சொத்துப் பதிவு… குறைகிறது முத்திரைத்தாள் கட்டணம்!


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் முதல் சொத்துப் பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணம் 5 சதவிகிதமாக குறைவதற்கு வாய்ப்புள்ளது என்கிற செய்தியைக் கேட்டு, இனி வீடு, மனை வாங்கப் போகிறவர்கள் சந்தோஷப்படலாம். இதுபற்றி விளக்கமாக தெரிந்துகொள்ளும் முன்பு,  அண்மையில் பத்திரப் பதிவில், பவர் ஆஃப் அட்டர்னி குறித்து வந்திருக்கும் அதிரடி மாற்றத்தை முதலில் பார்ப்போம்.

 

பத்திரப் பதிவில் முக்கிய இடத்தை பவர் ஆஃப் அட்டர்னி பிடித்திருக்கிறது. பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த முடியாதவர்கள், முதலில் பவர் வாங்கி, பிறகு பணம் சேர்ந்தபிறகு பத்திரம் பதிவு செய்துகொள்ளும் வழக்கு நடைமுறையில் உள்ளது. இந்த வழிமுறையைப் பயன்படுத்தி, சொத்தை வாங்கி சிறிது காலம் வைத்திருந்து வேறு நபருக்கு விற்கும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் அல்லது வீடு கட்டி விற்கும் பில்டர்கள் பலரும் இந்த பவர் வாங்கி வைத்துக்கொண்டு, பல ஆண்டுகாலம் பத்திரம் பதியாமல் இருக்கவே, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

 

இத்தனைக்கும், நெருங்கிய உறவினர் அல்லாதவர்களுக்குத் தரப்படும் பவர் ஆஃப் அட்டர்னிக்கான கட்டணத்தை கடந்த 2011 ஜூலை வாக்கில் 50 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியது. இதன்பிறகும் பத்திரம் பதிவதற்குப் பதில் பவர் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவே செய்துள்ளது. எனவே, பவர் பத்திரங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக பத்திரப் பதிவுத் துறை இப்போது அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.  

 

அதன்படி, இனி பவர் பத்திரம் பதியவேண்டுமெனில், பவர் கொடுத்தவர் நல்ல உடல் நலத்துடன் உயிருடன்தான் இருக்கிறார் என டாக்டர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என சார் பதிவு அலுவலகங்களுக்கு அண்மையில் பத்திரப் பதிவுத் துறையின் டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். இந்தச் சுற்றறிக்கையைக் கண்ட பலரும் ஆடிப்போயிருக்கிறார்கள்.

 

காரணம், சார் பதிவாளர் கேட்டபடி, பவர் தந்தவர் உயிருடன்தான் இருக்கிறார் என டாக்டரிடம் சர்ட்டிஃபிகேட் வாங்க பலரும் கிளம்பியதால் அங்கும் அதிர்ச்சி. திடீரென வந்து சான்றிதழ் கேட்டால் எப்படி என்று கேட்டுவிட்டு, 3,000 ரூபாய் கொடுங்க, 5,000 ரூபாய் கொடுங்க என டாக்டர்கள் கேட்க, சில நூறு ரூபாயில் பிரச்னை முடியும் என்று நினைத்தவர்களுக்கு மேற்கொண்டு பல ஆயிரங்கள் செலவு. தவிர, பவர் தந்தவரும் டாக்டர் வீட்டுக்கு வர கார், ஆட்டோ வேண்டும் என்று கேட்க, அதற்கும் செலவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம்.  

