தமிழகத்தை விஞ்சும் புதுச்சேரி!


புறநகர் விசிட்டில் இந்த வாரம் இடம்பெறுவது புதுச்சேரி. தமிழ்நாட்டின் இன்னொரு பகுதியாகவே பார்க்கப்பட்டாலும், அண்டை மாநிலம் என்பதற்கேற்ப பல வகைகளில் முன்னேறிய பிரதேசமாகவே இருக்கிறது. குறிப்பாக, தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர், மாசில்லாத சுற்றுச்சூழல் போன்றவை இங்குள்ளவர்களுக்கு ஒரு கொடுப்பினைதான். இதன் காரணமாகக்கூட தொழில்முனைவோர்களையும் சுண்டி இழுத்து வருகிறது இந்நகரம். குறிப்பாக, தமிழகத்தில் வசிக்கும் பலரும் புதுச்சேரியில் இடம் வாங்குவதும், குடியேறுவதும் அதிக அளவில் நடக்கிறது. இதுபோன்ற காரணங்களால் புதுவையில் ரியல் எஸ்டேட் நிலவரமும் எப்போதும் ஹாட்தான்.

 

பொதுவாக, நகரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இடம் வாங்க முடியாதவர்கள்தான் புறநகரைத் தேடுகிறார்கள் என்றாலும், இந்த நகரத்தைப் பொறுத்தவரை கடலூர், விழுப்புரம் என அருகருகே நகரங்கள் இருப்பதால் புறநகர் என்று சொல்லவே முடியாத அளவுக்கு வளர்ச்சிகண்டு வருகிறது. இதன் காரணமாகவே புதுவையின் ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருக்கிறது. இந்தவகையில் இந்த வாரம் புதுவையின் புறநகரப் பகுதிகளைப் பார்ப்போம்.

 

”வெளிஆட்கள் அதிகளவில் குடியேற தொடங்கியதால்தான் புதுவையின் ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்துக்குச் சென்றது. ஆனால், தற்போதைய நிலைமை அப்படியில்லை. முன்பைவிட தொழிலில் தொய்வுதான்” என்கின்றனர் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்.

 

ஒரே கிராமத்தைத் தமிழக எல்லைப்பகுதியும், புதுவை எல்லைப்பகுதியும் பிரிப்பதால் ரியல் எஸ்டேட் தொழில் எப்போதுமே ரிஸ்க்தான் என்கின்றனர் வேறு சிலர். ஆனால், ”ஒரு வகையில் மக்களுக்கு இது பாசிட்டிவ்தான். தமிழக எல்லைப் பகுதியில் 400-500க்கு விற்கும் ஒரு சதுர அடி இடம், புதுவை எல்லையில் 2,000 வரை விலை போகும். ஏனென்றால் மின்சாரம், குடிநீர் போன்ற விஷயங்களுக்கு அலைய வேண்டியதில்லை என்பதால் இந்த நிலைமை” என்கின்றனர். புதுவையில் இடம் வாங்குபவர்கள், எல்லை விஷயங்களை கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்கவேண்டியது அவசியம். இனி விலை நிலவரங்களைப் பார்ப்போம்.

 

திண்டிவனம் வழியில்!

 

ஒரு காலத்தில் முத்தியால்பேட்டை, புதிய பேருந்துநிலையம் பகுதிகள்கூட புறநகராக இருந்தவைதான். என்றாலும், நகரம் வளர வளர இந்தப் பகுதிகளில் நடுத்தர மக்கள் இடம் வாங்க முடியாது என்கிற அளவில் உள்ளது. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், சாரம், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, கருவாடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் ச.அடி 2,000-4,000 ரூபாய் வரை விலை நிலவரம் உள்ளது. திண்டிவனம் செல்லும் வழியில் எல்லைப் பகுதியான கோரிமேடு மற்றும் நாவற்குளத்தில் ச.அடி 1,000-2,000 ரூபாய் வரை விலை நிலவரம் இருக்கிறது.  

 

 

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் தொகுதிதான் தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் மையமான இடம். வீட்டு வாடகை முதல் நிலத்தின் மதிப்பு வரை எல்லாமே உச்சத்திற்கு சென்றுவிட்டது. தட்டாஞ்சாவடி, கதிர்காமம், திலாஸ்பேட்டை, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் 2,000-4,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஊசுட்டேரி பகுதிக்கு அருகில் ச.அடி 300-1,200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து ஏழு கிலோ மீட்டரில் ஊசுட்டேரி அமைத்துள்ளதால் அங்கு நிலத்தை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

 

 

விஸ்வரூப வில்லியனூர்!

 

புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியில் 12 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வில்லியனூர். இன்னும், சில வருடங்களில் புதிய நகரமாக உருவாக அதிக வாய்ப்பிருப்பதால், மக்கள் பலரும் அங்கு நிலங்களில் முதலீடு செய்து வருகின்றனர். புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்வதற்கு முக்கிய சாலை என்பதாலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அங்கு நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ச.அடி 1,000-2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இன்னும் சற்று உள்ளே சென்றால் ச.அடி 500-1,000 ரூபாய் வரை கிடைக்கிறது. வில்லியனூரை அடுத்து அரியூர், திருபுவனை, மதகடிப்பட்டு ஆகிய பகுதி களில் ச.அடி 150-400 ரூபாய் வரை நிலவரம் உள்ளது.  

 

 

மக்கள் விரும்பும் எல்லைப் பகுதிகள்!

 

 

புதுச்சேரி மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தான் ச.அடி 150-500 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அங்கு நிலத்தின் மதிப்பு உயர வாய்ப்புள்ளதால், இப்பகுதிகளில் மக்கள் அதிகளவில் முதலீடு  செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றனர். புதுச்சேரி மற்றும் கடலூர் வழியில் அமைந்துள்ள தவளகுப்பம், இடையார்பாளையம், கிருமாம்பாக்கம், கன்னிக்கோவில், முள்ளோடை ஆகிய பகுதி களில் சதுர அடி 150-500 ரூபாய்க்குக்கூட கிடைக்கிறது.

 

சென்னை வழியில்!

 

சென்னை வழியில் இ.சி.ஆர். சாலையில்  உள்ள கோட்டக்குப்பத்தில் மட்டும் 1,000-1,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அடுத்து, பொம்மையார்பாளையம், சின்ன முதலியார் சாவடி, பெரிய முதலியார்சாவடி, பிள்ளைசாவடி, கணபதி செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் 350-600 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பொறியியல் கல்லூரி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகம் இப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் இதைக் காட்டியே விலை ஏற்றுவதும் நடக்கிறது.  

 

 

 

வேகமெடுக்கும் ஆரோவில்!  

 

 

புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் விஷயங் களில் ஒன்று, ஆரோவில் நகரம். 10 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக எல்லையில் அமைந்திருந்தாலும், தற்போது இதைச் சுற்றியுள்ள பகுதிகள் ரியல் எஸ்டேட் தொழிலில் வளர்ச்சி கண்டு வருகிறது. அமைதியும், ரம்மியமான சுற்றுச்சூழலும் இதன் சிறப்பு. பணி ஓய்விற்கு பிறகு தங்கள் வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க விரும்புபவர்கள், இந்தப் பகுதியில் இடம் வாங்க ஆர்வம்காட்டி வருவதால், ஆரோவில்லைச் சுற்றியிருக்கக்கூடிய தமிழகப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர ஆரம்பித்துவிட்டன. தற்போது  ச.அடி 500-1,500 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.    

 

 

பொதுவாகவே, புதுவை புறநகரப் பகுதிகளில் நிலத்தடி நீர் சிக்கல் இல்லை. தாராளமான இடவசதி, கிராமப்புற பகுதிகள் என்பதால், வீடு கட்டுவதில் உள்ள எளிய நடைமுறைகள் காரணமாக புதுச்சேரி புறநகர் வளர்ச்சி தடுக்க முடியாத அளவு வளர்ந்து கொண்டிருக்கிறது.    

 

 Credit : vikatan
Advertisements