கோட்டக்குப்பத்தில் அவலம் கோயிலில் இயங்கும் அரசு ஆரம்ப பள்ளி


 

 

 

 கோட்டகுப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கோட்டகுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலும் 71 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்காக மூன்று ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர். பள்ளிக்கென்று கழிப்பறை, சமையல் கூடம் எதுவும் கிடையாது. ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் திறந்த வெளியைத்தான் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் தானே புயலால் பள்ளி கட்டம் சேதமடைந்தது. 


இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருந்தும் பாதிப்படைந்த கட்டடத்திலேயே மாணவர்கள் படித்து வந்தனர்.  எப்போது மழை பெய்தாலும் கட்டிடம் ஒழுகுவதோடு, வகுப்பறையிலும் தண்ணீர் தேங்கி நிற்கும். கிராம மக்கள் தேங்கிய நீரை வெளியேற்றி பிள்ளைகளை படிக்க வைத்தனர். சமையல் கூடம் இல்லாததால் திறந்த வெளியிலேயே உணவு தயாரிக்கும் அவல நிலை தொடர்கிறது. நிலம் புயல் பாதிப்பால் பள்ளி கட்டிடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்துவிட்டது. இதையடுத்து அங்குள்ள மாரியம்மன் கோயிலில் தற்போது பள்ளி செயல்பட்டு வருகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒரே இடத்தில் படித்து வருவதால், பாடம் நடத்துவது ஆசிரியர்களுக்கு சிரமமாக உள்ளது. ஒன்றாம் வகுப்பு மாணவன், ஐந்தாம் வகுப்பு பாடத்தை கேட்டு குழம்பும் நிலை உள்ளது. மழைக்காலத்தில் திறந்த வெளியிலேயே குடையை பிடித்துக்கொண்டு சமையல் செய்யப்பட்டு வருகிறது. உடனடியாக சம்மந்தப்பட்ட பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து இளைஞர் சங்க தென்னரசு கூறுகையில், இந்த பள்ளியில் மிகவும் ஏழ்மையான மாணவர்கள் படித்து வருகின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து தொடக்க கல்வி அதிகாரி மற்றும் வானூர் தொகுதி எம்எல்ஏக்கு மனு கொடுத்தோம். 
எந்த நடவடிக்கையும் இல்லை.  தூரல் விழுந்தால் கூட பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.  எனவே கழிப்பிடம், சமையல் கூடம் உள்ளடக்கிய புதிய பள்ளி கட்டடத்தை உடனடியாக கட்டி கொடுத்து ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டும். இல்லை என்றால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்றார்.

 

 

செய்தி படம் உதவி தினகரன்

Advertisements