ஏன் வேண்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்


ண்மையில் நண்பர் ஒருவர் திடீரென மருத்துவமனையில் சேர்ந்தார். மூன்று நாளில் ஒரு லட்ச ரூபாய் மருத்துவச் செலவானது. நண்பரோ ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்ததால் மருத்துவச் செலவுகளை அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனமே செலுத்தியது. நண்பருக்கு நயா பைசா செலவில்லை. இந்த பாலிசி எடுக்காமல் விட்டிருந்தால் ஒரு லட்ச ரூபாய் அவரல்லவா செலவு செய்திருக்க  வேண்டும்? சில ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்டியதில் லட்ச ரூபாய் அவருக்கு மிச்சம்.

 

இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது தொடங்கி அடிப்படை விஷயங்கள் குறித்து நம்மிடம் விளக்கினார் இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் வெல்த் அட்வைஸர் வி.கிருஷ்ணதாசன்.

”இன்றைய நிலையில், ஒரே ஒரு அறுவை சிகிச்சை ஒருவருடைய வாழ்நாள் சேமிப்புகளையே கரைத்துவிடும். தவிர, முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்போதைய தலைமுறையினருக்குப் பலவிதமான நோய் தாக்குதல்களும் அதிகமாக இருக்கிறது. எனவே, மருத்துவச் செலவுகளுக்கு என்று பெருந்தொகை சேர்த்து வைப்பதைவிட எளிதாக ஒரு மெடிக்ளைம் எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

சிகிச்சை பெறும் மருத்துவமனை, காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மருத்துவமனையாக இருந்தால் காப்பீடு நிறுவனமே மருத்துவமனைக்கு நேரடியாகச் செலவு தொகையை செலுத்திவிடும். காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத நிறுவனமாக இருந்தால் முதலில் மருத்துவமனை செலவுகளை செய்துவிட்டு பின்னர் அந்த கட்டணங்களுக்கான ரசீதுகளை காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து செலவுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

நீரிழிவு, ஆஸ்துமா, பரம்பரை வியாதிகள் போன்ற பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை பாலிசி எடுப்பதற்கு முன்பே தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரிவிக்கும் போது பிரீமியம் அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்றாலும், கிளைமின்போது ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எளிதில் தவிர்க்க முடியும்.

என்னென்ன நோய்களுக்கு கிளைம் கிடைக்கும், எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்கிற விவரங்களை பாலிசி எடுப்பதற்கு முன் அறிந்துகொள்ள வேண்டும். பாலிசி காலம் முடிந்து பதினைந்து நாட்களுக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் பாலிசி காலாவதியாகிவிடும். இந்த இடைப்பட்ட நாட்களில் ஏதாவது நடந்து மருத்துவச் செலவுகளை கிளைம் செய்ய முடியாது.

உங்களுக்கு ஏற்ற பாலிசி எது என்பதை நான்கைந்து பொதுக் காப்பீடு நிறுவனங்களின் பாலிசி விவரங்களை அலசி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். இந்த பாலிசியை உங்களுக்கு மட்டும் தனியாக எடுப்பதா அல்லது அப்பா, அம்மா குழந்தைகளையும் சேர்த்துக்கொள்வதா என்பதை முடிவு செய்யுங்கள். வயதான பெற்றோர் என்றால் அடிக்கடி மருத்துவச் செலவு இருக்கும். மேலும், நோய் பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். இதை கணக்கில் கொண்டு அவர்களுக்குத் தனியாக ஒரு பாலிசி எடுத்துக்கொள்ளலாம். திருமணத்திற்கு முன்பு பாலிசி எடுத்தவர்கள் திருமணமான பின்பு அதே பாலிசியில் மனைவியையும் சேர்த்துக்கொள்வது அவசியம்.  

புதிதாக பாலிசி எடுப்பதற்கு மருத்துவப் பரிசோதனை அறிக்கை, முகவரிச் சான்று, மார்பளவு புகைப்படங்கள் – இரண்டு, வயதுச் சான்று போன்ற ஆவணங்களைத் தரவேண்டும். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனம் என்கிறபோது மருத்துவப் பரிசோதனை செலவுகளை அவை ஏற்றுக்கொள்ளும். பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு மருத்துவப் பரிசோதனையை நாம் எடுத்துக்கொடுக்க வேண்டும்.

உங்களிடமிருந்து பிரீமியம் பெற்று, பாலிசி ஆவணம் கொடுக்கப்பட்டதிலிருந்தே 30 நாட்களுக்குப் (விபத்து விதிவிலக்கு) பிறகு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துவிடும். முக்கியமாக, பாலிசி எடுத்தபிறகு அதை வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். மருத்துவ சிகிச்சைத் தேவையான மருத்துவமனை பற்றிய தகவல்களையும் எல்லோரும் அறிந்திருப்பது நல்லது” என்றார்.  

அடிப்படைகளைச் சொல்லிவிட்டோம், இனி பாலிசி எடுக்க வேண்டியதுதானே?

courtesy : vikatan
Advertisements