அமெரிக்கா-பிரான்சை கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி திரைப்படம் வெளியிட்டதை கண்டித்தும், அதற்கு துணை போன அமெரிக்க அரசை கண்டித்தும், அதுபோல் நபிகள் நாயகம் பற்றி கேலி சித்திரம் வெளியிட்ட பிரான்சு நாட்டின் வார இதழை கண்டித்தும் புதுவையில் முஸ்லிம்கள் அமைப்புகள் சார்பில் இன்று சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜமா அத்துல் உலமாசபை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத், இஸ்லாமிய ஹிந்த், பாப்புலர் பிராண்டு ஆப் இந்தியா, புதுவை இஸ்லாமிய யூத் அசோசியேசன், இஸ்லாமிய வெல்பர் அசோசியேசன், சவுத் இண்டியன் இஸ்லாமிய கவுன்சில் ஆகிய 9 அமைப்புகள் கலந்து கொண்டன.

ஆர்ப்பாட்டத்தின்போது நபிகள் நாயகத்தை இழிவு படுத்திய அமெரிக்கா மற்றும் பிரான்சு அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், நபிகள் நாயகம் குறித்து கேலி சித்திரம் வெளியிட்ட வார இதழை பிரான்சு அரசு தடை செய்யக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் கலந்து கொள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு இருந்தனர். இதனால் பரபரப்பான நிலை நிலவியது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருக்கனூரில் முஸ்லிம்கள் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 50 மோட்டார் சைக்கிள், 2 பஸ், 2 வேன் ஆகியவற்றின் மூலம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisements