புதுவையில் முதல் முறையாக சுதந்திர நாள் இன்று கொண்ட்டாட்டம்


1954–ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து புதுவை விடுதலை பெற்றது. இருப்பினும் புதுவை 1964–ல் இந்தியாவுடன் இணைந்த ஆகஸ்ட் 16–ந் தேதியை இணைப்புநாளாக கொண்டாடி வந்தது. இந்நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதியை புதுவையின் விடுதலை நாளாக கொண்டாட வேண்டும் என பல அரசியல்கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து நவம்பர் 1–ந் தேதியை புதுவை சுதந்திர நாளாக அரசு அறிவித்தது. அதோடு இன்றைய தினம் அரசு விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக புதுவை விடுதலை நாள் விழா இன்று 1–ந் தேதி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கடற்கரை சாலையில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்தது.

இன்று காலை 9 மணிக்கு முதல்–அமைச்சர் ரங்கசாமி காந்தி சிலை முன்பு தேசியக்கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கி சுதந்திரதின உரையாற்றினார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடத்தப்படுகிறது. புதுவையின் விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு பாராட்டு விழா கம்பன் கலையரங்கில் இன்று மாலை நடக்கிறது. இதில் முதல்–அமைச்சர் ரங்கசாமி தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்கிறார். இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

 

 

 

 

 

Photo credit / Narayana Shankar/ mohamed Areef