 

இந்நிலையில், முன்பின் அறியாதவர்களுக்கு, பத்திரப் பதிவுக்காக ‘உயிருடன் இருக்கிறார்’ என்கிற சான்றிதழைத் தரவேண்டாம் என மருத்துவர்கள் சங்கம், அதன் உறுப்பினர்களுக்கு அட்வைஸ் தர, டாக்டர்களும் இந்தச் சான்றிதழை தர மறுத்து வருவதாகத் தகவல். இதுகுறித்து, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

 

” தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர் களுக்கு மட்டுமே ‘உயிருடன் இருக்கிறார்’ என்கிற சான்றிதழை டாக்டர்கள் தரவேண்டும். கூடவே, புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு, அங்க அடையாளங்களை குறிப்பிட்டுதான் இந்தச் சான்றிதழை தரவேண்டும். சிலர் அதிக பணம் கிடைக்கிறது என்பதற்காக தெரியாதவர் களுக்கும் சான்றிதழ் தருவது நடக்கிறது. அதன் மூலம் டாக்டர் மற்றும் பவர் வாங்கியவருக்கு சிக்கல் வர வாய்ப்புள்ளது’ என்றார்.

 

இதுகுறித்து சார் பதிவாளர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

 

”பொதுவாக, பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்தால்தான் பவர் செல்லுபடியாகும். அந்த வகையில் பத்திரம் பதிவு செய்யும்போது பவர் தந்தவர் உயிருடன் இருக்கிறாரா, அந்த பவர் ரத்து செய்யப்படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டுதான் பத்திரம் பதிவு செய்வோம். தற்போது திடீரென இப்படி ஒரு சான்றிதழ் பெற்றபின்பே பத்திரம் பதிவு செய்யவேண்டும் என்று சுற்றறிக்கை வந்திருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சான்றிதழை அரசு மருத்துவரிடம் வாங்க வேண்டுமா அல்லது தனியார் மருத்துவரிடம்கூட வாங்கலாமா என தெளிவு இல்லை.

 

மேலும், 15 நாட்களுக்கு முன் வாங்கப்பட்ட மருத்துவர் சான்றிதழ் என்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த 15 நாட்களுக்கு இடையில் பவர் எழுதித் தந்தவருக்கு ஏதாவது நடந்திருந்தால் என்ன செய்வது? அந்த வகையில் இந்தச் சான்றிதழ் தேவை இல்லை என்றே சொல்லவேண்டும். பவர் வாங்கியவர், பவர் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்திக்கொண்டாலே போதும். மருத்துவர் சான்றிதழ் கட்டாயம் வேண்டுமெனில், பத்திரம் பதிபவர்களுக்கு வீண் அலைச்சல், கூடுதல் செலவு, மனஉளைச்சல்தான் ஏற்படும். பவர் கொடுத்தவர் நேரில் வரவேண்டும் என்று மாற்றினாலே பொதுமக்களுக்கு ஓரளவுக்கு எளிதாக இருக்கும்” என்றனர் பதிவுத் துறை அதிகாரிகள்.  

 

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில், பத்திரப் பதிவைவிட பவர் வாங்குவது அதிகரித்துள்ளதற்கு என்ன காரணம் என பத்திரப் பதிவுத் துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

 

”மத்திய அரசின் நிதி உதவிகளை பெற வேண்டும் என்றால், மாநிலத்தில் முத்திரைத்தாள் கட்டணத்தை 5 சதவிகிதம் அளவுக்கு குறைக்க வேண்டும் என மத்திய அரசு  வலியுறுத்தி வருகிறது. இதை அமல்படுத்தும் பரிசீலனையில் தமிழக அரசு இருக்கிறது. இதன் ஒருபகுதியாக 2012 ஏப்ரலில் தமிழ்நாட்டில் அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டபோது, முத்திரைத்தாள் கட்டணம் 8 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இது வரும் ஏப்ரலில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதை தெரிந்துகொண்ட பலரும், இப்போது பத்திரம் பதிவு செய்யாமல் ஏப்ரலில் குறைவான கட்டணம் செலுத்தி பத்திரம் பதிவு செய்துகொள்ளலாம் என்று பவர் வாங்கி வைத்திருக்கிறார்கள்’ என்றார்கள்.

 

Nandri : vikatan