அழிந்து வரும் ஆரோ பீச்


IMG_1932

 

கோட்டக்குப்பம்  அருகே சர்வதேச நகரமான ஆரோவில் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார கடைசியில் குறைந்தது 5000 சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.  இதையடுத்து ஆரோ கடற்கரைக்கு சூரிய குளியல் போடுவதற்காக வெளிநாட்டினர் வருகின்றனர். இதுதவிர இந்தியாவில் உள்ள மும்பை, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் ஆரோவில் கடற்கரைக்கு வருகின்றனர்.

 

ஆரோ  கடற்கரை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடல் அரிப்பால், அழியும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, ஆரோ  கடற்கரை தற்போது கடல் அரிப்பிற்குள்ளாகி அழிந்து வருகிறது. நாளுக்கு நாள் வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து வரும் கடல் அரிப்பால் கடற்ரையோரம் வீடுகள் இடிந்து தரைமட்டமாகி வருகின்றன. இதுவரை மூன்று வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. தென்ன மரங்களும் கடல் அலையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தற்போது ஒன்றன் பின், விழுந்து வருகின்றன. எஞ்சியுள்ள மரங்களும் கடல் அரிப்பிக்குள்ளாகி வருகின்றன. இவையும் சில நாட்களில் விழுந்துவிடும். ஆரோ கடற்கரையில், சின்னமுதலியார்சாவடி முதல் பொம்மையார்பாளைம் மயானம் வரை 500 மீட்டர் நீளத்திற்கு கடல் மணற்பரப்பு காணாமல்போய்விட்டது. சூரியா ஓட்டல் பின்புறம் மட்டும் சில இடங்களில் 50 மீட்டர் மணற் பரப்பு எஞ்சியுள்ளது. கடந்த சில மாதங்களாக   கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது.   ஆக்ரோஷமான அலைகள் கடற்கரை எஞ்சியுள்ள 50 மீட்டர் கடற்மணற்பரப்பும் காணாமல்போய், ஆரோவில் கடற்கரையில் மணற்பரப்பு இருந்தற்கான சுவடே இல்லாமல் மறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

 

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கோட்டை, கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை, ஆரோ கடற்கரை உள்ளிட்டவை முக்கிய சுற்றுலா தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரோ கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஆரோவில் கடற்கரையில் கடந்த 2008ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் குழந்தைகளுக்காக சிறுவர் பூங்கா கட்டப்பட்டது. இது தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா வருபவர்களும், குழந்தைகளும் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றனர். இதுதவிர குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கடலில் குளித்துவிட்டு பெண்கள் உடைமாற்றுவதற்கு தனி அறை, கழிவறை என எந்தவித அடிப்படை வசதியும் அமைக்கப்படவில்லை.

 

ஆரோவில் கடற்கரையை மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பகுதியாக அறிவித்து பிறகு இங்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்காதது நிர்வாகத்தின் அலட்சியத்தை போக்கை வெளிக்காட்டுவதாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், கோட்டக்குப்பம் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆரோ கடற்கரையில் சிறுவர் பூங்காவை சீரமைக்கவும், தமிழ்நாடு சுற்றுலா கழகம் முலம் ஒரு பயனியர் விடுதி கட்டி பொது மக்களுக்கு சலுகை விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். மேலும் கடல் அரிப்பிற்குள்ளாகி வரும் ஆரோவில் பீச்சை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் கடற்கரை பகுதிகளில் கருங்கற்கள் கொட்ட தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

Advertisements