புதுவையில் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு


20MILKs_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0

தமிழகத்தை பின்பற்றி புதுவையில் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று 27/11/2014 முதல் அமலுக்கு வருகிறது. புதுவையில் கடந்த ஆண்டு பாண்லே பால் விலை உயர்த்தப்பட்டது. அதை தொடர்ந்து பால் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்தது. பாண்லே விற்பனையகத்தில் நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. இதற்கிடையே தமிழகத்தில் சில வாரங்களுக்குமுன் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. இதேபோல் அரசு கொள்முலை விலையையும் ரூ.5 உயர்த்தியது. மேலும் தமிழகத்தில் கூடுதல் விலைக்கு பால் விற்கப்படுவதால் புதுவையை ஒட்டிய தமிழக பகுதியான கோட்டக்குப்பம், ரெட்டிச்சாவடி, வானூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் புதுவையில் பால் பாக்கெட்டுகளை அதிகளவில் வாங்கி சென்றனர்.

இந்நிலையில் புதுவையிலும் பால் விலையை உயர்த்த அரசு திடீரென முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப்போல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலநிற பாக்கெட் ரூ.10ம், பச்சை கலர் பாக்கெட் ரூ.8ம் உயர்த்த பாண்லே நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு அரசும் ஒப்புதல் தெரிவித்து விட்டது. அதன்படி புதுவையில் ரூ.13க்கு விற்கப்பட்ட அரைலிட்டர் புளுகலர் பாக்கெட் ரூ.18க்கு விற்கப்படும். ஒருலிட்டர் ரூ.36 ஆக விலை உயரும். இதேபோல் ரூ.15க்கு கொடுக்கப்பட்ட பச்சை கலர் பாக்கெட் ரூ.19க்கும், ஒருலிட்டர் ரூ.38க்கும் வழங்கப்படும். 200 மில்லி லிட்டர் விலை ரூ.8 ஆக உயருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகும். இன்று 27/11/2014  முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இதற்கிடையே பாண்லே பால் விலையை உயர்த்த காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisements