டாட்சியரை மீனவப் பெண்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

மரக்காணம் அருகே பெரிய முதலியார்சாவடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி வானூர் தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அனுசுயாதேவி தொடங்கி வைக்க இருந்தார். தீயணைப்புத் துறை சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந் நிலையில் மீனவப்பெண் அப் பகுதிக்கு அருகாமையில் சுனாமி நினைவு தினத்தை கடைபிடித்தனர். அவர்கள் நினைவு தின நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வந்தபோது வருவாய் கோட்டாட்சியர் அனுசுயாதேவி பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கு வந்தார்.

அப்போது அவரை சூழ்ந்து கொண்ட மீனவப் பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுனாமியையொட்டி அரசு அறிவித்தபடி இன்னும் 65 பேருக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை, இப் பகுதியில் கடல் அரிப்பு அதிகம் உள்ளது, இதுபற்றி பலமுறை மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, அதேபோல் முதியோர் உதவித் தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லம் முறையாக செய்து கொடுக்க வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வருவாய் கோட்டாட்சியர் அனுசுயாதேவி திரும்பிச் சென்றார். மக்களின் எதிர்ப்பின் காரணமாக பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

Advertisements