புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் கோட்டக்குப்பம் முஸ்லிம்களின் பங்கு


1623620_949180978445681_3315316378146278648_n

கட்டுரை நன்றி : கோ.சுகுமாரன்

புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் ‘மக்கள் தலைவர்’ வ.சுப்பையா அவர்களுக்கு முக்கிய பங்குண்டு என்று கூறுவதைக் காட்டிலும், அவருக்கு முதன்மையான பங்களிப்பு உண்டு என்று சொல்வதுதான் உண்மையான வரலாறாக இருக்க முடியும். குறிப்பாக கோட்டக்குப்பம் முஸ்லிம்கள் வ.சுப்பையா அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். கோட்டக்குப்பத்தில் இருந்து ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வ.சுப்பையா அவர்களை அமர வைத்து 50 ஆயிரம் பேர் ஊர்வலமாக விடுதலைப் பெற்ற புதுச்சேரிக்கு அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து நவம்பர் 1. புதுச்சேரி விடுதலை நாள் 60வது ஆண்டு விழாவையொட்டி ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்’ ஒரு சிறிய வெளியீடு கொண்டு வந்துள்ளனர். அதில் புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் வ.சுப்பையா அவர்களின் வீரஞ்செறிந்தப் போராட்ட வரலாற்றை மீள் பதிவு செய்துள்ளனர்.

 10502325_10203265439661558_2731026415925945754_n

‘ஜனசக்தி’ 1954 நவம்பர் புரட்சி மலரில் தோழர் ஐ.மா.பா. என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் ஐ.மாயாண்டி பாரதி புதுச்சேரி விடுதலைப் பெற்ற வெற்றி விழா பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தோழர் மாயாண்டி பாரதி அவர்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மதுரை சென்றால் நான், அ.மார்க்ஸ், பழனிச்சாமி ஆகியோர் அவரைப் பார்க்கச் செல்வதுண்டு. இந்த தள்ளாத வயதிலும், தனிமையில், மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்க கூடிய வரலாறு அவர். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் பழைய நினைவுகளை அசைப் போட்டு நிறைய போராட்ட வரலாற்று செய்திகளைக் கூறுவார். அவரைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் நாங்கள் அவருக்காக இனிப்பு, பலகாரம் போன்றவற்றை வாங்கிக் கொண்டு ஓர் உறவினர் வீட்டுக்குச் செல்வது போன்று செல்வோம். நான் புதுச்சேரி என்று தெரிந்தும்கூட அவர் புதுச்சேரி விடுதலைப் போராட்டம் பற்றி எதுவும் கூறியதில்லை. ஆனால், 60 ஆண்டுகளுக்கு முன்னர் மிக அற்புதமாக புதுச்சேரி விடுதலைப் போராட்டம் குறித்துப் பதிவு செய்துள்ளார். இம்முறை மதுரை செல்லும் போது அவரிடம் இதுபற்றிக் கேட்க வேண்டுமென்று எண்ணியுள்ளேன். தற்போது அவருக்கு நினைவு தவறி வருவது கவலை அளிக்கக்கூடிய செய்தி.

 

அக்கட்டுரையில், புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் கோட்டக்குப்பம் முஸ்லிம்களின் பங்குக் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார்.

 

