பக்கிங்ஹாம் கால்வாயில் விரைவில்கூனிமேடு பகுதி வரை படகு போக்குவரத்து


 

IMG_9364.JPG

 

நீர் வழித்தடத்தை மேம்படுத்தும் வகையில், பக்கிங்ஹாம் கால்வாயை, தூர்வாரி மேம்படுத்துவது தொடர்பாக, ஆய்வுப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில், பக்கிங்ஹாம் கால்வாய் இன்றியமையாததாக விளங்கியது. ஆந்திர மாநிலத்தில் துவங்கி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த, கூனிமேடு பகுதி வரை, இக்கால்வாய் நீண்டுள்ளது.

கடலுக்கு இணையாக:

IMG_9363

அக்காலத்தில், உப்பு, விறகு ஆகிய பொருட்களை, ஒரு பகுதியிலிருந்து, மற்றொரு பகுதிக்கு, படகில் கொண்டு செல்ல, இக்கால்வாய் ஏற்படுத்தப்பட்டது. வங்கக் கடலோரம், கடற்கரையிலிருந்து, 2 கி.மீ., தொலைவில், கடலுக்கு இணையாக கால்வாய் அமைந்துள்ளது. தமிழகத்தில், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்ட கடலோர இடங்களில், இக்கால்வாய்க்கு நீர்வரத்து முகத்துவாரங்கள் உள்ளன. கடலில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் கடல்சீற்ற காலங்களில், கால்வாய்க்கு நீர்வரத்தும் அதிகரிக்கும். மழைநீரும் கால்வாயில் தேங்கும். நூறாண்டுகளுக்கும் மேல், கால்வாயில் படகு போக்குவரத்து நடந்து வந்தது. நாளடைவில், சாலை மோட்டார் வாகன போக்குவரத்து அறிமுகமான பின், நீர்வழி போக்குவரத்து, முற்றிலும் வழக்கொழிந்தது. கால்வாயும் பராமரிப்பின்றி தூர்ந்து சீரழிந்தது.

நீர் வழித்தடம்:

IMG_9362

இந்நிலையில், கால்வாயை தூர்வாரி மேம்படுத்தி, மீண்டும் உள்நாட்டு நீர் வழித்தடமாக பயன்படுத்த, சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, சென்னை – முட்டுக்காடு இடையே உள்ள கால்வாயை, மாநில அரசின் பொதுப்பணித் துறை தூர்வாரி ஆழப்படுத்தியது. ஆனால், பயனற்றே இருந்த நிலையில், மீன் மற்றும் பிற கடல் உணவுப் பொருட்கள், உப்பு, உரம், மரம் என, 300 டன் கொள்ளளவு பொருட்கள் கொண்டு செல்வதற்கேற்ப மேம்படுத்த திட்டமிட்டு, திருவான்மியூர் – கல்பாக்கம் இடையே, 45 கி.மீ., தொலைவிற்கு ஆழப்படுத்த, 124 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இவ்வழித்தடத்தில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக, தேவையுள்ள இடங்களில் படகு துறை, எடை நிறுத்துமிடம், துணைமின் நிலையம் உட்பட, பல்வேறு வசதிகள் இடம்பெறும். இந்த பணி, இன்னும் துவங்கப்படவில்லை.

ஆய்வு முடிவு, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும்: கல்பாக்கம் – கூனிமேடு இடையே, 75 கி.மீ., தொலைவு கால்வாயையும், தூர்வாரி மேம்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதையடுத்து, கோல்கட்டா, பி.எஸ்.சி., நிறுவனம் (தனியார்) சார்பில், கால்வாய் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்நிறுவன ஊழியர்கள், ‘ரியல் டைம் கைனாமெட்ரிக்’ என்ற செயற்கைக்கோள் கருவியை, கால்வாயில் வைத்து, கால்வாய் நீர்மட்டம், தூர்வு, மேடு, பள்ளம், அப்பகுதி தட்பவெப்பம், ஒரு பகுதிக்கும், மற்றொரு பகுதிக்கும் இடையே உள்ள ஆழ வித்தியாசம் உட்பட, பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து, பதிவு செய்து வருகின்றனர். ஆய்விற்கு பின், கால்வாய் கரையில், ‘இந்திய உள்நாட்டு நீர்வழித்தட ஆணையம்’ என, குறிப்பிடப்பட்ட கான்கிரீட் கல்லையும் நிறுத்தி, அடையாளப்படுத்துகின்றனர். இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், ‘மத்திய அரசின் உத்தரவின்பேரில், தனியார் ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நாங்கள், ஆய்வு செய்கிறோம். ஆய்வு முடிவு, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும்’ என்றனர்.

 

நன்றி : தினமலர்
Advertisements