கோட்டகுப்பம் காஜி ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நினைவுகள்


Abideen-2

கோட்டகுப்பம் மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு நல்ல மனிதர் காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்கள். கோட்டகுப்பத்தில் தாய்ச்சபையில் உருவாக்கிய மூத்த உறுப்பினராகிய அன்னார் அவர்கள் கோட்டகுப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமுதாயப்பணியாற்ற தன்னை முதல் நபராக இணைத்துக்கொள்வார். சமுதாயப்பணி மற்றும் பொதுப்பணி ஆற்றும்போது சுயநலமில்லாமல் பொதுநலநோக்கில் தன்னலமற்று பணியாற்றி வந்தார்கள். பதவிகளை பொறுப்புக்களை தேடிச்செல்லும் இக்காலத்தில் அவரை தேடி பல பதவிகள் பொறுப்புக்ள தானாக குவிந்தது. அதற்கு உதாரணம் பேரூராட்சி மன்ற துணை தலைவர் பொறுப்பை சொல்லலாம்.

பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்காக அந்த வார்டு மக்கள் எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் தேர்தல் வேலை செய்து அவரை வெற்றிபெற செய்தார்கள், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று வெறிகொண்டு அலையாமல் தாய்ச்சபை கோறிக்கை வைத்துவிட்டதே என்ற ஒரே காரணத்திற்காக தேர்தலில் போட்டியிட்டார் அந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எல்லாம் வெற்றிக்காக நிறைய செலவினங்கள் செய்தார்கள். ஆனால் இவர் எந்தவிதமான அநாவிசயமான செலவுகளை செய்யாமல் மக்கள் ஆதரவுடன் இளைவன் அருளால் எளிதில் வெற்றி பெற்றார். பேரூராட்சி மன்ற முதல் கூட்டத்தில் துணை தலைவர் தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தபோது அப்பொழுதும் பெரும்பாலான உறுப்பினர்கள் காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்களையே முன்மொழிந்தார்கள், அதற்கு அவர் துணை தலைவர் தேர்தலில் எதிர்ப்பு இருந்தால் போட்டியிட மாட்டேன் என்று ஒதிங்கினார். ஆனால் அனைத்து உறுப்பினர்களும் இவரை ஒரு மனதாக துணை தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.

துணை தலைவர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு எந்தவிதமான சுயநலமான காரியத்திலும் ஈடுபடாமல் ஊரின் மக்களுக்கான தேவைக்காக பொதுநல காரியத்திற்கு மட்டுமே அந்த பொறுப்பை பயன் படுத்தினார்.

அவர் வகித்து வ்நத பொறுப்புக்களை பார்ந்தால் வியப்பாக இருக்கிறது, கட்சியின் நகர தலைவராக சிறப்பாக பணியாற்றினார். இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழுவில் நிறுவன உறுப்பினராக ஊர் பணியாற்றினார். அவர் தந்தை உருவாக்கிய அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் பொது நூலகம் செயல்படாமல் இருந்ததை கவலைகொண்டு அதை மறுபடியும் புணரமைத்து செயல்பட வைத்தார். அதில் புதிய நிர்வாக குழுவை அமைத்து அதன் பொதுச்செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் ஆரம்ப காலமுதல் உறுப்பினாராக இருந்து பின்பு செயற்குழு உறுப்பினராக பொறுப்பு உயர்ந்து அதன் வளர்ச்சிக்கு தனது செயலால் சிறப்பு பணியாற்றி வந்தார்.

அறிஞர் அண்ணா அவர்கள் கோட்டகுப்பம் வருகை தந்தபோது அவரை முதன் முதலில் வரவேற்ற சிறப்பும் அன்னாருக்கு உண்டு. வெளிநாடு பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்கள் மற்றும் ஆலோசனைகளை மிகுந்த ஆர்வத்துடன் வழங்கி வந்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் கோட்டகுப்பம் சகோதரர்கள் ஒன்று சேர்நது அமைத்த பொது நல அமைப்புகளான கோட்டகுப்பம் துபை ஜமாத், குவைத் ஜமாஅத், பஹ்ரைன் ஜமாஅத் ஆகியவற்றின் உள்ளூர் பிரதிநியாக இருந்து அவர்கள் அனுப்பும் பொதுநிதியை சரியாக கையாண்டு அதற்கான பயனாளிகளை அடையாளம் கண்டுகொண்டு அவர்களிடம் சரியா கொண்டு சேர்த்த சிறப்பும் இவரை சாரும்.

Abideen

இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் ஆயுள்கால உறுப்பினராக இருந்து அதன் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியதன் விளைவாக அதன் பொருளாளராக பொறுப்பு உயர்ந்தார். அதில் கோட்டகுப்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினராக்கி அவர்களுக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தினார். 1998 -ம் ஆண்டு அதன் எட்டாவது மாநாட்டை கோட்டகுப்பத்தில் சிறப்புடன் நடத்திய சிறப்பு அவரையே சாரும்.

கோட்டகுப்பத்தில் திருக்குர்ஆன் மாநாட்டை நடத்த முக்கிய உந்துதலாய் இருந்தவர். ஊரில் சுனாமி, புயல், பெரும் மழை போன்ற இயற்கை சீற்றத்தால் பெரும் இழப்புகள் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான முதலுதவிகளை முதல் ஆளாய் நின்று எந்தவித விளம்பரமும் இன்றி செய்து முடித்துளளார். தாய்ச்சபையின் பெருந்தலைவர்கள் காயிதேமில்லத், பனாத்வாலா, சுலைமான் சேட், சிராஜூல்மில்லத், மறுமலர்ச்சி முஹம்மது யூசுப், முனிருல் மில்லத் காதர் மொய்தீன், அப்துல் ரஹ்மான் போன்ற அனைத்து தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்.

பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். இந்தியாவில் அனைத்து முக்கிய நகரங்களுக்கு சுற்றுலா சென்று அதன் சிறப்புக்களை நமதூர் மக்களுக்கு எடுத்துரைத்தவர் ஆவார். இவ்வளவு பொறுப்புக்களையும் சேவைகளையும் எந்தவித விளம்பரமும் சுயநலமுமின்றி ஆடம்பரமும் இன்றி தன் உடல் நலத்தில் அக்கரை செலுத்தாமல் அமைதியான முறையில் இறைவனை துணைகொண்டு சிறப்பாக செய்துள்ளார்.

இவ்வாறு இவ்வளவு சிறப்புக்களுக்கும் சொந்தகாரரான அன்னாரின் மறைவானது அனைவருக்கும் பெரும் வருத்தத்தையே தருகிறது. பொதுவாக அனைவருக்கும் இவரின் மறைவு பெரும் இழப்பு என்றாலும் தாய்ச்சபை ஒரு தூய தொண்டனை தூய பொறுப்பாளியை இழந்து நிற்கிறது. இவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு இயக்கத்தினருக்கும் இறைவன் மன அமைதியை தருவானாக.

சுயநலம் பாராமல் இன்றைய இளைஞர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை கூறி அவர்களை நேர்வழி செல்லவேண்டிய அவசியத்தை உணர்த்திய அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல்லடியார்கள் கூட்டத்தில் இறைவன் சேரர்த்து வைப்பானாக. ஆமீன்.

இவண் : 

S. பிலால் முஹம்மது – A. அமீர் பாஷா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக். கோட்டகுப்பம்

Advertisements