பிளஸ்டூ பொதுத்தேர்வு : ஆல் தி பெஸ்ட்!


exam_1_0_0_0_0_0_0

 

 

  • பிளஸ் டூ-வில் எந்தப் பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களானாலும் சரி, பிளஸ் டூ தேர்வு என்பது, அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் கருவி. அந்தக் கருவியை திறம்பட பயன்படுத்துபவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பைப் படிக்கலாம். அதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்பதை மனதில் கொண்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும்.

  • முயன்றால் முடியாதது இல்லை. திட்டமிட்டுப் படித்தால் அனைத்துப் பாடங்களும் நம் வசமாகும் என தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

  • தேர்வு நடப்பதற்கு குறைந்த நாட்களே உள்ளன என்பதால், புதிதாக எந்தப் பாடங்களையும் படிக்க வேண்டாம். புதுப்பாடங்களை படிக்கப் போனால், சிலருக்கு ஏற்கெனவே படித்தது மறந்தது போல் தோன்றும். ஆதலால், ஏற்கெனவே படித்த பாடங்களை ரிவிஷன் செய்வது நல்ல பலனைத் தரும்.

  • இந்தக் கேள்விதான் வரும். இதை மட்டும் படித்தால் போதும் என்று யாரும் நினைக்க வேண்டாம். இதுவரை 20 விதமான கேள்வித்தாள்கள் வந்து விட்டன. ஆதலால், எந்தக் கேள்வியைக் கேட்பார்கள் என்று தெரியாது. எதைக் கேட்டாலும், எழுதுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் நன்கு படித்துக்கொள்ள வேண்டும்.

  • பாடங்களைப் புரிந்து கொண்டீர்களானால் படிப்பது எளிது. மனதில் பதிய வைத்துக் கொள்வது அதைவிட எளிது. ஆதலால் பாடங்களைப் புரிந்து கொண்டு படியுங்கள்.

  • நிறைய மாணவர்கள் ஒரு மதிப்பெண் வினாக்களில் சறுக்கி விடுகிறார்கள். அதற்கு புத்தகத்திலுள்ள ஒவ்வொரு பாடத்தின் பின்புறமும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை படித்துக் கொள்வது அவசியம். ஒரு சப்ஜெக்டில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை முழுவதுமாக படித்துக் கொள்ளுங்கள். படித்த பிறகு, ஏற்கெனவே கேட்கப் பட்டுள்ள பொது வினத்தாள் ஒன்றை எடுத்து, அதற்கு விடையளித்துப் பாருங்கள். இப்படிச் செய்யும்போது, எத்தனை கேள்விகளுக்கு சரியான பதிலைத் தந்திருக்கிறீர்கள், எவ்வளவு நேரத்தில் பதிலளித்திருக்கிறீர்கள் என்பது தெரியவரும். இது உங்களது தன்னம்பிக்கையையும் வளர்க்கும். இதே முறையை 2 மதிப்பெண்கள், 3 மதிப்பெண்கள், 5 மதிப்பெண்கள் என அனைத்திற்கும் பின்பற்றுங்கள். இரண்டு மணி நேரம் படிப்பு. அரை மணி நேரம் தேர்வு எழுதுவது என பிரித்துக் கொண்டால் படிப்பது சலிப்பை ஏற்படுத்தாது.

  • 200-க்கு 200 எடுக்க விரும்பும் மாணவர்கள், புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் நன்கு தெளிவாகப் படித்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உங்களது இலக்கை நீங்கள் அடைய முடியும். அப்போதுதான் நீங்கள் விரும்பிய மருத்துவப் படிப்போ அல்லது மிகச் சிறந்த கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்போ படிக்கலாம் அல்லது நீங்கள் விரும்பிய வேறு துறையில் உயர்கல்வி படிக்க முடியும் என்பதை மனதில் கொண்டு கவனத்துடன் படியுங்கள்.

  • நேரத்தை திட்டமிட்டுக்கொண்டு படிப்பது நன்மையைத் தரும். காலை 5 மணி முதல் 8 மணி வரை படிப்பு. 8 – 9 காலை உணவு. அரைமணி நேரம் ஓய்வு. 9.30 முதல் 1 மணி வரை படிப்பு. 1 முதல் 2.30 வரை மதிய உணவு இடைவேளை. 2.30 முதல் 5.30 வரை படிப்பு. 5.30 முதல் 6 வரை ஓய்வு. 6 முதல் 8.30 வரை படிப்பு. 8.30 முதல் 9.00க்குள் இரவு உணவு. 9 முதல் இரவு 12 வரை படிப்பு. இப்படி திட்டமிட்டுக்கொண்டு பரிட்சை முடியும் வரை படித்து வருவது நல்லது.

  • ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதோ, டி.வி. பார்ப்பதோ, இணைய தளத்தில் உலாவுவதோ கூடாது. சில நேரங்களில் அது உங்களது நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி, கவனைத்தையும் சிதறடிக்கும். வீட்டில் உள்ளோரிடம் பேசலாம். கண்ணை மூடி தியானம் செய்யலாம். உங்கள் கவனத்தை எது சிதறடிக்காதோ அந்த வேலையை ஓய்வு நேரத்தில் செய்யலாம்.

  • விடா முயற்சியுடன் நன்கு படியுங்கள். தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர் கொள்ளுங்கள்! ஆல் தி பெஸ்ட்!

Advertisements