தவறாக செயல்படுத்தப்படும் ஒரு சரியான திட்டம் !


கட்டுரை ஆக்கம்– அர்சத் மைதீன்

கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவல மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் வழங்கிய ஆழ்துணை கிணற்றில் நீர் மாசுபட்டதை தொடர்ந்து கடந்த ஒரு வருட காலமாக பர்கத் நகரில் உள்ள ஆழ்துணை கிணற்றில் இருந்து நீரை பேரூராட்சி அலுவல மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு உந்தி கோட்டக்குப்பம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பாட்டு வந்தது.

பர்கத் நகர் நீர் போதுமானதாக இல்லாததாலும், சுவையற்று இருப்பதாலும் சின்னகோட்டக்குப்பதில் ஆழ்துணை கிணறு அமைத்து, அந்த நீரை பேரூராட்சி அலுவலக மேல்நிலை தொட்டிக்கு அனுப்பி, அதை கோட்டக்குப்பத்தில் விநியோகிக்க முடிவு செய்தது பேரூராட்சி நிர்வாகம்.

இதன்படி, இரண்டு மாதங்களுக்கு முன் தலா ஒன்றரை லட்சம் (1,50,000) ருபாய் செலவில் இரண்டு ஆழ்துணை கிணறுகள் சின்னகோட்டக்குப்பதில் அமைக்கப்பட்டன. இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு முப்பது லட்சம் (30,50,000) பூமிக்கடியில் குழாய் அமைக்கும் பணி கடந்த மாதம் முடிவடைந்தது.

இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இரண்டு ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டாகளுக்குமே மின்சார வாரியத்தில் மின் இணைப்பு வாங்காமல், கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து சின்னகோட்டக்குப்பம் நீரை கோட்டக்குப்பம் மக்களுக்கு வழங்க முயற்சி செய்த போது, மின்சார வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து சட்டவிரோதமான இந்த (கொக்கி) மின் இணைப்பை துண்டித்து விட்டார்கள். இதனால், கடந்த வாரமே சின்னகோட்டக்குப்பம் நீரை கோட்டக்குப்பம் மக்களுக்கு வழங்க முடியாமல் தடை ஏற்பட்டது.

இதிலிருந்து பாடம் பெற்ற பேரூராட்சி நிர்வாகம் இப்போது, அந்த இரண்டு ஆழ்துளை கிணறு மின் மோட்டாகளுக்கும் அதிகாரபூர்வமாக மின் இணைப்பு கேட்டு மின்சார வாரியத்தில் விண்ணப்பித்துள்ளது.

10.06.2012 அன்று விண்ணப்பம் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், இரு மின் இணைப்புகளுக்கும் எவ்வளவு கட்டணத்தை பேரூராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் இன்னும் அறிவிக்காத நிலையில், மின்வாரிய அதிகாரிகள் ஒப்புதலோடு மீண்டும் அதிகாரபூர்வமற்ற முறையில் அந்த இரு மின் இணைப்புகளும் வழங்கப்பட்டு, சின்னகோட்டக்குப்பம் நீரை கோட்டக்குப்பம் மக்களுக்கு வழங்கி பெருமை தேடிக்கொண்டுள்ளது பேரூராட்சி நிர்வாகம்.

பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டியது ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியின் கட்டாய கடமை. ஏற்கனவே இருந்த ஆழ்துளை கிணறு பாழடைந்ததை தொடர்ந்து வேறு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்குகிறது நமது கோட்டக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம். இது ஒரு சாதாரண விஷயம், சின்னகோட்டக்குப்பத்தில் இருந்து நீர் எடுத்து அதை கோட்டக்குப்பத்திர்க்கு வழங்குவது மாபெரும் சாதனை என்பது போல் பொதுமக்களுக்களிடம் தேவையில்லாத பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சுத்தமான, சுகாதாரமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை யாரும் எதிர்கபோவதில்லை, எதிர்க்கவும் மாட்டார்கள். ஆனால், பேருராட்சியால், மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம் அறிவுபூர்வமாகவும், தொலைநோக்கு பார்வையிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

தலா ஒன்றரை லட்சம் (1,50,000) ருபாய் செலவில் சின்னகோட்டக்குப்பதில் போடப்பட்டுள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளும் 260 அடி ஆழம் கொண்டவை. நீரியல் வல்லுநர்களே, கிணறுகள் கண்டிப்பாக 500 அடிக்கும் மேல் போடப்பட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். 500 அடி ஆலதுக்குமேல் உள்ள நீரில்தான் உப்புத்தன்மையும், கிருமிகளும் மிக குறைவாக இருக்கும்.

நமது (புதுச்சேரியை ஒட்டிய) பகுதியை பொறுத்தவரை, 600 அடி ஆழத்திலிருந்து நீர் எடுத்தால் தான் உப்பு தன்மையற்ற ,கிருமிகளற்ற, சுத்தமான, சுகாதாரமாக குடிநீர் கிடைக்கும் என்கிறார்கள் புதுச்சேரி பொதுபணிதுரையை சேர்ந்த நீரியல் வல்லுநர்கள் .

இந்த திட்டத்தை பொறுத்தவரை, பூமிக்கடியில் 260 அடி ஆழத்திலுருந்து நீரை உந்தும் மோட்டார் அந்த நீரை மீண்டும் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு உந்தி சென்று அங்கிருந்து மேலும் 45 அடி உயரத்திற்கு (மேல்நிலை தொட்டிக்கு) உந்த வேண்டும்.இது அந்த மின் மோட்டாருக்கு கூடுதல் சுமையை கொடுக்கும்.இந்த கூடுதல் சுமையினால் இந்த இரு மோட்டார்களும் 40 முதல் 50 சதவீதம் வரை மின்சாரத்தை கூடுதலாக உறிஞ்சும்.மேலும், இந்த இரு மோட்டாரின் காயிலும் அடிகடி எரிந்து போகும்.

இதுமட்டுமில்லாமல் ,இந்த இரு ஆழ்துளை கிணற்றிலிருந்தும் நீர் வரும் (20HP மோட்டாரின் நான்கு அங்குல பைப்பையும், 15 HP மோட்டாரின் நான்கு அங்குல பைப்பையும்) இரு நான்கு அங்குல பைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரே ஆறு அங்குல பைப்பில் அனுப்பும் போது கூடுதல் அழுத்தத்தால் (over-pressure) மூன்று கிலோமீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் அடிகடி உடைப்பு ஏற்படும்.

10.06.2012 அன்று இந்த திட்டம் தொடக்கப்பட்ட முதல் நாளே பரகத் நகர் 12-வது கிராஸ் அருகே பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இப்படியே இந்த திட்டம் செயல்படுத்தபட்டால், மோட்டார் எரிந்து போவதும், குழாயில் உடைப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகலாம். சுமார் முப்பத்திமூறு இலட்சம் (33,00,000) ரூபாய் மக்கள் வரிபணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் தடையில்லாமல் செயல்படுத்த வேண்டும் என்றால் கோட்டகுப்பம் பேரூராட்சி செய்ய வேண்டியது…..

மூன்று கிலோமீட்டர் நீளம் நீரை குழாயில் நேரடியாக எடுத்து செல்லாமல் பரகத் நகர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கருகே ஒரு சமப்(கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி) கட்டி அதில் நீரை நிறைத்து, அங்கிருந்து மேலும் ஒரு மோட்டார் மூலம் பேரூராட்சி அலுவலக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு உந்தினால் குழாய் உடைப்பும், மோட்டார் எரிந்து போவதும் நேராது. இல்லை என்றால், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் அந்த இரு மோட்டாரில் ஒரு மோட்டாரின் காயில் எரிந்து போவதும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழாய் உடைப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.இதனால் பாதிக்கப்படுவது கோட்டகுப்பம் பொதுமக்கள் தான்.

குறிப்பு:-

1. பரகத் நகரில் ஒரு சம்ப் (கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி) கட்டும் போது எக்காரணம் கொண்டும் அங்குள்ள குட்டையில் கட்டக்கூடாது.நீர்நிலைகள் நீர்நிலைகலாகவே பராமரிக்கப்பட வேண்டும்.

2. சம்ப் (கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி) கட்டி இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சின்னகோட்டகுப்பதில் உள்ள இரு ஆழ்துளை கிணற்று மோட்டார்களையும் ஒரே நேரத்தில் இயக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு மோட்டாரை இயக்கினாலே போதும். ஒரு மோட்டார் இயங்கி சம்ப்பை நிறைக்க நிறைக்க சம்ப்பிலுள்ள மோட்டார் பேரூராட்சி மேல்நிலை தொட்டியை நிறைக்கும்.

3. எந்த திட்டத்தையும் குறை கூறுவது எங்கள் நோக்கம் கிடையாது. இந்த திட்டத்திலுள்ள நடைமுறை சிக்கல்களையும், தொழில்நுட்ப பிரச்சனைகளையும் மட்டுமே நாங்கள் சுட்டிக்காடியுள்ளோம். அதனால் தான் ‘தவறாக செயல்படுத்தப்படும் ஒரு சரியான திட்டம்’ என்று இந்த கட்டுரைக்கு தலைப்பு வைத்துள்ளோம்.

நன்றி – அல் ஜஸ்ராஹ்


Advertisements