கோட்டக்குப்பத்தில் மணல் திருட்டால் குளமாக மாறிய காலி நிலம்


விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கோட்டகுப்பம் பேரூராட்சி. இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு, சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். புதுவை அருகே உள்ள தமிழக பகுதி என்பதால், இங்கு ஏராளமானோர் குடிபெயர்ந்து வருகின்றனர்.


இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், அதிவேகமாக வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. இதனால் கோட்டகுப்பம் பகுதியில் புதிது, புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிக்காக புதுவை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் இருந்து மணல் கொண்டுவரப்பட்டது. புதுவை மற்றும் விழுப்புரம் பகுதியில் ஏற்கனவே மணல் தட்டுப்பாடு அதிகமாக நிலவி வருகிறது. இதனால் மணலுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது.

கோட்டகுப்பத்தில் நடுகுப்பம் மீனவர் பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காலிநிலம் உள்ளது. இந்த இடத்தில் சமூக விரோதிகள் சிலர், மணலை திருட்டுத்தனமாக மாட்டு வண்டி மற்றும் டிராக்டரில் தினமும் ஏற்றிச் செல்கின்றனர். ஒரு நாளைக்கு 10 வண்டிகளில் 30 முறை திருடி விற்று வருகின்றனர். இதுபோல் அதிவேகத்தில் மணல் அள்ளப்படுவதால் அந்த இடமே இப்போது குளம்போல் மாறிவிட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பேரூராட்சி அதிகாரிகளே, இதற்கு உடந்தையாக இருப்பார்களோ? என பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். மேலும், மணல் அள்ளுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி உதவி : தினகரன்

Advertisements