என்ன செய்தார் விழுப்புரம் எம்.பி. ஆனந்தன் ? –


அது 1986-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி. மதுரையில் அ.தி.மு.க. மா​நாடு களைகட்டியிருந்தது. அந்த மாநாட்டு மேடையில் இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாள​ரான ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். செங்கோல் வழங்கி சிறப்பித்தார். அடுத்து, மாநாட்டு மேடையில் வைத்தே தாலி எடுத்துக் கொடுத்து இரு அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு திருமணம் நடத்திவைத்தார். அதில் ஒருவர்தான் அப்போதைய உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. ஆனந்தன். அதன் பின்னர் ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் அமைச்சர் ஆன ஆனந்தன், அதன் பிறகு அரசியலில் இருந்தே ஒதுங்கி இருந்தார். 

 

2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரம்… விழுப்புரம் தொகுதிக்கு வேட்பாளராக தலைமைக் கழகப் பேச்சாளர் முருகன் அறிவிக்கப்பட்டார். வேட்புமனுத் தாக்கல் நெருக்கத்தில் முருகன் மீது புகார்கள் வர… அதிர்ஷ்டம் அடித்தது ஆனந்தனுக்கு. எம்.பி-யாக அரசியலில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.

 

அதிர்ஷ்டம் அடைந்த ஆனந்தன் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டம்… குடிசைகள் நிறைந்த மாவட்டம் என பெயர் பெற்றிருக்கிறது விழுப்புரம். அதை மாற்றுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை ஆனந்தன்.

 

விழுப்புரம் நகரின் மையத்திலேயே இருக்கிறது பெரிய காலனி. குறுகலான சந்துகள், குடிசைகள் நிறைந்த இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் டாய்​லெட் வசதி கிடை​யாது. பொதுக் கழிப்பிடம் இருந்​தாலும் அதுவும் போதுமான அளவில் இல்லை. இதனால், இந்த ஏரியா மக்கள் திறந்த வெளியிலேயே காலைக் கடன்களைக் கழிக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான கழிப்பிட வசதியையாவது தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டிக்கொடுத்திருக்கலாம் என்கிறார்கள் விழுப்புரம்​வாசிகள்.

 

தொகுதியில் பிரதானமாக இருப்பது கரும்பு விவசாயம். அதனால் சர்க்கரை ஆலைகளும் அதிகம். ‘கரும்புக்கு விலையை அதிகப்படுத்தித் தர வேண்டும். உரிய நேரத்தில் வெட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுவது இல்லை’ என கரும்பு விவசாயி​களின் கோரிக்கைகள் ஏராளம். எதற்காகவும் ஆனந்தன் குரல் கொடுத்தது இல்லை என்று விவசாயிகள் வருத்தப்படுகிறார்கள்.

 

ஆனந்தனின் சாதனையாக மிளிர்வது… விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட பயணிகள் நிழற்குடை. அதன் பின்னணியிலும் ஒரு கதை சொல்கிறார்கள். ”பழைய அரசு மருத்துவமனை அருகே சென்னை ரோட்டில் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கினார் ஆனந்தன். அதற்கு நகராட்சி ஒப்புதல் பெற வேண்டும். அப்போது தி.மு.க. கையில் நகராட்சி இருந்தது. ஏற்கெனவே அந்த இடத்தில் தி.மு.க. அமைச்சர் பொன்முடி நிழற்குடை அமைக்க அனுமதி பெற்றுள்ளார் என்று சொல்லி அனுமதி மறுக்கப்பட்டது. அந்த இடத்தில் பொன்முடி நிழற்குடை கட்டினார். தமிழகத்தில் ஆட்சி மாறியது. நகராட்சியையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. இப்போது அதேபோன்ற நிழற்குடையை திருச்சி ரோட்டில் ஆனந்தன் கட்டினார்”- இதுதான் அந்த ஃப்ளாஷ்பேக்.

 

 

திண்டிவனம் பேருந்து நிலையம் ஒரு தீராத பிரச்னை. ஒரு ஊராட்சிக்கான பேருந்து நிலையம் அளவுக்கு மிகச் சாதாரணமாக இருக்கிறது. மெயின் ரோட்டில் இருந்து ஓடைக்குள் இறங்கி, சில சாகசங்கள் செய்துதான் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முடியும். அதனை விசாலமான இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது திண்டிவனம் மக்களின் நீண்டகால கோரிக்கை.

 

 

வக்ஃபு போர்டுக்கு சொந்தமான இடத்தில் அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் காவேரிபாக்கம் ஏரியில் அமைக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினரும் முட்டி மோதிக்​கொண்டிருப்பதால், பேருந்து நிலையம் வருவது இழுபறியாகவே இருக்கிறது. இந்த விஷயத்தில் ஆனந்தன் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார் என்ற வருத்தம் திண்டிவனம் மக்களுக்கு இருக்கிறது.

 

 

விழுப்புரத்தில் விவசாயம் தவிர வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்​சாலைகள் இல்லை. ஆனந்தனும் புதிய தொழிற்​சாலைகளைக் கொண்டுவர முயற்சி செய்யவில்லை.

 

திருக்கோவிலூர் பக்கம் விசாரித்தால், ”வேலூர் திருவண்ணாமலையில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு திருக்கோவிலூர் வழியாகத்​தான் செல்ல வேண்டும். ஆனால், இங்குள்ள பேருந்து நிலையமோ மிக குறுகியது. புதிய இடத்தில் விசால​மான பேருந்து நிலையம் வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. அதற்கான எந்த முயற்சியையும் எம்.பி. எடுக்கவில்லை. திருக்கோவிலூரில் ரயில்வே ரிசர்வேஷன் சென்டர் கிடையாது. அதை அவரிடம் முறையிட்டால், ‘விரைவில் வந்துவிடும்’ என்று சொல்கிறாரே தவிர வந்தபாடில்லை” என்று புலம்புகிறார்கள்.

 

 

அரகண்டநல்லூர்… அரிசி உற்பத்திக்கு முக்கியத்​துவம் பெற்ற ஊர். அரகண்டநல்லூர் விழுப்புரம் இடையே ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது இந்தப் பகுதி. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. எம்.பி-யும் கோரிக்கைவைத்​திருக்கிறேன் என்று சொல்கிறாரே தவிர, மேம்பாலம் கொண்டுவரவில்லை.

 

உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் பலர் சவூதி அரேபியாவில் வேலைசெய்கின்றனர். ”சவூதிக்கு வேலைக்குச் சென்றவர்கள் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கே இருக்கும் அவர்களின் குடும்பத்தினரும் செய்வது அறியாது திகைக்கின்றனர். அவர்களுக்கு தொகுதி எம்.பி-யாக ஆனந்தன் உதவி செய்திருக்கலாம். ஆனால், அவரை சந்தித்து முறையிடவே முடியவில்லை” என்பது தொகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களின் கருத்து.

 

தொகுதி மக்களின் பல ஆண்டு கால கனவு நந்தன் கால்வாய் திட்டம். பாலாறு, செய்யாறு இரண்டையும் இணைத்து 36 ஏரிகளுக்கு நீர் வரும் பாதையை சரிசெய்வதுதான் நந்தன் கால்வாய் திட்டம். இதன் மூலம் விக்கிரவாண்டி, கீழ்பெண்ணாத்தூர், செஞ்சி ஆகிய தொகுதிகள் பாசன வசதி பெறும். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வரும் திட்டம் இது. இதற்காக மத்திய அரசின் மூலம் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது. இதற்கிடையில் கால்வாய்களின் புனரமைப்​புக்காக மாநில அரசு 14.5 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. ”மத்திய அரசிடம் போராடி இந்தத் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த ஆனந்தன் முயற்சிக்கவில்லை” என்று தொகுதியைச் சேர்ந்த விவசாய சங்க பிரமுகர்கள் குற்றம்சாட்ட… மாநில அரசின் நிதி ஒதுக்கப்பட்டதையே ஆனந்தன் சாதனையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்.

