இட ஒதுக்கீடு பெயரில் முஸ்லிம்களை ஏமாற்றும் இந்திய அரசு


 

 

 

 

 

சிறுபான்மையினருக்கு 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் முடிவை ஆந்திர உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று 2011-ம் ஆண்டில் வழிகாட்டு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பிற்படுத்துப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணய்யா தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய ஆந்திர உயர் நீதிமன்றம்,”மதத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.வேறு எந்த தெளிவான அம்சமும் பரிசீலிக்கப்படவில்லை.

மதச் சிறுபான்மையினர் அனைவரும் ஒரேவகையான இனக்குழுக்கள் என்பதாகவோ, அவர்கள் சிறப்புச் சலுகை தேவைப்படும் அளவுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதாகவோ நிரூபிக்கும் எந்தவிதமான ஆதாரத்தையும் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பிக்கவில்லை”என்று கூறி மத்திய அரசின் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் முடிவை நிராகரித்தது.

இந்நிலையில் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து,உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசுக்கு பின்னடைவல்ல என்று கூறிய அவர்,இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று மேலும் கூறினார். 

Advertisements