நாடற்றவர்கள்!


கவின் மலர்

‘I am from no where’ என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்தது உண்டா? எந்த நாட்டிலும் குடியுரிமை பெறாமல், ஒரு தேசிய இனமாகவும் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்படாமல் அநாதைகள்போல, அலைய நேர்ந்தது உண்டா? தற்போது, மியான்மரில் வாழும் (!) ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை இதுதான்.

 ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே, அதற்கு நிகரான இனப் படுகொலை நிகழ்ந்துவருகிறது மியான்மரில். பர்மா என்று முன்பு அழைக்கப்பட்ட இப்போதைய மியான்மரில் பௌத்தம்தான் பிரதான மதம். அங்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினர். அவர்களுக்குள் சமீப உள்நாட்டுக் கலவரம் காரணமாகக் கொல்லப்பட்டவர்கள், காணாமல்போனவர்களின் எண்ணிக்கை 20,000. இவ்வளவு பெரிய இனப் படுகொலைக்குப் பிறகும் உலகின் கவனம் மியான்மர் பக்கம் இன்னும் திரும்பவில்லை.

எதற்காக இந்தப் படுகொலைகள்? கடந்த ஜூன் மாதம் மியான்மரின் ராகின் மாகாணத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாகக் குற்றம்சாட்டி மூன்று முஸ்லிம்களைக் கைதுசெய்தது மியான்மர் அரசு. இதற்கிடையே, அந்தப் பெண்ணின் படுகொலைக்கு ரோஹிங் கியா முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இணையம் மூலம் அவர்களுக்கு எதிரான துவேஷம் விதைக்கப்பட்டது. சிறு பொறியாகத் தொடங்கி, முஸ்லிம்கள் மீதான வன்முறை நாடெங்கும் சீற்றமடையத் தொடங்கியது. அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இரு தரப்பிலும் உயிர்ச் சேதங் கள் இருந்தாலும், ஒருகட்டத்தில் ராகின் பௌத்தர்களின் கை ஓங்கியது. ஊரடங்கு உத்தரவுக்கு ராகின் வன்முறையாளர்கள் செவிசாய்க்கவில்லை. காவல் துறையும் ராணுவமும் அவர்களுக்கு உதவின. உள்நாட்டில் வாழ வழி இல்லாத முஸ்லிம்கள், உயிரைக் காத்துக்கொள்ளப் படகுகளில் வங்க தேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர். ஆனால், வங்க தேசமோ ஏற்கெனவே மூன்று லட்சம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் நாட்டில் இருப்பதால், மேற்கொண்டு அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறித் திருப்பி அனுப்பியது. திக்கற்று நடுக்கடலில் அலைந்து திரிந்தே பசியிலும் பட்டினியிலும் நோயுற்றும் பலர் இறந்தனர். படகுகளில் தப்பிச் செல்லும் அகதிகளைக் குறிவைத்து ஹெலிகாப்டர் மூலமும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கோரத் தாக்குதல்களைக் கண்டித்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மன் தலைநகர் பெர்லினிலும் பெருந்திரளான மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். மியான்மரில் உள்ள தனது ஊழியர்களை ஐ.நா. சபை திரும்ப அழைத்துக்கொண்டது. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது பார்வையாளர்களை மியான்மருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு அரசு, நிலைமையை நேரில் ஆய்வுசெய்ய மியான்மருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவை அனுப்பியது. பாகிஸ்தான் அதிபர் மியான்மர் அதிபருக்குத் தாக்குதல்களை நிறுத்தக் கோரி கடிதம் எழுதினார். இப்படி உலகம் முழுக்க அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் இந்த விவகாரத் தில், மியான்மரின் அண்டை நாடுகளான சீனா, இந்தியா இரண்டும் கனத்த மௌனம் காக்கின்றன. ஆச்சர்யமாக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் எதிர்க் கட்சித் தலைவர் ஆங் சாங் சூகியும் இதுகுறித்து மௌனம் சாதிக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமாவிடமும் மௌனமே பதிலாக இருக்கிறது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் எட்டு லட்சம் பேருக்குக் குடியுரிமை வழங்கவில்லை மியான்மர் அரசு. அவர்கள் திருமணம் செய்துகொள்ள ராணுவ உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக் கூடாது. மிகக் குறைவான ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும். நாட்டுக்குள்ளேயே ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு இடம்பெயர அரசின் அனுமதி வேண்டும். உயர்கல்வி வழங்கப்படுவது இல்லை. பாஸ்போர்ட் கிடையாது. ஏழு எட்டு வயது முதலே குழந்தைகள் தொழிலாளிகள் ஆக்கப்படுகிறார்கள். நாட்டின் மிக அபாயகரமான, மோசமான தொழில்களில் பணியாற்ற அவர்கள்  நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாலம் கட்டுவது, பாதைகளைச் சீரமைப்பது போன்ற பல கட்டுமானப் பணிகளிலும் இவர் களே குறைந்த கூலிகளில் அடிமைகள்போல வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன. ராணுவம் முஸ்லிம் பெண்களைப் பாலியல் வல்லாங்கு செய்வது வாடிக்கையாகிவிட்டது.  

இத்தனை அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டு இருக்கும் ஒரு சமூகம், இந்நேரம் பொங்கியெழுந்திருக்க வேண்டும். ஆனால், குர்துக்கள், பாலஸ்தீனியர்கள்போல அவர்களை வழிநடத்த ஒரு தலைவர் இல்லை என்பதால் அது நடக்கவில்லை  என்று அகதிகளுக்கான ஐ.நா. சபையின் ஹைகமிஷனர் கிட்டி மெக்கின்ஸி இவர்களைக் கூறுகிறார்.

வங்க தேசத்தில் அனுமதி மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படும் அகதிகள், நடுக்கடலில் படகுகளில் அமர்ந்து கதறியபடியே விண்ணை நோக்கி இரு கைகளையும் நீட்டி ‘அல்லாஹ்..! இந்த வேதனை வேண்டாம். நாங்கள் எங்கு செல்வோம்? எங்களை அழைத்துக்கொள்!’ என்று பிரார்த்திப்பதைப் பார்ப்பவர்களின் கல் மனமும் கரைந்துவிடும். அப்படியும் கரையாத மனங்களைக் கொண்டவர்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்!

Advertisements