புதுச்சேரி பள்ளிகளில் இந்தி–பிரெஞ்சு மொழி


புதுச்சேரி பள்ளிகளில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி–பிரெஞ்சு மொழியை கற்பிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்று முதல்–அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் கோரிமேடு ஜிப்மர் வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்–அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:–புதுச்சேரி அரசு பாடத்திட்டத்தில் தமிழக அரசை பின்பற்றி வருகிறது.தமிழக அரசு கடந்த 2006–ம் ஆண்டு கட்டாய தமிழ் பயிலும் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மொழிப்பாடமாக தமிழை மட்டுமே கட்டாயமாக பயில வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. புதுச்சேரி தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் இங்கும் அதே நிலை உருவானது.இந்திய அரசு பிரெஞ்சு அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பிரெஞ்சு மொழி கற்பதற்கு ஆவன செய்யப்பட வேண்டும் என்றும், புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பணிபுரிவதால் பள்ளிகளில் இந்தி மொழி கற்பிப்பதும் அவசியமாகிறது.

 

 

இந்த காரணங்களை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மற்றும் இந்தி மொழி மாணவர்கள் பயிலுவதற்கும் அதற்குரிய தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குவதற்கும் ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.அதை ஏற்று இந்தி மற்றும் பிரெஞ்சு மொழிகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளில் கற்பிப்பதற்கும், தேர்வு நடத்துவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு முதல்–அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

Advertisements