“புதுவையை அடுத்துள்ள இந்திய யூனியன் பிரதேசத்தில் கோட்டக்குப்பத்தில் சுப்பையாவின் போராட்டதளம் இருப்பதால், அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரள ஆரம்பித்து விட்டார்கள். முதல்நாளே சுப்பையாவைக் கோட்டக்குப்பம் முஸ்லிம் மக்கள், பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று மாலையிட்டுப் பாராட்டினார்கள். மீர் நவாப்ஸா, ஓ.எம். ஹனிப், நாட்டண்மை அப்துல் கபூர் முதலியவர்கள், “வெற்றி விழாவை கோட்டக்குப்பம் முதலில் கொண்டாடுகிறது” என்று பெருமைபடக் கூறினார்கள். முஸ்லிம் தாய்மார்களும் குழந்தைகளும் பெரியோர்களும் கூட்டம் கூட்டமாக வந்து பாராட்டிச் சென்றார்கள். நவம்பர் 1ம் தேதி அதிகாலை 4 மணியிலிருந்தே பிரஞ்சிந்திய எல்லையில் ஜன சமுத்திரம் திரள ஆரம்பித்துவிட்டது. பல கிராமங்களிலிருந்து தாரை தப்படைகள், சிலம்ப விளையாட்டு, பொம்மையாட்டம், கோமாளி, குறவன் குறத்தி, கோலாட்டம், பூச்சக்கரக்குட்டை, பரிவட்டம் முதலிய கோலாகலங்களுடன் 2000 தொண்டர்கள் கைகோர்த்துச்செல்ல கோட்டக்குப்பத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.” (பக்கம் 4).

 

“ஹிந்து பத்திரிகை நிருபர் 1.11.1954 ஹிந்துவில், குறிப்பிடுவது போல, “பிரஞ்சுக்காரர்கள் ரொம்ப ரொம்ப பயப்படக்கூடிய ஒரு மனிதர் இருக்கிறார் என்றால், அவர் சுப்பையாதான். இந்திய யூனியன் எல்லையை அடிக்கடி கடந்து வந்து, இந்தியப் பிரதேசத்தில் வாழும் முதலியார்பேட்டை மேயர் (நந்தகோபால்) போன்ற அகதிகளைக் கடத்திச் சென்ற பிரஞ்சிந்திய போலீஸார் அடுத்துள்ள கோட்டக்குப்பத்தில், தொழிலாளர்களுடனும் மீன் பிடிப்பவர்களுடனும் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்த சுப்பையாவை நெருங்கக்கூட தையரியமற்றுப் போனார்கள். எல்லையிலிருந்து ஒரு கல்லெறி தூரத்தில் இருந்தும்கூட அவர்களுக்குத் தைரியமில்லை” என்று எழுதினார்.” (பக்கம் 6).

 

‘மக்கள் தலைவர்’ வ.சுப்பையா அவர்களைப் பாதுகாத்த பெருமைக் கோட்டக்குப்பம் முஸ்லிம்களுக்கும் மீனவர்களுக்கும் உண்டு என்பது வெறும் வரலாற்று உண்மை மட்டுமல்ல. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக, தேசப் பற்றற்றவர்களாக சித்தரிக்கப்பட்டு, தொடர்ந்து முஸ்லிம்கள் தாங்கள் தேசப்பற்று உடையவர்கள் என்பதை நிரூபிக்கப்பட வேண்டிய காலக்கட்டத்தில், புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் அளப்பறிய பங்காற்றியுள்ளனர் என்கிற உண்மை தோழர் ஐ.மாயாண்டி பாரதி அவர்களின் கட்டுரை மூலம் வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது. இதைப் புதுச்சேரி ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்’ உரிய நேரத்தில் வெளியிட்டு தங்களின் வரலாற்று கடமையை ஆற்றியுள்ளனர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

 

புதுச்சேரி விடுதலைப் பெற்ற வரலாற்றை உரிய வகையில் பதிவு செய்த தோழர் ஐ.மா.பா. அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். புதுச்சேரியின் மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் அவருடனான உறவை எண்ணிப் பெருமைக் கொள்கிறேன்.

புதுவை பிரெஞ்சு அரசாங்கம் மக்கள் தலைவர் வ.சுப்பையாவை கைது செய்ய தேடி வரும் போது அவர் நமதூரில் குறிப்பாக நாட்டாண்மை தெருவில் இருக்கும் மீர் நவாப்ஸா அவர்களின் வீட்டு மாடியில் (மேல் வீடு ) பல வாரம் தங்கி இருந்தார் என்ற உண்மை இன்றைய தலைமுறை மக்களுக்கு தெரியாமல் போய் விட்டது.

Advertisements