மெடிக்ளைம் பாலிசி எப்படி க்ளைம் செய்வது?


மருத்துவச் செலவு எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கும் நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பலரும் எடுத்து வைத்திருக்கிறார்கள். தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் மூலம் எடுத்திருக்கும் பாலிசியைத் தவிர, தனிப்பட்ட பாலிசியும் பலர் எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசியை எடுத்திருக்கும் நிலையில் எப்படி க்ளைம் செய்வது, எந்த பாலிசியில் எவ்வளவு க்ளைம் கிடைக்கும் என்கிற குழப்பமும் பலருக்கு இருக்கவே செய்கிறது.

 

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹெல்த்  இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்திருக்கும்பட்சத்தில் எப்படி க்ளைம் செய்வது என்பது குறித்து யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஆர்.சிவக்குமாரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

 

”ஒவ்வொரு நிறுவனத்தின் ஹெல்த் பாலிசிக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். குரூப் இன்ஷூரன்ஸில் சில வசதிகள் கூடுதலாக இருக்கும். அதாவது, ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு க்ளைம் கிடைக்கும். எனவே, க்ளைம் செய்வதற்கு முன்பு எந்த பாலிசியில் என்ன வசதி உள்ளது என்பதைப் பார்ப்பது நல்லது.

தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸில் சின்ன சின்ன க்ளைம் செய்யும்போது, நோ க்ளைம் போனஸை இழக்க வேண்டியிருக்கும். மேலும், சில நோய்களுக்கு தனிநபர் பாலிசியில் க்ளைம் கிடைக்காது.

 

தவிர, தனிநபர் பாலிசியில் கவரேஜ் தொகையை அதிகமாக க்ளைம் செய்யும்போது, அடுத்து வரும் ஆண்டில் இன்ஷூரன்ஸ் நிறுவனம் பிரீமியத்தை அதிகரிக்கும். இந்தக் கூடுதல் பிரீமியத்தை நீங்கள் தனியாகவே செலுத்தவேண்டியிருக்கும்.

 

ஆனால், குரூப் இன்ஷூரன்ஸில் இந்தப் பிரச்னை அதிகம் இருக்காது. அப்படியே அதிகரிக்கப்பட்டாலும் கூடுதல் பிரீமியத்தை அந்த குரூப்பில் இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்ளும்படி இருக்கும்” என்று முடித்தார் அவர்.

 

உதாரணமாக, ஒருவர் குரூப் இன்ஷூரன்ஸில் 2 லட்சம் ரூபாய்க்கு கவரேஜ், தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸில் 1 லட்சம் ரூபாய்க்கு கவரேஜ் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், மருத்துவமனை செலவு 2.5 லட்சம் ரூபாய் எனில், இதை எப்படி க்ளைம் செய்வது என்பதைப் பார்ப்போம்.

 

ஒரே பாலிசியில் முழுத் தொகையும் க்ளைம் செய்ய முடியாது. எனவே, இரண்டு பாலிசியிலும் க்ளைம் செய்யவேண்டியிருக்கும். முதலில் குரூப் இன்ஷூரன்ஸில் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் க்ளைம் செய்ய முடியும் என்பதைக் கவனிக்கவேண்டும்.

 

இங்கு 2 லட்சம் ரூபாய் கவரேஜ் இருக்கிறது என்பதால் அதில் 2 லட்சம் ரூபாயையும் மீதி 50,000 ரூபாயைத் தனிப்பட்ட பாலிசியிலும் க்ளைம் செய்வது லாபகரமாக இருக்கும்.

 

இப்படி க்ளைம் செய்யும்போது என்ன விஷயங்களைக் கவனிக்கவேண்டும், மருத்துவச் செலவுகளுக்கான ரசீதுகள் என்னென்னவற்றை சமர்ப்பிக்கவேண்டும்?  

இப்படி இரண்டு பாலிசியிலும் க்ளைம் செய்யும்போது சற்று கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். அதாவது, எதிர்பாராமல் விபத்து ஏற்படும்போது மட்டும் எவ்வளவு தொகை செலவு ஆகும் என்பது தெரியாது.

 

மற்ற சமயங்களில் க்ளைம் தொகை ஓரளவிற்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். எனவே, நீங்கள் தனிநபர் பாலிசி வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதவேண்டும்.

 

அந்தக் கடிதத்தில், ‘என்னிடம் இரண்டு பாலிசிகள் உள்ளன. மருத்துவச் செலவுகளை முழுமையாக ஒரே பாலிசியில் க்ளைம் செய்ய முடியவில்லை. எனவே, குரூப் பாலிசியில் க்ளைம் செய்ததுபோக மீதமுள்ள தொகைக்கு என் தனிப்பட்ட பாலிசியில் க்ளைம் செய்து கொள்கிறேன்’ என்று விளக்கமாக கடிதம் எழுதி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பவேண்டும்.

 

அதன்பிறகு, முதலில் எந்த பாலிசியில் (குரூப் அல்லது தனிநபர்) க்ளைம் செய்தீர்களோ, அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து உங்களின் மொத்த க்ளைம் தொகை எவ்வளவு, அதில் எவ்வளவு தொகையை அந்த நிறுவனம் செட்டில் செய்துள்ளது, மீதமுள்ள தொகை எவ்வளவு? என்பதை எழுதி வாங்கவேண்டும். மேலும், க்ளைம் தொகைக்கான ஒரிஜினல் பில் அனைத்தும் சரிபார்த்துவிட்டோம் என்கிற சான்றிதழையும் வாங்கவேண்டும்.

இந்தச் சான்றிதழை மீதமுள்ள தொகையை க்ளைம் செய்யும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்கவேண்டும். இப்படி செய்யும்போது எத்தனை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருந்தாலும் எளிதாக க்ளைம் செய்யலாம்”

 

 

ஒன்றுக்கும் மேற்பட்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்திருப்பவர்கள் இனி சிரமம் இல்லாமல் க்ளைம் செய்யலாமே!

 

Credit : vikatan

Advertisements