 

திருக்கோவிலூர் ஒன்றியம் ஆறாமேடு ஊர் மக்கள் மலட்டாறு என்ற ஆற்றைத் தாண்டித்தான் தங்கள் ஊருக்குச் செல்ல வேண்டும். மற்ற மாதங்களில் சாதாரண ஓடையாக ஓடும் அந்த ஆற்றை சர்வ சாதாரணமாக தாண்டிச் சென்றுவிடும் மக்கள், மழைக் காலங்களில் ஊரைவிட்டு வெளியே வர மிகவும் சிரமப்பட்டனர். அந்த ஊருக்கு ஓட்டு கேட்க ஆனந்தன் சென்றபோது மலட்டாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். இப்போது மேம்பாலம் மற்றும் சாலை அமைக்க 74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 

வானூர் பகுதியில் ஏகப்பட்ட கல் குவாரிகள் இருக்கிறது. அதில் இருந்து வெளிவரும் தூசிகளால் அப்பகுதி மக்களுக்கு சுவாச சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருவது ஒருபுறம் இருக்க… குவாரி விபத்துகளில் உயிரிழப்புகளும் அடிக்கடி நடப்பதாகவும் சொல்கின்றனர். இந்தத் தொழிலைப் பாதுகாப்பாக செய்வதற்கு எம்.பி. எந்த வழிமுறைகளையும் செய்யவில்லை என்பதும் மக்களின் குற்றச்சாட்டு.

 

தொகுதியில் பிற கட்சியினரை விட, அ.தி.மு.க-வில்தான் அவரைப்பற்றி குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஆனந்தன் ஒதுங்கி இருப்பதையும், மாவட்ட நிர்வாகிகள் பலரும் அவரை ஒதுக்கிவைத்திருப்பதையும் உணர முடிகிறது.

 

தொகுதிக்கு ஆனந்தன் செய்தது என்ன?

 

”முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே 50 லட்சம் ரூபாய் செலவில் நோயாளிகள் வசதிக்காக காத்திருக்கும் அறை கட்ட நிதி ஒதுக்கியிருக்கிறேன். விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கையின் பேரில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு திருக்கோவிலூர் வழியாக ரயில் விடப்பட்டது. நிறைய கிராமங்களில் பகுதி நேர நியாய விலைக் கடைகள் திறந்துவைத்திருக்கிறேன். இதய நோய் சிகிச்சைக்கு நிறைய பேருக்கு உதவியிருக்கிறேன்.

 

தொழிலாளர் குறை தீர்க்கும் அலுவலகம் சென்னையில் மட்டும் இருந்தது. அதன் உதவி கமிஷனர் அலுவலகம் புதுச்சேரி அல்லது விழுப்புரத்தில் அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கைவைத்தேன். இப்போது புதுச்சேரிக்கு அந்த அலுவலகம் வந்துவிட்டது. அதனால், வட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அலைச்சல் மிச்சம்.

 

கடலோரப் பகுதியான சின்ன முதலியார் குப்பம், பொம்மையார் குப்பம், சோதனைக் குப்பம் ஆகிய பகுதிகளில், கடல் அரிப்பால் மக்கள் மிகவும் சிரப்பட்டு வந்தனர். அவர்​களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி மூலம் 35 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைக்க வழிவகை செய்து தந்திருக்கிறேன்” என்றார் ஆனந்தன்.

 

 

அரசியலில் ஆனந்தனின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடர ஜெயலலிதா மனது வைத்​தாலும் விழுப்புரம் மக்கள் மனதுவைப்பார்களா?

 

Credit : vikatan

Advertisements