கோட்டகுப்பத்தை பசுமையாக மரம் வளர்ப்போம்


 

ஒரு நாடு வளம் மிக்கதாக இருக்க வேண்டும் என்றால், மழை வளம் அதிகமாக இருக்க வேண்டும். மழை வளம் அபரிமிதமாக இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக வனவளமும், மரவளமும் நிறைந்து இருக்க வேண்டும். பொதுவாக, ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனவளம் இருக்க வேண்டும். இந்தியாவில் 22 சதவீதம்தான் வனப்பரப்பு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அரசு எவ்வளவோ முயற்சி எடுத்தும், வனவளம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆக, ஒருபக்கம் வனவளத்தை பெருக்க வேண்டும் என்றாலும் சரி, தமிழகம் முழுவதும் உள்ள நிலப்பரப்பில் மரவளத்தை பெருக்க வேண்டும் என்றாலும் சரி, ஏராளமான மரக்கன்றுகளை போர்க்கால அடிப்படையில் நட்டே தீரவேண்டும். அந்த வகையில், தமிழக அரசு மிகத்தீவிரமாக மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளது. மரக்கன்றுகள் நடுவது, மழை வளத்திற்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்தின் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கும் பெரும்பங்கு ஆற்றுகிறது. சமுதாயத்தில் மனிதனுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மரங்கள் அதிகமாக இருந்தால், புவி வெப்பமயமாதலுக்கும் முதல் காரணமாக திகழும் கார்பன் டை ஆக்சைடை தங்களுக்குள் இழுத்து, ஆக்சிஜனை வெளியேவிடும். இதுமட்டுமல்லாமல், காற்றில் கலந்திருக்கும் தூசி உள்பட பல்வேறு நச்சு பொருட்களையும், மரத்தின் இலைகள் தாங்களே தாங்கிக்கொள்ளும். மரம் இருந்தால் மழை வளத்தையும் பெருக்கும், மனிதனின் நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும்.

 

 

காலப்போக்கில், புதிய புதிய கட்டிடங்கள் எழும்புகிற நேரத்திலும், சாலை வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்போதும், விரிவாக்கம் செய்யும்போதும், ஏராளமான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. சமீபத்தில் தானே புயல் தன் பங்குக்கு பல மரத்தை அழித்து விட்டது , கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது பல நுறு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில், வெட்டப்பட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பல மரம் நடப்பட வேண்டும். பொதுவாக, அரசு சார்பிலும், தனியார் சார்பிலும், மரக்கன்றுகளை நடுகிறார்கள். இதுவரையில், எல்லோரும் நட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கையில் மரம் வளர்ந்திருந்தால், நிச்சயமாக தமிழ்நாடு பசுஞ்சோலையாக திகழ்ந்திருக்கும். ஆனால், மரக்கன்றுகளை நடும் கணக்கைத்தான் சொல்கிறார்களே தவிர, அதை பராமரித்து வருகிறார்களா?, மரக்கன்றுகள் எல்லாம் மரங்களாக வளர்ந்துவிட்டனவா? என்ற கணக்கை மட்டும் யாரும் சொல்வதில்லை. எனவே, மரக்கன்றுகளை நடுபவர்கள் அதை நடுவதோடு விட்டுவிடாமல், பராமரித்து மரமாக வளரும்வரை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை நடுபவர்கள், அழகுக்கான மஞ்சள் கொன்றை, தூங்கு மூஞ்சி ஆகிய பலகீனமான மரக்கன்றுகளை நட்டுவிடுகிறார்கள். இந்த மரங்கள் எல்லாம் ஒரு மழை பெய்தால் போதும், ஒன்று கிளை எல்லாம் முறிந்துவிடுகிறது. இல்லையெனில் மரமே சாய்ந்துவிடுகிறது. இதை தவிர்த்து, நெடுஞ்சாலையோரங்களில் தேக்கு, ஆலமரம், அரசமரம், வேம்பு, புளி, பலா, மருத மரம், நாவல் மரம், பாதாம் மரம், செம்மரம் போன்ற மக்களுக்கு பயனளிக்கும் மரங்களையும், குடியிருப்பு பகுதிகளில் வேங்கை, வாகை, பூவரசமரம் போன்ற மரங்களையும் நடலாம். நடும் மரக்கன்றுகளை பராமரித்து வளர்ப்பதில்தான் பெரும்கடமை இருக்கிறது. கோட்டக்குப்பத்தில் அனைவரும் தங்கள் வீட்டு முன்பு அல்லது பின் பகுதியில் மரம் வளர்த்தல், இன்னும் ஐந்து வருடத்தில் நமதூர் பசுமையாக காட்சி அளிக்கும்.

 

 

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திலும் மரக்குழுக்களை நியமித்து, அவர்கள் மூலம் அந்தந்த பகுதியில், இதுபோன்ற நாட்டு மரங்களை நடவும், பூங்காக்களை உருவாக்கவும் திட்டமிட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. மாநகராட்சியில் மரவளர்ப்பு, பராமரிப்பு தொடர்பான சட்டமோ, சட்டவிரோதமாக மரம் வெட்டுவதை தடுக்கும் முழு அதிகாரமோ இல்லாத நிலையில், விரைவில் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியை பின்பற்றி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகள், நகரசபைகள், மாநகராட்சிகளும், மரம் வளர்க்கும் பணிகளுக்காக இதுபோன்ற குழுக்களை நியமித்து, பணிகள் வேகமாக நடப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். நாளை ஆனி மாதம் தொடங்குகிறது. ஆடி மாதத்திற்குள் இத்தகைய மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி, கொஞ்சநாள் தண்ணீர் விட்டால்போதும் அதன்பிறகு மழை வந்து பார்த்துக்கொள்ளும்.

 

Advertisements