கோட்டக்குப்பத்தில் 2 கிராம மீனவர்கள் மோதல்


புதுவை முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த மீனவர்கள் கார்த்திக் என்பவர் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று மாலை புதுவையையொட்டி தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள மீனவ கிராமமான சோதனை குப்பத்திற்கு சென்றார். அங்கு தன்னை அழைத்த நண்பர் இல்லாததால் கார்த்திக் செல்போனில் அந்த நண்பரை தொடர்பு கொண்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

 

அப்போது அருகில் நின்ற சோதனைக்குப்பம் மீனவர்கள் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களிடையே வாக்குவாதம் எற்பட்டது. அப்போது சோதனைக்குப்பம் மீனவர்கள் ஆத்திரம் அடைந்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சோலை நகருக்கு சென்று அங்கு தங்களை சோதனைகுப்பம் மீனவர்கள் தாக்கியதாக கூறினர். மேலும் சோதனைகுப்பம் மீனவர்கள் தாக்கியதில் காயம் அடைந்த கார்த்திக் உள்ளிட்டோர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த சோலை நகர் மீனவர்கள் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் தடி, இரும்பு பைப், சுளுக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சோதனைக் குப்பத்துக்கு சென்றனர். அங்கிருந்தவர்களை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

 

இந்த தாக்குதலில் சோதனைக்குப்பத்தை சேர்ந்த நாகராஜ் (42), குமரன் (35), சரவணன் (34), ஜெயமூர்த்தி (36), சங்கர் (43), நடராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து பதில் தாக்குதல் நடத்த சோதனை குப்பம் மீனவர்கள் தயாரானார்கள்.

 

இதுபற்றி அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இத்துக்கு சென்று சோதனைக்குப்பம் மீனவர்களை அமைதிப்படுத்தினார்கள். இந்த மோதல் காரணமாக சோதனைக்குப்பம் மீனவ கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதையடுத்து கோட்டக்குப்பம் போலீசார் இரு கிராம மீனவ பஞ்சாயத்தாரையும் அழைத்து பேச்சவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

 

Advertisements