கோட்டக்குப்பம் கடற்கரையில் பிணம் ஒதுங்கியது


காலாப்பட்டு அருகே கடலில் குளித்த என்ஜினீயர் பரிதாபமாக செத்தார்.

மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் துக்கானம் திக்லே(வயது 32). இவர் புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது தம்பி பராக் துக்கானம் திக்லே (28). சாப்ட்வேர் என்ஜினீயர். தீபாவளி விடுமுறையில் பராக் துக்கானம் திக்லே புதுச்சேரி வந்திருந்தார்.

தீபாவளி தினத்தன்று இவர்கள் குடும்பத்துடன் காலாப்பட்டு பிள்ளைச்சாவடி பகுதியில் கடலில் குளித்துள்ளனர். அப்போது எழுந்த அலை பராக் துக்கானம் திக்லேவை சுருட்டி இழுத்து சென்றது. அலையில் சிக்கிய அவர் கடலில் மூழ்கினார்.

அவரை மீட்க அப்பகுதி மீனவர்கள் கடலில் தீவிரமாக தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை அவரது உடல் பிணமாக கோட்டக்குப்பம் அருகே உள்ள தந்திராயன்குப்பம் கடற்கரையில் ஒதுங்கியது. அவரது உடலை மீட்ட கோட்டக்குப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisements