வங்கிக் கட்டணங்கள்… உஷார் பாடங்கள்!


வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பல வாடிக்கை யாளர்கள், ஆண்டுப் பராமரிப்புத் தொகை மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர, அந்த வங்கிகள், அவ்வப்போது விதிக்கும் பலவகையான இடைநிகழ்வுக் கட்டணங்களைப் பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இந்தக் கட்டணங்களில் பலவற்றைத் தவிர்க்க வழி இருக்கிறது. இதன்மூலம் பணத்தை மிச்சப்படுத்தவும் வழி இருக்கிறது.

 

 

”வங்கிகள் பலவகையான சேவை களுக்கு விதிக்கும் கட்டணங்களை, வங்கியின் இணையதளம் மற்றும் கணக்கு ஆரம்பிப்பதற்காக நிரப்பப்படும் படிவத்தில் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பார்கள். இதைப் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கூர்ந்துக் கவனிப்பதில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் களின்படியே வங்கிகள், இந்தக் கட்டணங்களை வசூலிக்கின்றன என்பதால் அவற்றைச் சொல்லிக் குற்றமில்லை.

 

அண்மையில் நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலைத் திரும்பியதால், ரூ.500 அவருக்கு அபராதம் விதித்தது அவர் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கி. விதிமுறையைத் தெரிந்துகொண்டு வங்கிக் கணக்கில் போதிய தொகையை இருப்பு வைத்திருந்தால் இந்த இழப்பைத் தவிர்த்திருக்க முடியும். இது வெளிப்படையாகத் தெரிவதால், காரணமும் உடனே சட்டென நமக்குத் தெரிகிறது. ஆனால், வெளிப்படையாக வெளியில் தெரியவராத பல கட்டணங்கள் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொண்டால் வங்கிச் சேவையை ஓர் இனிய அனுபவமாக மாற்ற முடியும்” என்றவர் அதுபற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

 

மினிமம் பேலன்ஸ்!

 

வங்கிக் கணக்கில் உள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகைக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையெனில், வாடிக்கையாளர் அபராதம் செலுத்தவேண்டும். இந்த அபராத தொகை வங்கிக்கு வங்கி வேறுபடும். பொதுவாக, பொதுத்துறை வங்கிகள் காலாண்டுக்கு ஒருமுறை குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையைக் கணக்கிடுகின்றன. அவ்வாறு அந்தத் தொகை இல்லாதபட்சத்தில் காலாண்டுக்கு ஒருமுறை அபராத கட்டணம் விதிக்கின்றன. சில தனியார் வங்கிகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் அபராத கட்டணம் விதிக்கின்றன.

 

கணக்கை மூட!

 

வாடிக்கையாளர் வங்கிக் கணக்கை குறிப்பிட்டக் காலத்துக்கு முன்பே  மூட விரும்பினால், அவர் ரூ.150 – 300 வரை கட்ட வேண்டும். உதாரணமாக, சில தனியார் வங்கிகள் வங்கிக் கணக்கை, ஆரம்பித்த 6 மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் மூடினால் 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. இதே 6 மாத காலத்துக்குள் மூடினால் 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

 

வங்கிக் கணக்கை மாற்ற!

 

வங்கிக் கணக்கை ஒரு கிளை யிலிருந்து இன்னொரு கிளைக்கு மாற்றுவதற்குக் கட்டணம் இருக்கிறது. இது ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை. எனினும், சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்துக்குப்பின், கட்டணம் ஏதும் வாங்காமல் வங்கிக் கணக்கை வேறு கிளைக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றன. உதாரணமாக எனது நண்பர் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரது வங்கிக் கணக்கும் சென்னையில் இருந்தது. ஆனால் அவருக்கு மதுரைக்குப் பணிமாற்றம் வந்தது. இதனால் வங்கிக் கணக்கை முடித்துக் கொள்ள வங்கியில் சென்று நான் எனது சேமிப்புக் கணக்கை குளோஸ் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். காரணத்தைக் கூறியபோது நீங்கள் உங்களது வங்கிக் கணக்கை மதுரைக்கு மாற்றிக்கொள்ளலாம், அதற்காக நீங்கள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். அவருக்கு மிக சந்தோஷமாகி விட்டது. எந்த அலைச்சலும் இல்லாமல் மாற்றிக் கொள்வது சிறந்த திட்டம்தானே.

 

பாஸ்புக்!

 

பொதுவாக வங்கிகள் பாஸ்புக் வழங்குவதற்கும், பரிமாற்றப் பதிவு செய்வதற்கும் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. ஆனால், வேறு நகரத்திலோ அல்லது ஒரே நகரிலுள்ள வேறொரு கிளையிலோ புது பாஸ்புக் வாங்கும்பட்சத்தில், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் வங்கிக் கணக்குத் துவங்கி ஒரு வருடம் ஆகியிருந்தால் ஒரு கட்டணமும், ஒரு வருடத்துக்கு மேல் ஆகும்பட்சத்தில் ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் சுமார் 50 முதல் 100 ரூபாய் வரை இருக்கலாம். சில பொதுத்துறை வங்கிகள் இதற்கென கட்டணம் ஏதும் விதிப்பதில்லை. இரண்டாவது முறை பாஸ்புக் வழங்குவதற்கும், பரிமாற்றப் பதிவு செய்வதற்கும் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுகிறது.

 

செக்புக்!

 

பழைய காசோலைகளுக்குப்  பதிலாக அதிகப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட சிடிஎஸ் காசோலைகளாக மாற்றித்தருவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது. அதன்பிறகு ஒவ்வொரு காசோலைக்கும் சுமார் 2 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

செக் பவுன்ஸ்!

 

பற்றாக்குறையான இருப்பு நிதியினால் செக் பவுன்ஸ் ஆகும்பட்சத்தில் சுமார் 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படுகிறது. சில தனியார் வங்கிகளில் காலாண்டில் முதன்முறையாக ஒரு காசோலை பவுன்ஸ் ஆனால் கட்டணம் 350 ரூபாயும், அதே காலாண்டில் அடுத்தடுத்த காசோலைகள் பவுன்ஸ் ஆகும்போது சுமார் 750 ரூபாய் வீதமும் அபராதம் விதிக்கப்படுகிறது.

 

டெபிட் கார்டு!

 

வங்கிகள் தங்கள் டெபிட் கார்டு சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுக் கட்டணமாக விதிக்கின்றன. இந்தத் தொகை ரூபாய் 50-லிருந்து 200 ரூபாய் வரை வேறுபடலாம். ஐந்து தடவைக்குமேல், பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் பணத்தை எடுத்தால் அதற்கும் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். ஒரு மாதத்தில் ஐந்து தடவைக்குமேல் பிற வங்கி ஏடிஎம்களில் பரிமாற்றம் செய்தால் கட்டணமாக சுமார் 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

 

 இன்டர்நெட் பேங்கிங்!

 

எலெக்ட்ரானிக் பில் பேமென்ட்கள், நிதிப் பரிமாற்றம் ஆகியவற்றுக்குக் கட்டணங்கள் உள்ளன. உதாரணமாக, ரயில் டிக்கெட் பதிவு செய்ய ஒரு பதிவுக்கு ரூபாய் 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது.

 

நிதிப் பரிமாற்றத்துக்கு!

 

சில தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏடிஎம்-கள், இன்டர்நெட் பேங்கிங், கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கும் படி வற்புறுத்துவதன் மூலம் தங்கள் கிளைகளின் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க முயற்சிக்கின்றன. அதனால் ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் கிளைகளில் செய்யப்படும் பரிமாற்றங் களுக்கு, வங்கிகள், கட்டணங்கள் விதிக்கின்றன.

 

செயல்படாதக் கணக்கு!

 

வங்கிகளில் தொடங்கப்படும் கணக்குகளில், சிலசமயம் வருடம் முழுவதும் எந்தப் பரிமாற்றமும் செய்யாமல் இருக்கும்பட்சத்தில், அதற்காகச் செயல்படாத கட்டணம் வசூலிக்கப்படும்.

 

கட்டணங்களைத் தவிர்க்க!

 

தற்போது பலரும் ஆன்லைனில் ரயில் டிக்கெட், பேருந்து டிக்கெட் போன்றவற்றைப் பதிவு செய்கின்றனர். இதைத் தவிர்த்து நேரடியாகச் சென்று டிக்கெட் வாங்கும்பட்சத்தில் இந்தக் கட்டணங்களைத் தவிர்க்க முடியும்.

 

சிலர் தங்களது வங்கிக் கணக்கில் பண இருப்பைத் தெரிந்துகொள்ள ஏடிஎம் சென்று அடிக்கடி தனது பண இருப்பைச் சரிபார்க்கின்றனர். அவ்வாறு பார்ப்பதைத் தவிர்த்தால், இந்தக் கட்டணங்களைத் தவிர்க்கலாம். மேலும், சிலர் ஏடிஎம்மில் நாளன்றுக்கு நூறு ரூபாய் விதம் ஒரு மாதத்துக்குப் பலமுறை பணம் எடுக்கிறார்கள். இதைத் தவிர்த்து தேவையான அளவுக்குப் பணத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்தக் கட்டணங்களாவது குறையும்.

 

வங்கிகளில் நேரடியாகச் சென்று பணப் பரிவர்த்தனைச் செய்யும்போது விதிக்கப்படும் கட்டணங்களைவிட ஆன்லைன் பரிமாற்றத்துக்கு மிகக் குறைவான கட்டணங்களே விதிக்கப்படுகின்றன. இதன்மூலம் சில கட்டணங்களைக் குறைக்க முடியும். கிரெடிட் கார்டு பில்லைச் செலுத்தும்போது, ரூ.25,000க்கு மேல் ரொக்கமாகச் செலுத்தினால் கேஷ் ஹேண்ட்லிங் சார்ஜ் விதிக்கப்படும். மேலும், காசோலையாகத் தரும்பட்சத்தில், அது சரியான நேரத்தில் போய்ச் சேரவில்லை எனில், அபராத கட்டணம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டு மூலம் பணத்தை ரொக்கமாக எடுத்தால், சில நூறு ரூபாய்கள் கட்டணமாகச் செலுத்தவேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதைத் தவிர்க்கலாம்.

 

வங்கிகள் விதிக்கும் கட்டணங்களுக்கான விதிமுறை களையும் நிபந்தனைகளையும் நன்கு புரிந்துகொண்டு செயல்பட்டால், அந்தக் கட்டணங்களை நம்மால் முடிந்தவரைத் தவிர்க்கலாம். இது வாடிக்கையாளர்களின் கைகளில்தான் உள்ளது” என்று முடித்தார் கணேசன்

இனியாவது தேவையில்லாமல் பணத்தை இழக்காமல் இருப்போமே!     

 

 

Credit / vikatan

Advertisements