பெஸ்ட் மருத்துவ காப்பீடு பாலிசிகள்!


ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களை இந்த இதழ் முழுக்க நீங்கள் படிக்கலாம் என்றாலும், எந்தெந்த பாலிசிகள் நல்லவை  என்பது முக்கியமான விஷயம் என்பதால் அதை முதலிலேயே பார்த்துவிடுவோம்.

 

 ன்ஷூரன்ஸ் பாலிசிகள் பல வகை. தனிநபர் பாலிசி, ஃப்ளோட்டர் பாலிசி, குரூப் பாலிசி உள்பட பல பாலிசிகள் இருக்கிறது. மேலும், குறிப்பிட்ட நோய்களுக்கான பாலிசிகளும் இருக்கிறது. அப்படியானால் எந்த பிரிவில் உள்ள பாலிசிகளை நாம் பெஸ்ட் பாலிசிகளாகத் தேர்ந்தெடுத்துச் சொல்வது என தீவிரமாக யோசித்தோம். கடைசியில், ஃப்ளோட்டர் பாலிசிகளில் எவையெல்லாம் பெஸ்ட் என்று ஆராய்ந்து தர முடிவு செய்தோம். காரணம், ஃப்ளோட்டர் பாலிசிகளை பற்றிய விழிப்பு உணர்வுதான் இப்போது மிக முக்கிய தேவை. பல்வேறு நிறுவனங்கள் இப்போது சந்தையில் விநியோகம் செய்யும் ஃப்ளோட்டர் பாலிசிகளில் எவை நல்ல பாலிசி என்பதைக் கண்டறிந்து தருமாறு பஜாஜ் கேப்பிட்டலின் துணைத் தலைவர் ரவியிடம் கேட்டோம்.  

”எண்டோவ்மென்ட், டேர்ம் பிளான், சைல்டு பிளான் உள்ளிட்ட பாலிசிகளை வகைப்படுத்துவது எளிது. காரணம், அனைத்து பாலிசிகளின் தன்மையும், சாதகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். அந்த பாலிசிகளில் நாம் கட்டும் பிரீமியத் தொகை உள்ளிட்ட சில விஷயங்களை எது பெஸ்ட் பாலிசி என்று சொல்ல முடியும். ஆனால், ஹெல்த் பாலிசிகள் அப்படியல்ல. ஃப்ளோட்டர் பாலிசி என்று பொதுவாகச் சொன்னாலும் ஒவ்வொரு பாலிசியிலும் கிடைக்கும் சலுகைகள் வெவ்வேறு. அதனால் பிரீமியமும் மாறும். எனவே, இதுதான் பெஸ்ட் பாலிசி என்று மொத்தமாகச் சொல்லிவிட முடியாது.

மேலும், சில சிகிச்சைகள் ஒருவருக்குத் தேவையாக இருக்கலாம்; சிலருக்கு அது அநாவசியமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, ஒரு பாலிசியில் பிரசவத்துக்கு கிளைம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த பாலிசியை நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவர் எடுத்தால் அவருக்கு எந்த பயனும் இல்லை. அதற்காக அந்த பாலிசியை மோசம் என்று சொல்ல முடியாது. யாருக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்துதான் ஹெல்த் பாலிசி எடுக்க முடியும்.

இருந்தாலும் பொதுவான சலுகைகளோடு அனைத்து நிறுவனங்களிலும் இருக்கும் பாலிசிகளையும், அந்த பாலிசிகளின் பிரீமியத்தையும் தந்திருக்கிறேன். குறிப்பாக மூன்று பாலிசிகளில் சிறப்பம்சம் கூடுதலாக இருப்பதால் அதைப் பற்றி பார்ப்போம்.

யுனைடெட் இந்தியா (ஃபேமிலி மெடிகேர்): இந்த நிறுவனம் தரும் பாலிசியில் பிரீமியம் குறைவு. சென்னையைச் சேர்ந்த நிறுவனம்; இந்தியாவில் 4,000 மருத்துவமனைகளுக்கு மேல் நெட்வொர்க்கில் வைத்திருக்கிறது. இங்கு கிளைம் நடைமுறைகளும் வேகமாக இருக்கிறது.

அப்போலோ முனிச் (ஈஸி ஹெல்த்): இந்நிறுவனத்திலும் கிளைம் நடைமுறைகள் வேகமாக இருக்கிறது. மேலும், இங்கு ஹெல்த் பாலிசி இருக்கும்பட்சத்தில் அப்போலோ பார்மஸியில் 8 முதல் 10 சதவிகித தள்ளுபடியில் மருந்துகள் வாங்க முடியும்.

மேக்ஸ் புபா ( ஹார்ட்பீட் ஃபேமிலி ஃப்ளோட்டர்): இந்நிறுவனம் நேரடியாக கிளைம் செட்டில் செய்கிறது. மேலும், ஒரு வருடத்தில் கிளைம் எதுவும் வாங்கவில்லை எனில் டிஸ்கவுன்ட் கூப்பன் தருகிறார்கள். மருந்துச் செலவுகளுக்கு இந்த கூப்பனை பயன்படுத்தலாம். அதிக வயதானபோதும் இதில்  பாலிசி எடுக்கலாம்.

மேலே உள்ள இரண்டு ஒப்பீடுகளிலும் 3 – 5 லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட பாலிசிகளை மட்டுமே தந்திருக்கிறோம். சில நிறுவனங்களில் ஐந்து லட்சத்துக்கு மேல் பாலிசி இல்லை என்பதால், ஐந்து லட்சம் என்பதையே ஓர் அளவாக எடுத்திருக்கிறோமே ஒழிய, ஐந்து லட்ச ரூபாய் உங்களுக்குப் போதும் என்று சொல்லவில்லை.

மெடிக்ளைம் பாலிசிகளை எப்போதுமே கொஞ்சம் அதிகமாக எடுப்பது நல்லது. கேன்சர், மாரடைப்பு,சிறுநீரகம் செயலிழப்பு உள்ளிட்ட நோய்களுக்குத்தான் அதிகம் செலவாகும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், டெங்கு காய்ச்சலுக்கு அதைவிட அதிகம் செலவாகும் என்பது பலருக்கும் தெரியாது. அதனால் ஒருவர் எவ்வளவு அதிக தொகைக்கு ஹெல்த் பாலிசி எடுக்கிறாரோ, அவ்வளவுக்கு நல்லது” என்றார்.

ஒப்பீடுகளை கவனித்து,  உங்கள் தேவையையும் ஆராய்ந்து, உங்களுக்கான பாலிசியைத் தேர்ந்தெடுங்கள்!

courtesy : vikatan

 

Advertisements