தடையை மீறி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற பல்லாயிரக்கணக்கான தமுமுகவினர் கைது!


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்றைய தினம் (ஜூலை 6) முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கு காவல்துறை திடீர் தடை போட்டது.

 

1. முஸ்லிம்களின் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்.

 

2. 10 ஆண்டுகளை நிறைவு செய்த முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறைக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

 

3. திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு வேண்டும்.

 

என முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் விளம்பரம் செய்யப்பட்டது. இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டுவரத் தயாரான நிலையில், காவல்துறை தடையால் முஸ்லிம்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.இந்நிலையில் உரிமைப் போராட்டத்தில் சமரசம் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டு, தடையை மீறி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.காவல்துறை, தமிழகமெங்கும் புறப்பட்ட மக்களை மிரட்டி அச்சுறுத்தியது. வாகன உரிமையாளர்களை எச்சரித்து, பேருந்து, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை கிடைக்கவிடாமல் செய்தனர்.

 

ரயில் மற்றும் அரசுப் பேருந்துகளில் இன்று காலை வந்திறங்கியவர்களையும் காவல்துறை கைது செய்தது. நெடுஞ்சாலைகளில் நெருக்கடிகளை மீறி தனியார் வாகனங்களில் வந்தவர்களை நள்ளிரவு முதல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது.காவல்துறையின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மீறி பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளும், பெண்களும் இன்று மதியம் 3 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் கைதாகினர்.அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆங்காங்கே ஆயரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

24 மணி நேரத்திற்கு முன்பு தொடுக்கப்பட்ட ஜனநாயகப் படுகொலைகளை மீறி தமுமுகவினர் தங்கள் பலத்தை வெளிக்காட்டியுள்ளனர். எமது எழுச்சிமிகு பயணத்தில் இது மற்றொரு வரலாற்று வெற்றியாகும். எமது கோரிக்கைகள் வெல்லும் வரை எமது போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடரும்.இப்போராட்டம் காவல்துறையின் தடையை மீறி நடைபெற்ற போதினும், பொது அமைதிக்கும் பொதுச் சொத்துகளுக்கும் சிறிதும் பாதகம் ஏற்படாமல் மிக அமைதியாகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது இரு ஆம்புலன்ஸ்களுக்கு தொண்டர்கள் வழிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தடையை மீறி பேரணிக்கு வந்தவர்களைக் கைது செய்ய வாகனங்கள் இல்லாமல் காவல்துறையினர் திணறினர். இறுதியில் கைது செய்யாமல் அனைவரையும் கலைந்து போகச் சொன்னார்கள்.

 

இப்பேரணியின் போது தமுமுக மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் கோவை உமர், துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரசீது உள்பட தமுமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

Advertisements